06 ஜனவரி 2021

உடுமலை நாராயணகவியார் இறுதி ஆவணம் - கென்னடி ஆறுமுகம்

06.01.2021

புகழின் உச்சியில் இருந்த போதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் உடுமலை நாராயணகவியார். அவர் தம் 82-ஆம் அகவையில் உயிர் துறந்தார். அவர் தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து உள்ளார்.

அந்த ஆவணத்தில், ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டு இருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவு அடைகிறது, குறைகிறது.


என்னைப் பொறுத்த மட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்!

வேறு எந்தவகையான சடங்குகளும் தேவை இல்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்ய வேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்!

உணவிலே எளிமை, உடையிலே எளிமை கல்வியிலே மேன்மை இது போதுமானது. இது தவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.

இந்த வீண் பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத் துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன்.

காலம் கடந்து விட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்து இருக்கிறேன். அதைக் கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது.

ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’’ என்று எழுதி வைத்துள்ளார்.

 

வான்மித்தா ஆதிமூலம் - நாசா விண்வெளி ஆராய்ச்சி

04.01.2021

உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் – வான்மித்தா ஆதிமூலம்


2000 ஏப்ரல் 9-ஆம் தேதி ஈப்போவில், ஆதிமூலம் - ஜெயந்தி தம்பதியருக்கு இளைய மகளாகப் பிறந்தவர். கிள்ளானில் வளர்ந்தவர். இப்போது நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார் வான்மித்தா ஆதிமூலம்.

நாசாவின் ஓர் ஆய்வுக் கிளை அமைப்பு ADVANVINGX. இந்த அமைப்பு உலகளாவிய நிலையில் வானவியல் ஆய்வுப் போட்டியை நடத்தி வருகிறது. அந்தப் போட்டியில் வான்மித்தா ஆதிமூலம் தகுதி பெற்று உள்ளார்.

வான்மித்தா ஆதிமூலம், தம்முடைய 20-வது அகவையில் வானளவு சாதனைப் புரியும் மலேசியராகத் திகழ்கிறார். இது நாள் வரையில் இவரை அறிந்திராத சமூகம் இன்று போற்றிப் புகழ்கின்றது. யார் இவர்?

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வி; மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் இடைநிலைக் கல்வி. தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் மாணவி.

வான்மித்தா ஆதிமூலம் இப்போது மலேசியர்கள் மெச்சும் மங்கை. இவரைப் பற்றிய குறிப்புகள் சமூக வலைத் தளங்களிலும்; நாளிதழ்களிலும் பரவலாகி வருவதை நாம் பார்க்கிறோம். வியக்கிறோம். வாழ்த்துகிறோம். அவரைப் பற்றிய சில குறிப்புகள.

வான்மித்தாவின் பெற்றோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இயல்பான குடும்பத்தினர்.

2007-ஆம் ஆண்டில், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 6ஏ - 1பி பெற்றார். 2015-ஆம் ஆண்டில் படிவம் மூன்றின் ‘பிடி 3’ தேர்வில் 9ஏ பெற்று அசத்தினார்.

அது மட்டும் அல்ல. 2017--ஆம் ஆண்டில் படிவம் ஐந்தின் எஸ்.பி.எம். தேர்வில் 10ஏ பெற்றார். 2018-ஆம் ஆண்டு கிளாந்தான் மெட்ரிகுலேசன் அரசு பல்கலைக்கழக நுழைவு கல்லூரியில் பயிலத் தேர்வானார்.

இவர் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்தார். இரு பாடங்களிலும் 'ஏ’ தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி.

பள்ளிப் பருவங்களில், தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியாளர்; தமிழ்ப் பேச்சுப் போட்டியாளர்; பற்பல போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளார். தற்போது தேசிய அளவிலான செயற்கைக் கோள் ஆய்வு போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்று உள்ளார்.

இவருடைய பெற்றோர், அண்ணன் புவனேஸ்வரன்; அண்ணி போஷாயித்திரி;  அண்ணன் சத்ய பிரபாகரன் ஆகியோர் தூண்டுதலும் ஊக்கமும் அளித்தனர். அவரின்  இந்த நிலைக்கு அவர்கள் பெரும் உந்துதலாக இருந்ததாக வான்மித்தா தெரிவித்தார்.

அவருடன் ஒரு சின்ன கலந்துரையாடல்:

தங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு, மாணவராக தாங்கள் வலியுறுத்துவது என்ன?

வான்மித்தா : உங்களுக்கு என நீங்கள் நிலைநிறுத்தி இருக்கும் வாழ்வியலில், மனது அளவில் மிக உறுதியாகவும் திடமாகவும் இருங்கள். நீங்கள் கொண்டு இருக்கும் கொள்கையில் சற்றும் தளரக் கூடாது. துணிவாக முன்னேறுங்கள்.

‘என்னால் முடியாது’ என நீங்கள் நினைக்கும் போது, தொடங்கிய போது இருந்த மன வலிமையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

மலேசியத் தமிழரான நீங்கள் நம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வான்மித்தா : நம் சமூகத்தின் பெரும் வெற்றிக்குத் தொடக்கம் தமிழ்ப் பள்ளிகள்தான். உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். வான் அளவில் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்துக் கொடுங்கள். நான் பயிலும் வானவியல் பொறியியல் துறையில், உங்கள் பிள்ளைகளும் பயில வழிகள் நிறைய உள்ளன. அனுப்புங்கள். நான் வழிக்காட்டியாக என்றென்றும் இருப்பேன்.

வானத்திற்கு எல்லை என்பது இல்லை. அது போல நம் குறிக்கோளுக்கும் எல்லைகள் இல்லை.
 

மலாயா தமிழர்களுக்குச் சேவை செய்யும் குமணன் கணேசன்

05.02.2021

மலேசியாவில் கல்வித் துறையில் எல்லோருக்கும் மிக அறிமுகமான கல்வியாளர் குமணன் கணேசன். இவர் கெடா, சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்தவர். யூ.பி.எஸ்.ஆர். ஆங்கிலப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

கடந்த 20 ஆண்டுகளாக ‘தி எடுகேட்டர்” (THE EDUCATOR) எனும் கல்வி இதழ் வழி, மலேசியத் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் புலமைப் பெறவும், தேர்வில் சிறப்பான புள்ளிகளைப் பெறவும் வழிகாட்டியாக இயங்கி வருகின்றார்.

மலேசியத் தமிழ் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் நோக்கத்தில் ஒரு வலையொளியை உருவாக்கி சிறப்பாகச் செயலற்றி வருகிறார். கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பயிற்றுத் துணைப் பொருள்களையும் உருவாக்கி ஒளியேற்றி வருகிறார்.

அதோடு நாடு முழுமையிலும் நேரடியாகச் சென்று இலவசமாக தமிழ்ப் பயிற்சிப் பட்டறை, வழிகாட்டி கருத்தரங்கு போன்றவற்றை தனி நபராகவும், தனியார் மற்றும் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து வழங்கி வருகிறார். வாழ்த்துகிறோம்.


05 ஜனவரி 2021

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவி சாய்நித்திரா சுரேன்

05.01.2021

பினாங்கு மாநிலத்தில் அனைத்து மொழிப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கு பெறும் ஆங்கில மொழிக் கட்டுரைப் போட்டி; 2020 டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சாய்நித்திரா சுரேன்; மநில அளவில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இந்தப் போட்டி மாநில அளவில் நடைபெற்ற போட்டியாகும். மலாய்; சீனப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பல நூறு பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இருப்பினும் ஒரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வெற்றி பெற்றது பெருமைக்குரிய செய்தியாகும்.

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் மற்ற மொழிப் பள்ளிகளுக்குச் சவால் விடும் அளவில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். தமிழ்ப்பள்ளிகள் நீடு வாழ வேண்டும்.

Sainetra Shri a/p Surein SJKT MAK MANDIN  மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி

2nd Place (Naib Johan) and get Rm200.

Pertandingan  Menulis Esei Bahasa Inggeris (Sekolah Rendah)

Program Jaguh Bahasa 2020 Peringkat Negeri Pulau Pinang secara dalam talian.

மலேசியம் புலனத்தின் மற்றும் ஒரு தமிழ்த் தகவல்

நல் வாழ்த்துக்கள்... வெற்றிகள் தொடரட்டும் மகளே!





கட்டுரை மன்னன் - ம.அ. சந்திரன், பாடாங் செராய்

05.01.2021

தமிழ் மலர் 03.01.2021 நாளிதழ் ஞாயிறு மலரில் மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன் அவர்கள் எழுதிய கவிதை.

என்றைக்கோ நடந்துவிட்ட வரலாற் றைத்தான்
    இன்றைக்குக் கண்முன்னே காட்சி போலக்
கொண்டுவரும் திறன்எழுது கோலை பெற்று
    கூர்தமிழுக்குக் குப்பெருமை சேர்க்கும் அண்ணா
வண்ணவண்ன சொல்லாட்சி மூலம் நீங்கள்
    வழங்குகிற அறிவலைகள் நெஞ்சா ழிக்குள்
எழுந்தாட்டம் போடுதண்ணா இசைகள் மீட்டி

கட்டுரையை நகைச்சுவையாய் நகர்த்தும் உங்கள்
    கலைகண்டு வாய்சிரிக்கும் களுக்கென் றேதான்!
குத்தூசி களைநிரம்பச் சொல்லில் சேர்த்துக்
    குத்துகிற பாங்குமிக அருமையண்ணா!
பற்றுமொழி மேல்வைத்தே ஏட்டில் நீங்கள்
    பதிவுசெய்யும் கட்டுரைகள் விழிப்பு ணர்வை
கற்பவர்கள் உள்ளத்தில் ஏற்ப டுத்தி
    கம்பீர நடையிங்கே போடு தண்ணா!

கட்டுரைகள் ஆயிரத்து கும்மேல் செய்யும்
    கரம்பெற்றாய் சாதனையும் அதிலே கண்டாய்!
கட்டுரையை இன்றிங்கே படைத்து விட்டால்
    கரகாட்டம் கண்டபடி போடு கின்றார்!
பத்திரிகை தனைவிரித்தால் உங்கள் பக்கம்
    பார்த்தகணம் மனத்திலுற் சாகம் தாவும்!
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் நீங்கள் கொண்ட
    தமிழ்ப்பற்றைக் கண்டுதமிழ்த்தாய் செருக்க டைவாள்!

தமிழுக்குத் தொண்டுசெய்தார் பெருமை என்றும்
    தமிழர்வா னில்கதிர்போல் நிலைத்து நிற்கும்!
அமிழ்தான செம்மொழியை உயிர்மூச் சாக
    அகத்தினிலே ஏற்றுலவும் அண்ணா வாழ்க!
இமைமணிபோல் செந்தமிழை பாது காக்கும்
    இதயத்தைப் பெற்ற உங்கள் எழுத்தே ஊக்கம்!
சுமையாக எண்ணாமல் மொழியைத் தூக்கி
    சுகிக்கும்நீர் கட்டுரைக்கு மன்னன் தானே!

கரு.ராஜா: கொட்டு வாங்கினாலும் மோதிர விரல்களில் கொட்டு வாங்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த நாட்டின் புகழ்ப் பெற்ற ஒரு மரபுக் கவிஞனின் பாராட்டுக் கவிதையைப் படித்த போது மெய் சிலிர்த்துப் போனேன்.

சாகுல் ஹமீது: மரபுக் கவிஞனின் மணிக்கவிதை... இடைச் செருகல்... நகைச்சுவை... படிப்பதற்கு ஆர்வமூட்டும்... எடுத்துக் காட்டும் உண்மைகள்... குத்தூசி போல் தீட்டும்...  வாழ்த்துகள் ஐயா!

=====

புனைப் பெயர்: ம.அ. சந்திரன்
பணி: வியாபாரம்
நூல்கள்: சிந்தனைச் செல்வம் (கவிதைத் தொகுப்பு)
1973-ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். பெரிதும் கவிதைகளும் கட்டுரைகளுமே எழுதி வருகிறார். மலேசியத் திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவர்.