27.12.2020
பிலிப்புஸ் பால்டியூஸ் (Philippus Baldaeus) ஆவணங்கள் வழங்கும் கி.பி 17-ஆம் நூற்றாண்டு தூத்துக்குடி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள். (The 17th century Historical References to Thoothukudi by Fr.Philippus Baldaeus).
Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 9, n. 2, p. 11-23, dec. 2020. ISSN 2636-946X.
சுருக்கம் (Abstract)
தமிழகத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை அறிந்து கொள்ள ஐரோப்பியர்களின் ஆவணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களின் ஆவணங்கள் எனும் போது பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களிலும் அதற்கு அடுத்த நிலையில் ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு டச்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள் அல்லது டேனிஷர்கள் போன்றவர்களின் ஆவணங்களை ஆய்வுக்குட் படுத்துவது மிகக் குறைவு.
இந்தக் கட்டுரை அந்தக் குறையைச் சுட்டிக் காட்டி கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து அங்கு சில ஆண்டுகள் தங்கி இருந்து, பின்னர் தமிழகம் வந்து அங்கு டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராகப் பணிபுரிந்த பாதிரியார் பிலிப்புஸ் பால்டியுஸ் எழுதி வைத்த ஆவணங்களையும் அவர் உருவாக்கிய வரைபடங்களையும் அறிமுகப் படுத்துகின்றது.
பாதிரியார் பால்டியுஸ் அவர்களது ஆவணங்கள் தமிழகத்தில் தூத்துக்குடி பகுதியில் நிலவிய வணிக நிலவரங்களையும்; டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடுகளையும்; அருகாமைப் பகுதிகளான இராமேஸ்வரம் பற்றிய செய்திகளையும்; அந்தக் காலத்தில் நிலவிய போர்த்துக்கீசியர்களுடனான சவால்கள் நிறைந்த வணிக முயற்சிகளைப் பற்றியும் விவரிக்கின்றன.
பாதிரியார் பால்டியூஸ் அவர்கள் நிலவரைப்பட தயாரிப்புகளில் தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு உள்ளார். அதன் வழி இன்று தமிழக வரலாற்றில் குறிப்பிட்ட சில செய்திகளை இவரின் வரைபடங்களின் வழியாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த ஆய்வுக் கட்டுரை, தமிழக வரலாற்றின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்வோர் டச்சுக்காரர்கள் உருவாக்கிய ஆவணங்களையும் வரைபடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது.
தூத்துக்குடி வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய கட்டுரை இந்தத் தளத்தில் உள்ளது.
https://tamilperaivu.um.edu.my/article/view/25914
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்
மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்விதழ் துறையின் அதிகாரப்பூர்வ ஆய்விதழ் ஆகும். இது சக ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்படும் பல்துறை ஆய்விதழாகும். இவ்வாய்விதழ் தமிழில் எழுதப்படும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதற்கும், வெளியீடு செய்வதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அமைக்கப்பட்ட களமாகும்.
தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், உங்கள் ஆய்வை மதிக்கிறது. எனவே துரித நடவடிக்கைகளின் மூலம் உங்கள் ஆய்வை கூடிய மட்டில் விரைந்து சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இவ்வாய்விதழ் இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பட்ட கட்டுரைப் பிரதிகளை இங்கு மறுவெளியீடு செய்வதை தடைசெய்கிறது. இந்த ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியீடு காண்கிறது.
இவ்வாய்விதழ் ஆண்டு தோரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகின்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் அவர்களின் சிந்தனையில் உதித்த இந்த ஆய்விதழுக்கு அவரே தலைமைப் பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
------
Jeyashree Kannan: அரும் பெரும் முயற்சி - ஆவணங்கள் பயன்படுத்துவதில் குறை - அனைத்தும் பயன்படுத்தப் பட்டால் நம் பெருமை வணிகம் முதல் வரலாறு வரை அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் - உன்னதமான முயற்சி - உத்வேகத்திற்குப் பாராட்டுக்கள்.

Dr.Subashini Kanagasundaram
Tamil Heritage Foundation.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக