03 ஜனவரி 2021

தமிழ்ப்பள்ளியில் படிச்சிட்டு போகலாம் - பி.கே. குமார்

30.12.2020

என்னமோ இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் தரத்தில் உள்ளத் தேசியப்பள்ளி, சீனப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பினால் எதிர்காலம் சூரியன் அளவுக்கு பிரகாசிக்கும் என்ற கனவில் இருக்கும் என் இனிய மலேசிய இந்திய மக்களே...

அப்படி ஒன்றும் இருக்காது என்பதைக் கண் திறந்து படித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றால் புத்தாக்கமும் புதிய ஆற்றலும் தேவை என்கிறது காலக் கணிப்பு.

இப்பொழுதே புதிய டாக்டர்களுக்கு வேலை இல்லை. எஞ்சினியர் தம்பிகள் வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் ஆசிரியராகி விட்டனர். தொடக்கச் சம்பளம் இவர்களுக்கு மற்றப் படிப்பு படித்த ஆசிரியர்களை விடவும் சற்றுக் கூடுதல் என்பது கூடுதல் தகவல். கணக்காயர்கள் கதியும் அதே கதி.

வழக்குரைஞர் நிறுவனங்கள் பல நொடித்துக் கொண்டு இருக்கின்றன. கணினியும் இணையமும் செயற்கை நுண்ணறிவும் (artificial intelligence) நான்காம் தொழில்நுட்பப் புரட்சியை (IR4) கிளப்பி விட்டுவிட்டன. புதிய உலகத்திற்கு புதிய அறிவுக் கலைகளும் ஆற்றல்களும் தேவைப் படுகின்றன.

இனி ஆங்கிலம் படிக்காமல் ஒரு திறன்பேசியை வைத்துக் கொண்டே நீங்கள் எந்த மொழியில் உள்ளதையும் படிக்கலாம். கேட்டுப் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட வசதி கொண்ட வரும்காலம் வெகு தொலைவில் இல்லை. கோறணியின் கோரம் (கோவிட் 19) சில சிக்கல்களைத் தோற்றுவித்து இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கான தேவையை அதிகரித்து உள்ளது.

இனி புத்தாக்கம் ஆங்கில மொழியால் மட்டும் வருவது அல்ல. புத்தாக்கம் ஒரு சிறப்பு சிந்தனை உத்தி. மனித மூளையின் அறைகளில் சிந்தனைச் சட்டியில்   சமைக்கப்படும் அறிவு. திறமை இருந்தால் அது எந்த மொழியிலும் வரும்.

நல்ல வேளை. நாம் தமிழ்ப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தோம். தமிழையும் காப்பாற்றிக் கொண்டோம்.

என்ன படித்து என்ன செய்ய... வேலை கிடைக்காமல் இருப்பதற்கும் அடிமை வேலை செய்வதற்கும் தொடக்கக் கல்வி எதில் இருந்தால் என்ன?

அதற்குத் தமிழ்ப்பள்ளியில் படித்துவிட்டு இடைநிலைப் பள்ளிக்குப் போகலாம். அறிவு இருந்தால் எப்படியும் முன்னுக்கு வரலாம்.

- குமரன் வேலு



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக