03 ஜனவரி 2021

எழுத்தாழுமைகளில் புதிய பரிமாணம் - குமரன் மாரிமுத்து

30.12.2020

புலனத்தில் வாசகப் பயணிகள் பதிவு செய்யும் கருத்துக்களை அவ்வப்போது தாங்கள் எழுதிவரும் கட்டுரையோடு இணைத்து நாளிதழில் வெளியிட்டால் புதிய எழுத்தாழுமைகள் பரிணமிக்க வாய்ப்புகள் அதிகம் என்று நான் கருதுகிறேன்.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால் மேலும் தரமான கருத்துகளும் படைப்புகளும் புலனத்தில் மிளிரும். சின்ன சின்ன கருத்துக்களை எழுதுபவர்கள் நாளடைவில் சிறந்த எழுத்தாளர்களாக உருவாக இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

இது உங்களுக்குப் புதிய முயற்சி அல்ல. 1983/84 காம் ஆண்டுகளில் உங்கள் வகுப்பில் படித்த எங்களை பிய்த்து எடுத்து, எழுதச் சொல்லி தமிழ் நேசன் மாணவர் அரங்கத்தில் எங்கள் எழுத்துப் படிவங்களை வெளியிட்டு எங்கள் எழுத்துகளுக்கு அங்கீகாரம் கொடுத்தீர்கள். இன்று சிலர் நீங்கள் காட்டிய எழுத்து உலகில்....

அனுபவத்தின் அடிப்படையிலும் என் தமிழாசிரியர் என்ற உரிமையிலும் இந்த பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்... ஆரம்பிக்கலாமா ஐயா?

முத்துக்கிருஷ்ணன்: கட்டுரை வடிவாக்கத்தில் ஒரு புதிய திருப்பமாகக் கொள்ளலாம். நவீன தொழில்நுட்பப் பெரு வளர்ச்சியில் ஊடகங்கள் அபரிதமான மாற்றங்களைக் கண்டு வருகின்றன. அந்த மாற்றங்களின் வழி எதிர்கால எழுத்தாழுமைகளில் புது மாற்றங்களையும் கொண்டு வரலாம் என்பது என் கருத்து.

வாட்ஸ் அப் புலனப் பயணிகள் பதிவு செய்யும் கருத்துக்களைக் கட்டுரையோடு இணைப்பதும்; அந்தக் கருத்துகளை நாளிதழ்களில் வெளியிடச் செய்வதும் ஒரு புதிய பரிமாணமாகவும் கொள்ளலாம்.

வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவாகும் மணி மணியான கருத்துகள் ஓரிரு நாட்களில் இடம் தெரியாமல் கரைந்து போய் விடுகின்றன. அந்த மாதிரியான முத்து மணிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காகத் தான் மலேசியம் வலைத் தளம் உருவாக்கப் பட்டது.

புலனத்தில் பதிவாகும் நல்ல நல்ல கருத்துகள் நிலைக்க வேண்டும். மரித்துப் போய்விடக் கூடாது. இணையத்தில் காலா காலத்திற்கும் உயிர்வாழ வேண்டும். அந்த வகையில் எவரும் செய்யாத ஒன்றை நாம் செய்து வருகிறோம்.

ஆனால் அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுகளும் வேண்டும். இதே ஊடகப் பரிமாற்ற அணுகுமுறையை மற்ற மற்ற புலனங்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

தம்பி குமரன் மாரிமுத்து... உங்களுக்கு 1981 - 1983-ஆம் ஆண்டுகளில் கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுத்தேன். 1984-ஆம் ஆண்டு சிப்பாங் தெலுக் மெர்பாவ் பள்ளிக்கு மாறி விட்டேன்.

பாடத் திட்டத்தில் இல்லாத தமிழ்க் கையெழுத்துப் பாடம்; பத்திரிகைகளுக்குக் கதை எழுதுவது போன்ற திட்டங்களை; நான் பணியாற்றிய பள்ளிகளில் நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். ஓரளவுக்கு நல்ல மணி மணியான தமிழ் மாணவர்களையும்; எழுத்தாளர்களையும்; சமூகத் தலைவர்களையும்; கல்வியாளர்களையும் உருவாக்கிய மனநிறைவு உள்ளது.

தவிர கையெழுத்துப் பாடத்தில் நீங்களும் என்னிடம் அடி வாங்கி இருக்கிறீர்கள். நினைத்துப் பார்க்கிறேன். உங்களுடைய அந்த அழகு அழகான எழுத்துகள் இன்னும் எனக்குள் ஊர்ந்து செல்கின்றன. உங்களின் பதிவு ஓர் ஆசிரியருக்குக் கிடைத்த வெகுமதி. நன்றிங்க தம்பி.

ஆசிரியராக இருந்த போது உங்களை மிரட்டி இருக்கலாம். இப்போது அப்படி எல்லாம் செய்ய முடியாது. தோளுக்கு மேல் வளர்ந்து ஒரு குடும்பத்திற்குத் தலைவராக விளங்குகிறீர்கள். மரியாதை முக்கியம் அல்லவா. ஆனாலும்... ஆயிரம் இருந்தாலும்... குமரன் மாரிமுத்து என்பவர் நான் ரசித்த ஓர் அழகிய மாணவர். அவருடைய எழுத்துகளில் ஈர்க்கப்பட்ட ஓர் ஆசிரியன்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக