30.12.2020
நாடறிந்த சொற்பொழிவாளர். தூயத் தமிழில் பேசும் ஆற்றல். சமயப் பற்றாளர். முருக பக்தர். இவர் ஈப்போவில் ஒரு மகப்பேறு மருத்துவர். இருந்தாலும் சைவ உணவாளர். புலால் மறுப்பாளர்.
ஆனால் ஒவ்வொரு நாளும் இரத்தம் சதையோடு பழக வேண்டிய தொழில். எப்படிங்க டாக்டர் என்று கேட்டால் அது அப்படித்தாங்க என்பார்.
இனிய தோழர். அண்மையில் அவரைச் சந்தித்தேன். கோவிட் காலம். இருப்பினும் இருவரும் லிட்டல் இந்தியாவில் புதிதாகத் திறந்த சைவ உணவகத்திற்குச் சென்றோம். மசாலா காபி; மசாலா தோசைகள்.
அன்புடன் பழகும் இயல்பு. மேடைப் பேச்சாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதற்கு அவரின் சொல்லாற்றல் ஒரு காரணம்.
பல்வேறு தமிழ்ப் பற்றாளர்களைச் சந்தித்து உள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்கு உரியவர்கள். இருப்பினும் டாக்டர் ஜெயபாலன் தனித்து நிற்கின்றார். இந்து சமயம்; முருகர் வரலாறு; அருணகிரிநாதர் வரலாறுகளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.
2019 நவம்பர் மாதம். ஈப்போ அருணகிரிநாதர் மன்றத்தினரின் காவடிச் சிந்து இசைக் கச்சேரி நிகழ்ச்சி. அதில் காவடி என்பதற்கான அவரின் சொல் விளக்கம் அரங்கத்தில் கூடிய பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. இவர் அந்த மன்றத்தின் தலைவரும் ஆவார்.
கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. காவடி என்பது முருக பக்தர்கள், முருகப் பெருமானுக்குச் செலுத்தும் நேர்த்திக் கடன் என்று காவடிக்குச் சிறப்பாக விளக்கம் அளித்தார்.
பல பன்னாட்டுக் கருத்தரங்குகள்; ஆய்வரங்குகளில் கலந்து உள்ளார். இவரை நினைக்கும் பொழுது எல்லாம் தமிழ் வடிவமும்; தமிழ்ப் பற்றும் நினைவுக்கு வரும். இவரின் தமிழ்ப் பற்றைப் போற்றி மதிக்கிறோம். டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் நம் மலேசியம் புலனத்தில் நீண்ட கால அன்பர். வாழ்த்துகிறோம்.
(மலேசியம்)
30.12.2020
டாக்டர் ஜெயபாலன்: நன்றி முத்தண்ணா .... அன்பினால் கொஞ்சம் அதிகம் புகழ்ந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் .இந்தப் பெருமைகளுக்கு உகந்தவனாக்க முருகப்பெருமான் அருள வேண்டும் 🙏