06.01.2021
புகழின் உச்சியில் இருந்த போதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் உடுமலை நாராயணகவியார். அவர் தம் 82-ஆம் அகவையில் உயிர் துறந்தார். அவர் தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து உள்ளார்.
அந்த ஆவணத்தில், ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டு இருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவு அடைகிறது, குறைகிறது.
என்னைப் பொறுத்த மட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்!
வேறு எந்தவகையான சடங்குகளும் தேவை இல்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்ய வேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்!
உணவிலே எளிமை, உடையிலே எளிமை கல்வியிலே மேன்மை இது போதுமானது. இது தவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.
இந்த வீண் பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத் துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன்.
காலம் கடந்து விட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்து இருக்கிறேன். அதைக் கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது.
ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’’ என்று எழுதி வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக