06 ஜனவரி 2021

வான்மித்தா ஆதிமூலம் - நாசா விண்வெளி ஆராய்ச்சி

04.01.2021

உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் – வான்மித்தா ஆதிமூலம்


2000 ஏப்ரல் 9-ஆம் தேதி ஈப்போவில், ஆதிமூலம் - ஜெயந்தி தம்பதியருக்கு இளைய மகளாகப் பிறந்தவர். கிள்ளானில் வளர்ந்தவர். இப்போது நாசாவில் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தகுதி பெறுகிறார் வான்மித்தா ஆதிமூலம்.

நாசாவின் ஓர் ஆய்வுக் கிளை அமைப்பு ADVANVINGX. இந்த அமைப்பு உலகளாவிய நிலையில் வானவியல் ஆய்வுப் போட்டியை நடத்தி வருகிறது. அந்தப் போட்டியில் வான்மித்தா ஆதிமூலம் தகுதி பெற்று உள்ளார்.

வான்மித்தா ஆதிமூலம், தம்முடைய 20-வது அகவையில் வானளவு சாதனைப் புரியும் மலேசியராகத் திகழ்கிறார். இது நாள் வரையில் இவரை அறிந்திராத சமூகம் இன்று போற்றிப் புகழ்கின்றது. யார் இவர்?

சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வி; மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் இடைநிலைக் கல்வி. தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் மாணவி.

வான்மித்தா ஆதிமூலம் இப்போது மலேசியர்கள் மெச்சும் மங்கை. இவரைப் பற்றிய குறிப்புகள் சமூக வலைத் தளங்களிலும்; நாளிதழ்களிலும் பரவலாகி வருவதை நாம் பார்க்கிறோம். வியக்கிறோம். வாழ்த்துகிறோம். அவரைப் பற்றிய சில குறிப்புகள.

வான்மித்தாவின் பெற்றோர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். இயல்பான குடும்பத்தினர்.

2007-ஆம் ஆண்டில், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கினார். யு.பி.எஸ்.ஆர். தேர்வில் 6ஏ - 1பி பெற்றார். 2015-ஆம் ஆண்டில் படிவம் மூன்றின் ‘பிடி 3’ தேர்வில் 9ஏ பெற்று அசத்தினார்.

அது மட்டும் அல்ல. 2017--ஆம் ஆண்டில் படிவம் ஐந்தின் எஸ்.பி.எம். தேர்வில் 10ஏ பெற்றார். 2018-ஆம் ஆண்டு கிளாந்தான் மெட்ரிகுலேசன் அரசு பல்கலைக்கழக நுழைவு கல்லூரியில் பயிலத் தேர்வானார்.

இவர் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்தார். இரு பாடங்களிலும் 'ஏ’ தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது இவர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வானவியல் பொறியியல் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி.

பள்ளிப் பருவங்களில், தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியாளர்; தமிழ்ப் பேச்சுப் போட்டியாளர்; பற்பல போட்டிகளில் பங்கேற்று வாகை சூடியுள்ளார். தற்போது தேசிய அளவிலான செயற்கைக் கோள் ஆய்வு போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுப் பெற்று உள்ளார்.

இவருடைய பெற்றோர், அண்ணன் புவனேஸ்வரன்; அண்ணி போஷாயித்திரி;  அண்ணன் சத்ய பிரபாகரன் ஆகியோர் தூண்டுதலும் ஊக்கமும் அளித்தனர். அவரின்  இந்த நிலைக்கு அவர்கள் பெரும் உந்துதலாக இருந்ததாக வான்மித்தா தெரிவித்தார்.

அவருடன் ஒரு சின்ன கலந்துரையாடல்:

தங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு, மாணவராக தாங்கள் வலியுறுத்துவது என்ன?

வான்மித்தா : உங்களுக்கு என நீங்கள் நிலைநிறுத்தி இருக்கும் வாழ்வியலில், மனது அளவில் மிக உறுதியாகவும் திடமாகவும் இருங்கள். நீங்கள் கொண்டு இருக்கும் கொள்கையில் சற்றும் தளரக் கூடாது. துணிவாக முன்னேறுங்கள்.

‘என்னால் முடியாது’ என நீங்கள் நினைக்கும் போது, தொடங்கிய போது இருந்த மன வலிமையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

மலேசியத் தமிழரான நீங்கள் நம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வான்மித்தா : நம் சமூகத்தின் பெரும் வெற்றிக்குத் தொடக்கம் தமிழ்ப் பள்ளிகள்தான். உங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள். வான் அளவில் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்துக் கொடுங்கள். நான் பயிலும் வானவியல் பொறியியல் துறையில், உங்கள் பிள்ளைகளும் பயில வழிகள் நிறைய உள்ளன. அனுப்புங்கள். நான் வழிக்காட்டியாக என்றென்றும் இருப்பேன்.

வானத்திற்கு எல்லை என்பது இல்லை. அது போல நம் குறிக்கோளுக்கும் எல்லைகள் இல்லை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக