27.12.2020
தமிழ்ப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க என்ன செய்யலாம்?
நீலப் பெருங்கடல் வியூகம்
இந்திய மாணவர்கள் எனும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தமிழ்ப் பள்ளிகளுடன் இன்று போட்டிக்கு நிற்பவை மலாய்ப் பள்ளிகளும் சீனப் பள்ளிகளும் தான்.
2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 67000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளிகளிலும்; 14,000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் சீனப் பள்ளிகளிலும் படிக்கின்றார்கள். அதாவது ஏறக்குறைய 81000 மாணவர்கள்.
இவர்களைத் தமிழ்ப்பள்ளி பக்கம் இழுக்க எத்தனையோ முயற்சிகள் செய்தும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. எந்த உத்தியும் எடுபட மாட்டாமல் போய் விட்டது.
இருமொழிப் பாடத் திட்டம் (DLP) உள்ள தமிழ்ப் பள்ளிகள் மட்டும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதில் வெற்றிக் கண்டு உள்ளன என்று தகவல் வருகிறது.
டி.எல்.பி பள்ளிகளும் டி.எல்.பி இல்லாத தமிழ்ப் பள்ளிகளும் மாணவர்களுக்காகப் போடும் போட்டியையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ்ப் பள்ளிக்கான நிரந்தர வாடிக்கையாளர்கள் என்று ஒரு தரப்பு இருக்கிறது. வெளியில் இருந்து வேடிக்கைப் பார்க்கும் தரப்பு. இந்த வேடிக்கைப் பார்க்கும் தரப்பு பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன.
இவர்களை இழுத்துக் கொண்டு வந்து தமிழ்ப் பள்ளிகள் பக்கம் சேர்க்கும் மாற்று வழிகளை ஆராயும் ஒரு நீலப் பெருங்கடல் வியூகச் சிந்தனையே இது.
#நீலப் பெருங்கடல் வியூகம் வழங்கும் ஆறு வழிகளில் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பொருத்தமான ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
வழி 1: வியூகக் குழுக்கள் (Strategic Groups)
தமிழ்ப் பள்ளிகளால் வழங்க முடியாத மதிப்பை, கெளரவத்தை, எதிர்கால வாய்ப்புகளைத் தேசியப் பள்ளிகள் வழங்கிவிடும் என்று நம்பும் நம் இன மேட்டுக்குடி மக்கள் தமிழ்ப் பள்ளிகளைப் புறக்கணித்து வருகின்றனர்.
ஏழைகள், குண்டர் கும்பல் கலாச்சாரம் இன்னும் சமூகச் சீர்கேடுகள் நிறைந்த பள்ளிகளாகத் தமிழ்ப் பள்ளிகளைப் பார்க்கும் பார்வை உள்ளவர்கள் தமிழ்ப் பள்ளிகளை மறுக்கின்றனர்.
அவர்கள் நாடுவது கெளரவம், தரம், மதிப்பு, மரியாதை போன்றவையாகும். அதற்குத் துணையாக அவர்கள் விரும்புவது ஆங்கிலம்.
எனவே, தமிழ்ப் பள்ளிகளுக்கான எதிர்கால வாடிக்கையாளர்கள் இரு குழுக்களாக பிரிகின்றனர். ஒன்று - தரம் ஆங்கிலம் வழியாக வருகிறது என நம்பும் ஆங்கில விரும்பிகள்; மற்றொன்று - எந்த விதியையையும் விதிக்காத வாடிக்கையாளர்கள்.
ஸ்டார்பக்ஸ் (Starbucks) காப்பிக் கடையையும் மாமாக் கடையையும் (Mamak) ஓர் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம். இரண்டிலுமே காப்பி விற்கப் படுகிறது. ஆனால் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவையும் எதிர்ப்பார்ப்பும் வெவ்வேறாக உள்ளன.
என் நண்பர் முனைவர் பட்டம் பெற்று உயர்ப் பதவியில் இருப்பவர். அவர் தன் மகளை காஜாங் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க ஆவல். ஆனால் டி.எல்.பி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று விதியையும் இணைத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தாயார் என்னைத் தொலைப்பேசியில் அழைத்து இவ்வாறு சொன்னார்:
"என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் பதிய விருப்பம் இல்லை. ஆனால் அறிவியல் கணிதம் இரண்டையும் ஆங்கிலத்தில் படித்துக் கொடுப்பதில் தமிழ்ப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. அதனால்தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நான் என் பிள்ளையைத் தமிழ்ப் பள்ளியில் சேர்த்தேன். அதனால் என் மகனுக்கு டி.எல்.பி வகுப்பில் இடம் வேண்டும்".
எனவே சிறப்புத் தமிழ்ப் பள்ளிகளை (Elite Schools) உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். இங்கே படிப்பதற்கு ஆங்கில மொழியில் முன்னறிவும், மலாய் மொழியில் முன்னறிவும் பெற்று இருக்க வேண்டும்.
இவை அரசாங்கம் நடத்தும் Sekolah Permata (for gifted children) போன்று இருக்கும். ஆனால் சில நெகிழ்வுத் தன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆங்கிலத்தில் படிக்க இங்கே அனுமதி உண்டு.
கெட்டிக்கார மாணவர்களுக்கான பாடத் திட்டத்தைக் கொண்டு இருக்க வேண்டும். உலகத் தரம் வாய்ந்த தேர்வுகளை (IGCSE) எழுதும் வாய்ப்பை வழங்க பெற்றோர்களின் கடப்பாட்டைக் கோரலாம்.
பணக்காரர்கள், மெத்த படித்த பெற்றோர்கள், வசதியானவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு படிக்க வைக்க அனுப்பலாம். ஒரு நகரில் குறைந்தது ஒரு பள்ளி என இருக்கலாம். கூடுதலாக இங்கு பல்வேறு கல்வி வாய்ப்புகள்/ திட்டங்கள், பன்மொழிகள் கற்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.
இந்தத் திட்டம் சமூகத்தின் மேட்டுக் குடிகளைத் தமிழ்க் கல்விப் பக்கம் கொஞ்சம் திருப்பும்.
இது ஒரு கருத்தாடல் மட்டுமே. உடன்பாடு இல்லாதவர்கள் தாராளமாகக் கருத்தில் மாறுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக