19 ஜனவரி 2021

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஜாசின் தமிழ்ப்பள்ளி

18.01.2021

ஆக்கம்: கவிஞர் ஜாசின் ஏ. தேவராஜன்

ஜாசின் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய போது எழுத்தாளர் தேவராஜன் அவர்கள் வல்லினம் இதழில் நம்மைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அன்பர்களின் பார்வைக்குப் பதிவு செய்கிறேன். ஓய்வாக இருக்கும் போது படித்துப் பாருங்கள் >>>

*வண்ணச் சாந்துகளில் குளித்துக் கதைகளில் தம்மைத் துவட்டிக் கொண்ட கலைஞன்*


வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2015

தமிழ் சார்ந்தவர்களின் அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்விச் சூழலில் மேலிடத்தில் இருந்து அடிமட்டம் வரை ஆடப் படுகின்ற தகிடு தத்தங்களைப் படம் பிடித்துக் காட்டும் இந்தத் தொடரில் கைங்கர்யவாதிகளுக்கு அப்பால் மாறுபட்ட வகையில் இயங்கிக் கொண்டு இருக்கிற ஆசிரியர்கள் இருவரை இந்தக் கட்டுரையின் வழி சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஒருவர் திரு. முத்துக்கிருஷ்ணன். மற்றொருவர் திரு. தாயபு கனி. இருவரையும் ஆசிரியர்கள் என்ற கட்டமைப்புக்கு வெளியே சமூகச் சேவையாளர்களாகவும்; இலக்கியம் சார்ந்தவர்களாகவும் அவதானிக்கிறேன்.

இவர்களைப் போல் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கவே செய்வர். ஆனால், நமது துரதிர்ஷ்ட்டம் அத்தகையவர்களைப் பெட்டிக்குள் அடைத்து வைப்பது!


ஜாசின் தேவராஜன் எழுதிய
அரிதாரம் கலைந்தவன் இலக்கியத் தொகுப்பு

முதலில் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களைக் குறித்துத் தொடங்குகிறேன். மலாக்கா, டுரியான் துங்கல் எனும் குக்கிராமத்தில் பிறந்த திரு. முத்துக்கிருஷ்ணன், மலேசிய ரீதியில் முற்றிலும் மாறுபட்ட தமிழாசிரியராகப் பவனி வந்தவர்.

இன்று மலேசிய நண்பன் ஞாயிறு பதிப்பில் ’கணினி கேள்வி பதில்’ அங்கத்தைச் சுவைபட நடத்துவதோடு, ‘மாணவர் சோலைப்’ பகுதியை ஈர்க்கின்ற வகையில் தொகுத்துத் தருகிறார்.

இவர் தமிழாசிரியர் என்ற முத்திரையைத் தாண்டி மிகச் சிறந்த சித்திரக் கலைஞனாக உலா வந்தவர்.

இவரது சித்திரங்களும் வண்ணக் கலவைகளும் பள்ளிச் சுவர்களில் நங்கூரமிட்டு விட்டால், அவற்றில் இருந்து கழன்று கொள்ள எந்த விழிகளுக்கும் துணிவு வராது.


வரலாற்றுப் பேரரசு விருது 2020

வெற்றுச் சுவர்களுக்கு உயிர் வந்தது போல் மிக நேர்த்தியான சித்திர வேலைப் பாடுகளுக்கு உரியவர் என்ற பெயர் இன்றளவும் உள்ளது.

தாம் பணியாற்றிய பல தமிழ்ப் பள்ளிகளில் இன்றளவும் அந்த வசீகரச் சித்திரங்கள் நம்மை ஒரு கணம் நிறுத்தி விடுகின்றன. மாதிரிக்கு ஜாசின் தமிழ்ப்பள்ளியில் முத்துக்கிருஷ்ணன் தீட்டிய சித்திரங்களும் வடிவ எழுத்துகளும் இன்றளவும் யாரும் தீண்டிக் கெடுக்க அஞ்சுவர்.

வெளியில் இருந்து பள்ளிக்கு வருகின்றவர்கள் ஓரிடத்தில் அவரது சித்திரம் தட்டுப்பட்டு விட்டால், மற்றச் சித்திரங்களுக்குத் தாவுவர். அதே போல அவரது கையெழுத்துகளும் தனித்துப் பேசப்பட்டன.

அன்று அவர் பயன்படுத்திய ‘PELAKA’ இரக வண்ணச் சாந்துகள் இன்றளவும் சாயம் சிதையாமல் அழகூட்டிக் கொண்டு இருக்கின்றன.

வண்ணச் சாந்துகளை அநாயசமாகக் கையாளும் நுட்பம் எப்படி வாய்த்து என்பது வியப்பு! கலைத் தொடர்புடைய படைப்புகளை உடனுக்குடன் தீட்டித் தரும் தனித்த பெரும் ஆளுமையைக் கொண்டு இருந்தார்.

பள்ளியைத் தவிர்த்து வெளியே பல இடங்களுக்கு அவரது தூரிகை ஊர்ந்து போய் இருக்கிறது. ஆலயங்கள், சமூக மண்டபங்கள், பொது நிலையங்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பொழுது நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சின்னப் பையன்.

நான் வசித்த புக்கிட் செர்மின் தோட்டத்தில் முனியாண்டி என்பவர் புதுப் பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்கி இருந்தார். பள்ளிப் பேருந்து என்பதை அடையாளப் படுத்துவதற்கு வாசகங்கள் தீட்ட வேண்டி முத்துக்கிருஷ்ணனை அணுகி இருந்தார்.

ஒரு மாலையில் முத்துக்கிருஷ்ணன் மிக எளிமையான தோற்றத்தோடு நெற்றிக் கோட்டில் நீர் வழிய மாலைச் சூட்டுக்குக் கீழ் பேருந்துக்கு அருகில் நின்று கொண்டு தமக்கே உரிய ஓரப் பார்வையில் வேலையைத் தொடங்கினார்.

மிகப் பெரிய ஓவியர் என்றாலும் சின்ன பந்தாகூட இல்லாமல் ஒரு தோட்டத் தொழிலாளியைப் போல் செயல்பட்டுக் கொண்டு இருந்தார். அவரது வேலையைத் தொடக்கத்தில் இருந்து பார்க்க இயலவில்லை. காற்பந்து விளையாட நண்பர்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்த நேரம் அது.


தென்றல் ஆசிரியர் வித்யாசாகர்

மறு நாள் காலை, அந்தப் பேருந்து புதுமணப் பெண் போல அழகு கோலம் பூண்டு தோட்ட மக்களைச் சுண்டி இழுத்துக் கொண்டு இருந்தது. அதுவரை எனக்கு அறிமுகமாகாதவர், பிறகு தான் தெரிந்தது அவர் ஜாசின் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் என்று! அதற்குப் பிறகே, அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன்.

ஜாசின் பட்டணத்தில் பிரபலமாக விளங்கிய கே.வி. நாயர் அவர்களுக்கு உரிமையான இரண்டு மாடி வீட்டை மாணவர் விடுதியாக மாற்றி ஏழை மாணவர்கள் எல்லாம் தங்கிப் படித்தனர்.

கல்வியில் தீவிரம் காட்டிய மாணவர்களுக்கு அந்தத் தளம் கூட்டுக் கல்வி முறைக்கான களமாக மாறியது. ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கல்வித் தளம். அங்குப் பகுதி நேர ஆசிரியராகத் திரு முத்துக்கிருஷ்ணன் வந்து போய்க் கொண்டு இருப்பது தெரிய வந்தது.

எழுதிக் குவித்த எண்ணற்ற எழுத்தோவியங்களை ஒரு முறை மாணவர்களிடம் கொண்டு வந்து காண்பித்து உள்ளார். அவை யாவும் பத்திரிகையில் முழுப் பக்கக் கதைகளாக வெளிப்பட்டு இருந்தன.

எனக்கு அதைத் தரிசிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. நண்பர்களின் மூலம் காதுபடக் கேட்டதே மிகப் பெரிய செய்தியாகத் தோன்றியது.


ஜாசின் தேவராஜன் நூல் வெளியீட்டு விழா

1980-களின் இறுதியில் இக்கட்டான நிலையில் எமது குடும்பம் ஜாசின் பட்டணத்திற்குக் குடிபெயர்ந்தது. எங்கள் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கம்போங் கெலுபி எனும் கிராமத்தின் சாலை மருங்கேதான் அவரது இல்லம் அமைந்து இருந்தது.

அவர் எனக்கு மேலும் நெருக்கமானார். ஒரு தடவை பள்ளி நிகழ்வுக்காக திரைப்படப் பாடல் மெட்டில் ஒரு பாடலைக் கேட்டு இருந்தேன்.

‘திருடாதே பாப்பா திருடாதே’ என்ற பாடல் அமைப்பில் உடனடியாக அமர்ந்து கறுப்பு மையில் சித்திர எழுத்துகளைக் கோர்த்து யாத்துத் தந்தார்.

எழுதும் போதே எப்படி இவரால் இத்தனை நிதானமாகவும் பிழையறவும் அழகுறவும் எழுத முடிகிறது என வியந்தேன்!


தேன் சிந்துதே வானம் நாவல் 2016

பெரும்பாலும் தமிழாசிரியர்கள் மத்தியில் இது போன்ற தனித்துவம் வாய்ந்தவர்களைக் காண்பது குதிரைக் கொம்பு! சிலருக்கு அந்தத் திறமை இருக்கலாம். ஆனால், உயிர்ப்பு என்பதும் நீட்சி என்பதும் எத்தனை பேரில் காண இயலும்?

முத்துக்கிருஷ்ணனிடம் இருக்கின்ற அந்த உயிர்ப்பும் பிரசன்னமும் யாரிடமும் கண்டது இல்லை. அந்த மகோன்னத வியப்பு இன்றளவும் என் நெஞ்சக் கூடத்தில் எழில் ஓவியமாக உள்ளது!

நான் உட்பட அன்றையக் காலத்தில் அவரது பாதிப்பு இல்லாமல் சித்திர எழுத்துகளைத் தீட்ட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

நேரடி போதனை இல்லாவிடினும், நாமும் அவரைப் போல் அழகாக வடிவமாக எழுத வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியவர் திரு. முத்துக்கிருஷ்ணன் ஒருவரே!

நவம்பர் 2020

நமது கல்விச் சூழலில் எத்தனையோ விதமான ஆசிரியர்களைச் சந்தித்து இருப்போம். எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் கையெழுத்துகளை நான் இரசித்ததே இல்லை.

கோழிகள் நடந்து போன காகிதங்கள் போலவும், கொம்புகள் மழிக்கப் பட்ட மொட்டை மான்களைப் போலவும், இராட்சச இட்டிலிகளைப் போலவும் விதவிதமான எழுத்துக்குரிய ஆசிரியர்களைப் பார்த்து இருப்போம்.

திரு. முத்துக்கிருஷ்ணனன் அவர்கள் எனக்கு நேரடி ஆசிரியராக அமையாதது எனது துரதிர்ஷ்டம். எழுத்து வடிவத்தை நேசிக்கக் கற்பித்தவர்.

அந்த நேசம் தமிழைத் தொடும் போது எல்லாம் வியாபிக்க வேண்டும் என்ற புதுவகை இரசாயனத்தைப் பாய்ச்சியவர் என்றால் மிகையில்லை.

பள்ளி மாணவர்களுடன்
குனோங் லேடாங் மலை உச்சியில்

தெரிந்தோ தெரியாமலோ இன்றுங்கூட அழகாக எழுத வேண்டும் என்று தூவலை ஏந்துங்கால், வடிவ எழுத்துக்கு முன்னோடியாக முத்துக்கிருஷ்ணன் அவர்கள் முந்தி வந்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை.

சராசரி ஆசிரியருக்கு அப்பாற்பட்ட திறமைகளைத் தமக்கு உள்ளே வைத்து இருந்தார். ஆனால், கல்வியுலகம் அவரை அறிந்து வைத்த அளவுக்கு உணர்ந்து வைக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

சில உப்புச் சப்பற்ற காரணிகளை முன்வைத்து அவர் ஒரு சாமான்ய ஆசிரியர் என்று எடை போட்டு இன்றளவும் அவரது ஆளுமையை அலகிடத் தவறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனையோ அச்சு ஊடகங்களில் பணிபுரிந்தும் உள்ளார். சான்றாகப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, மயில் இதழில் பணி புரிந்தபோது அவரது கைவண்ணம் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல வெளிப்பட்டது.

சிறுகதைகளின் பாடு பொருளும் நடையும் மாணவர்கள் விரும்பிப் படிக்கின்ற அளவுக்குக் கையாண்டு இருந்தார். நன்றாக ஞாபகம் இருக்கிறது.

எண்பதுகளில் உலகச் சாரணர் இயக்கத்தில் முக்கியப் பொறுப்புக்கு உரியவராகவும் சைக்கிளோட்ட வீரராகவும் தம்மை வெளிப்படுத்தி இருந்த முத்துக்கிருஷ்ணன் பல சந்தர்ப்பங்களில் அந்த அனுபவங்களையே சிறுகதைக்குக் களமாக்கி இருந்தார்.

எனது அவதானிப்பில் அறிவுரையோ போதமோ சொல்ல வேண்டி தூவலைத் தூக்கி இருப்பார் என்று எண்ணத் தோன்றவில்லை. கலாம்சக் கூறுகளுக்கும் சில நுட்பமான சம்பவங்களுக்கும் முன்னுரிமை அளித்து இருப்பார் என்றே உணரத் தோன்றுகிறது.

எழுத்தில் அனைத்துமே அவருக்குப் பாடுபொருளாகி இருந்தன. இலக்கியப் போட்டிகளில் அவரது ஈடுபாடு கம்மி தான்.

1983-ஆம் ஆண்டு, காஜா பெராங் மண்மன்ற கலை இலக்கியப் போட்டியில் அவரோடு நானும் பங்கு பெற்று இருந்தேன். சிறுகதைப் பிரிவில் எங்களுக்கு முதன்மைப் பரிசுகள் கிடைத்தன. அதன் பின் பிற போட்டிகளில் கலந்து கொண்டாரா என்று அறுதியிடத் தெரியவில்லை.

எனது பள்ளிப் பிராயத்தின் போது தாம் மேற்கொண்ட சாரணர் முகாமின் போது ஏற்பட்ட இடர்பாடுகளையும் திகிலையும் கதையாக்கித் தந்து இருந்தார். இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் ஆற்றொழுக்கு நடையும் இயல்பான வருணனைகளையும் கொண்டு இருந்தவர்.

‘நினைவெல்லாம் நித்யா’ என்ற கார்த்திக்கின் படம் பேர் போட்டுக் கொண்டிருந்த போது, முத்தாய்ப்பு வைத்தால் போல மயில் வார ஏட்டில் ‘கனவெல்லாம் கார்த்திகா’ எனும் தொடர்கதையைச் சுவாரஸ்யத்துடன் தந்து வாசக மனங்களைக் கொள்ளை கொண்டது பழைய வாசகர்களுக்குத் தெரியும்.

ஆசிரியருக்கும் ஆறாம் படிவ மாணவிக்கும் ஏற்படக் கூடிய காதலும் அதன் அத்துமீறலும் மட்டும் இப்போதைக்கு என் ஞாபகத்தில் உள்ளது. அந்தத் தொடர்கதை நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா!

எழுபதை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் முத்துக்கிருஷ்ணன் அவர்கள் தம்முடைய பதிவாக எந்த நூலையும் இதுவரை தமிழுக்குக் கொடை ஆக்கவில்லை என்பது ஏமாற்றம் தான்! கலை இலக்கிய வெளிகளில் அவரும் பலமுறை, பலரிடம், பல சூழல்களில் தெரிந்தே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்.


மலேசியாவில் இரண்டாவது உயரமான
குனோங் கொர்பு மலையில்

அச்சு ஊடகங்களின் கொடுக்கிப் பிடியில் தன் சக்தியை மாத்திரமே இழந்தவர். தற்போது, தான் சார்ந்துள்ள அச்சு ஊடகத்தில் நேர்மையான பலனைக் கையைக் கடிக்காத அளவுக்குப் பெற்று வருவது மனத்துக்கு ஆறுதல் அளிக்கிறது! உண்மைக் கலைஞர்கள் வாழ வேண்டும்!

அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய பாரதியார்கள் இனியும் வேண்டாம்! முத்துக்கிருஷ்ணன் அவர்கள் அப்பொழுதே விழித்து இருந்தால் இந்நேரம் துருவ நட்சத்திரமாக நின்று கொண்டு இருப்பார். (ஆனால், கலை இலக்கியம் அவரிடம் இருந்து காணாமற் போய் இருக்கலாம்)

https://www.vallinam.com.my/issue32/thevarajan.html

அதோடு மற்ற எழுத்தாளர்களைப் போல் அவருக்குக் காக்காய்ப் பிடிக்கத் தெரியாது; சம்பாதிக்கவும் தெரியாது! சத்தியமும் உண்மையும் நிறைந்தவர்!

எண்பதுகளில் நகர்ப்புறச் சூழலில் முகிழ்க்கின்ற உறவுகளை மையமாக வைத்துத் தொடர் கதையைத் தீட்டியது; மலேசியத் தமிழாசிரியர்கள் தொடாத ஒரு விடயமாகும்.

அதிலும் தங்களுக்கான பிம்பத்தோடு உலா போகும் தமிழ் ஆசிரியர்கள்; நல்ல காலத்திலேயே பாடப் புத்தகத்தைத் தாண்டி தூவலைத் தூக்க மாட்டார்கள் என்பது வேறு! அதில் திரு. முத்துக்கிருஷ்ணன் முற்றிலும் விதிவிலக்கு என்பது பெரும் பேறு!


ஜாசின் ஏ. தேவராஜன்


பின்னூட்டங்கள்

ராதா பச்சையப்பன்: எவ்வளவு திறமைகள் இருந்தும், அதை வெளியே காட்டிக் கொள்ளாதது ஏனோ?‌ வருத்த மாகவே இருக்கிறது... 😥

ஜெயராமன் சுங்கை சிப்புட்: சிறப்பு வாழ்த்துகள்... பாராட்டுகள்... அருமை...

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள்... வாழ்த்துகள்...

நாச்செல் அமச்சியப்பன், கேமரன் மலை: அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கு உங்களைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை ஐயா!! அவருக்குத் தெரிந்ததை அறிந்ததை மட்டும் குறித்து எழுதி உள்ளார். இன்னும் வெளியில் தெரியாதது எவ்வளவோ?? இறைவா!!!

ராதா பச்சையப்பன்: உண்மைதான்🙏

தேவி கடாரம்: அற்புதம் ஐயா. தங்களைப் பற்றி அறியாத செய்திகளை அறிந்து ஆச்சிரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். சகலகலா வல்லவர் என்று சொன்னால் மிகை ஆகாது. தங்களின் ’கனவேல்லாம் கார்த்திகா’ நூல் வடிவம் பெற வேண்டும் என்பது என் அவா...

ஜெயகோபாலன் பாகன் செராய்: தங்களின் இளமைப் பருவம் சிறப்பு ஐயா...

சந்திரன், லார்கின் ஜொகூர்: சிங்கம்..💕

பி.கே. குமார்: நல்ல பதிவு. நன்றி.

ராஜா சுங்கை பூலோ: வணக்கம். முத்துக்கிருஷ்ணன் அவர்களை எனக்கு 1972-லிருந்து தெரியும். அவரிடத்தில் எனக்குத் தெரியாத பல செய்திகளைக் கவிஞர் தேவராஜன் எழுதியிருப்பது எனக்கு உள்ளபடியே ஆச்சரியம் அளிக்கிறது. அவர் எழுதிய ஒரே ஒரு வரி மட்டும் உண்மை. உங்களுக்கு காக்காய் பிடிக்கத் தெரியாது என்று... எனக்கு ஒரே ஓர் ஆதங்கம். உங்கள் படைப்பைப் புத்தக வடிவில் எப்போது பார்ப்பேன். நன்றி. வணக்கம்.

குமரன் மாரிமுத்து: அருமை... அருமை... முதலில், என் ஆசிரியரின் கை எழுத்துகளில் சிக்கிக் கொண்டேன். இன்று வரை அதிலிருந்து விடுபடவே இல்லை; உண்மை. அவர் எழுத்துகளை 10 வயதில் வாசிக்கத் தொடங்கிய போதே ஆயுள் கைதியாகிவிட்டேன். முத்து ஐயாவின் ஓவியங்கள் உயிர்ப்பு உடையவை; பேசும் தன்மை கொண்டவை. கொடுத்து வைத்தவன்; அனுபவித்து இருக்கிறேன்.

சந்திரன் லார்கின் ஜொகூர்:
சிறப்பான ஒரு பதிவு.. நன்றி ஐயா. மலேசியாவின் முத்து. இருந்தோம் இறந்தோம் என்று இல்லாமல், நாட்டிற்கும் நம் இந்தியச் சமுதாயத்திற்கும் ஒரு சூரியனாக உதித்து கொண்டு இருக்கிறீர்கள். 🙏💕

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: அன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். ஜாசின் தமிழ்ப் பள்ளியில் பயின்ற ஓர் அழகிய தமிழ் மகளின் அழகிய தமிழ் உணர்வுப் பதிவு நேற்றைய தினம் பதிவானது. அந்தப் பள்ளியில் அடியேனும் ஓர் ஆசிரியராகப் பயணித்து உள்ளேன்.

அது தொடர்பாக நாடறிந்த கவிஞர் தேவராஜன் அவர்கள் வல்லினம் தமிழ் இலக்கிய இதழில் ஒரு கட்டுரை வரைந்து உள்ளார். அதை நம் புலனத்தில் பதிவு செய்து இருந்தேன்.

அந்தப் பதிவு தொடர்பாகப் பலர் தங்களின் கருத்துகளையும் வாழ்த்துகளையும்; அன்பின் வெளிப்பாடாகவும்; ஆதரவின் செயல்பாடாகவும்; போற்றுதலின் நிலைப்பாடாகவும் உச்சத்தில் தோரணங்கள் கட்டி அழகு செய்து உள்ளார்கள்.  மனநிறைவின் உச்சத்தில் தமிழ்ச்சோலை பூமாரி பொழிவது போல உணர்வுகளின் பிம்பங்கள். மனம் நெகிழும் அழகான கருத்துகளைப் பதிவு செய்த மலேசியம் அன்பர்கள்:

1. வெங்கடேசன்
2. ஜெயகோபாலன்
3. சந்திரன், ஜொகூர்
4. ஆதி. சேகர்
5. ராதா பச்சையப்பன்
6. ஜெயராமன் சுங்கை சிப்புட்
7. நாச்செல் அமச்சியப்பன்
8. தேவி கடாரம்
9. கரு. ராஜா
10. குமரன் மாரிமுத்து


அடுத்து, 👌 🙏 👍 எனும் சின்னங்களைச் சொடுக்கிச் சென்ற அன்பர்கள்:

1. கென்னடி ஆறுமுகம்
2, வனஜா பொன்னன்
3. ஜெயகோபாலன்
4. தினகரன் சுப்பிரமணியம்
5. வரதராசன்
6. பி.கே. குமார்
7. பாரதிதாசன் சித்தியவான்


இவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களில் சந்திரன், ஜொகூர்; ஆதி. சேகர்; ராதா பச்சையப்பன்; நாச்செல் அமச்சியப்பன்; தேவி கடாரம்; கரு. ராஜா; குமரன் மாரிமுத்து; ஆகியோர் நீண்ட பதிவுகளைப் பதிவு செய்து என் நெஞ்ச இருக்கையில் நிலையான இடத்தில் அமர்ந்து விட்டார்கள். நன்றி. நன்றி. அந்த 17 பேருக்கும் மீண்டும் கைகூப்பி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்த்துச் சொல்ல மனசு வராத அன்பர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.


அப்பாவும் மகனும்

18.01.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

ஓர் அப்பாவும் மகனும் அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு ஒரு விருந்திற்குப் போகிறார்கள்.

🔔 விருந்திற்கு முன்பாகத் தேநீர் வழங்கப் படுகிறது. அப்பா கையில் எடுப்பதற்கு முன்பு தேநீர் கோப்பை தவறி கீழே விழுந்து உடைந்து விடுகின்றது.

🔔 அந்தச் சப்தம் கேட்டு நண்பர் வெளியே வந்து அதைப் பார்த்து, ’அழகான சீனக் கோப்பை இது. எவ்வாறு உடைந்தது’ என ஆதங்கமாகக் கேட்டார்.

🔔 "எனது கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது" என அப்பா வருத்தமான குரலில் சொல்லவே...

🔔 நண்பர் உடைந்த பீங்கான்களை அள்ளிக் கொண்டு சென்றார்.

🔔 இதைக் கண்ட மகன் அப்பாவிடம் கேட்டான். ’உங்கள் கை கோப்பையில் படவே இல்லையே. பின் ஏன் நீங்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்டீர்கள்?’.

🔔 "உண்மைதான். தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து வைத்தது நண்பரின் மகள்.

🔔 அவள் கவனமாக மேஜை மீது அதை வைக்கவில்லை. ஆகவே தவறி விழுந்து விட்டது.

🔔 இந்த உண்மையைச் சொன்னால் நண்பர் ஏற்றுக் கொள்வாரா? நிச்சயம் என் மீது சந்தேகப் படவே செய்வார்.

🔔 அதற்குப் பதிலாக செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டு விடுவதே சரி என நினைத்தேன்.

🔔 ஒருவேளை இந்த உண்மைக்கு நீ தான் சாட்சி என விளக்கிச் சொல்லி இருந்தால் அவர் மகளைக் கோபித்துக் கொண்டு இருப்பார்.

🔔 அதன் பிறகு அவரது மகளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும்.

🔔 மெல்ல எங்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடும்.

🔔 "உறவுகள் உடை படாமல் காப்பாற்ற இப்படி சிறு பொய்கள் தேவைப் படவே செய்கின்றன".

🔔 அப்பாவின் முப்பது ஆண்டுகால அனுபவம் தான் அவரை இந்த முடிவு எடுக்க செய்து இருக்கிறது.
 
🔔 வாழ்க்கை நமக்கு கற்றுத் தரும் பாடம் இது போன்றது தானே!

🔔 இதற்கு மாறாகச் சிலர் தங்களது சுயநலத்திற்காகக் குடும்ப உறவுகளைச் சிதைத்துக் கொள்வதுடன் மற்றவர்களின் சந்தோஷத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.

🔔 உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது எளிது.

🔔 காப்பாற்றிக் கொள்வது எளிது அல்ல.

🔔 வீட்டுக் கொடுத்தலும்; புரிதலும்; அரவணைத்துப் போதலும்; அத்தியாவசமானவை.

🔔 நாம் யார் என்பதை நம் செயல்களே தீர்மானிக்கின்றன.

பின்னூட்டங்கள்:

ராதா பச்சையப்பன்: வாழ்க்கையின் தத்துவங்களில் ஓர் உண்மை. கதை அருமை👌 நன்றி.

மோகன் காசிநாதன்: அருமை. நன்றி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மனதை உரசிச் செல்லும் கதை... அருமை..



 

18 ஜனவரி 2021

கௌரி சர்வேசன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் மறைவு

16.01.2021

மலேசியத் தமிழ் எழுத்துலகில் *அமைதியின் சின்னம்* என்று புகழப் பட்டவர். *அன்பின் வண்ணம்* என்று வாழ்த்தப் பட்டவர். அவர்தான் மலேசியப் புகழ் தமிழ் எழுத்தாளர் கௌரி சர்வேசன்.

எவரிடமும் என்றைக்கும் அழுத்தமாகப் பேசும் பழக்கம் இல்லாதவர். அடக்கத்தின் மறுபக்கமாய்ப் பயணித்தவர். எப்போதும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கம் கொண்டவர்.

எழுத்தாளர் மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் _மலேசியம்_ புலன நிர்வாகி கரு. ராஜா அவர்களும்; நானும் பல முறை சந்தித்துப் பேசி இருக்கிறோம். குரல் அதிர்ந்து பேச மாட்டார். மென்மையான குரல். அதுதான் அவரிடம் உள்ள தனித்துவம்.

அவரிடம் நெருங்கிப் பழக ஓர் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. 2015-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூரில் ஓர் இணையக் கருத்தரங்கு நடத்தியது. அதில் ’மலேசியத் தமிழர்களும் இணையமும்’ எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.

அப்போது கௌரி சர்வேசன் தான் மண்டபத்தின் ஒலி ஒளி தொடர்பான தொழில் நுணுக்கங்களுக்கு உதவியாக இருந்தார். நன்றி மறவேன். அதன் பின்னர் அவரிடம் தொலைபேசி மூலமாகப் பேசுவது வழக்கம். புலன நிர்வாகி கரு. ராஜா அவர்களின் நெருங்கிய நண்பரும்கூட.

மலேசியம் புலனத்தில் சென்ற ஆண்டு வரை ஓர் அன்பராகப் பயணித்தார். வேலை பளு காரணமாக விலக வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் சிறுகதைச் செம்மல் என்று புகழாரம் செய்யலாம். இவருடைய சிறுகதைகள் மற்ற மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைக் காட்டிலும் சற்றே மாறுபட்டு; வேறுபட்ட கோணங்களில் பயணித்து உள்ளன.

எழுத்தாளுமையில் தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். ஓர் அழுத்தமான கருவை அனாவசியமாகக் கையாளும் திறனை அவரிடம் காண முடிந்தது.

கௌரி சர்வேசன் அவர்களை மலேசிய தமிழ் எழுத்துலகம் கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மலேசியம் புலனம் கருதுகிறது. நல்ல அருமையான மனிதர். நல்ல நல்ல கதைகளை எல்லாம் எழுதி இருக்கிறார்.

அவருடைய நூல் வெளியீட்டு விழாவில் மரியாதை நிமித்தமாகப் பலருக்கும் மாலை அணிவிப்பது வழக்கமாகக் கொண்டார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2010-ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதை; கௌரி சர்வேசன் எழுதிய “எழுதாத ஒப்பந்தங்கள்” எனும் கதைக்குக் கிடைத்தது. இருபது கதைகளில் சிறந்த கதையாகத் தமிழக எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் தேர்வு செய்தார். அந்தக் கதைக்கு ஆயிரம் வெள்ளி பரிசாக வழங்கப் பட்டது.

2015 செப்டம்பர் மாதம் இவர் எழுதிய 'அணைய மறுக்கும் நெருப்பு' எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

இவர் கெடா கூலிம் பகுதியில் பிறந்தவர். (19.09.1947). ஜொகூர் குளுவாங்கில் தன் தொடக்க உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் கோலாலம்பூர் அம்பாங் பகுதிக்கு மாற்றலாகி வந்தார்.

ஒரு காப்புறுதி நிறுவனத்தில் உயர் அதிகாரியாகவும் பதவி வகித்தார். நீண்ட காலம் சிங்கப்பூரில் வசித்து வந்தார். சொந்தமாக Perfect Edition (M) Sdn Bhd எனும் ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து நிர்வகித்து வந்தார்.

நேற்றைய முன்தினம் உடற்பயிற்சிக்காக நடைப்பயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு நெஞ்சுவலி. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய *மலேசியம்* புலனம் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

புலன நிர்வாகத்தினர்
மலேசியம்
16.01.2021


பின்னூட்டங்கள்


பெருமாள், கோலாலம்பூர்:
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!

சின்னராசு
, கோலாலம்பூர்: எழுத்தாளர் கௌரி சர்வேசன் காலமானார். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!

தேவி கடாரம்: ஓம் நமச்சிவாய... ஆத்மா சாந்தி அடைய  பிரார்த்தனைகள்...

அமச்சியப்பன்: எழுத்தாளர் கௌரி சர்வேசன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

ஆதி சேகர்:
ஆழ்ந்த அனுதாபங்கள் ... ஆத்மா சாந்தி அடைய  பிரார்த்தனைகள்...

கு.ச.இராமசாமி
, கோலாலம்பூர் : எழுத்தாளர் கெளரி சர்வேசன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பாரதிதாசன் சித்தியவான்: ஓம் நமச்சிவாய... ஆழ்ந்த அனுதாபங்கள்

ராதா பச்சையப்பன்: 🙏 அன்னாரின் ஆத்மா  சாந்தி அடைய வேண்டுகிறேன்.

செபஸ்டியன் கோப்பேங்: 🙏 அன்னாரின் ஆத்மா  சாந்தி அடைய வேண்டுகிறேன்.

கென்னடி ஆறுமுகம்: ஆழ்ந்த இரங்கல்... ஆழ்ந்த அனுதாபங்கள்

ஜெயஸ்ரீ கண்ணன்: ஆத்மா சாந்தி அடைய  பிரார்த்தனைகள்...

சாந்தகுமாரி, கோலாலம்பூர் : ஆத்மா அமைதி அடையட்டும்...

குமரன் மாரிமுத்து: அன்னாரின் இன்னுயிர் இறைமடியில் அமைதி அடைய வேண்டுகிறேன். 🙏🙏🙏

வெங்கடேசன்: ஓம் நம சிவாய ஓம்... ஆழ்ந்த அனுதாபங்கள்

கென்னடி ஆறுமுகம்: அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்...!

கரு. ராஜா. சுங்கை பூலோ: நல்ல நண்பரை இழந்து விட்டேன். ஆழ்ந்த அனுதாபங்கள்...

உதயகுமார், கங்கார் பெர்லிஸ்: அருமையான நினைவலைகள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

சாகுல் ஹமீது: ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்லையா செல்லம்: அன்னாரின் மறைவிற்கு அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துk கொள்கிறேன்...

பாலம் முனியாண்டி: ஆழ்ந்த இரங்கlஐத் தெரிவித்து கொள்வதோடு அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

ரஞ்சன் கங்கார் பூலாய்: அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...


 

நெசவாளர்களும் துணி வணிகர்களும் - நூல் விமர்சனம் 1 - டாக்டர் சுபாஷினி

18.01.2021

நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

Jayaseela Stephen is Professor of Maritime History and Coordinator of the UGC - Special Assistance Programme at Visva - BHarati University, Shantiniketan.

He has held teaching and research appointments at University of Nebraska, Lincoln City, (1996), University of Connecticut, Storrs, (2004) USA.

He is also former fellow of the Ecole Franoise d’ Extreme-Orient, Paris/Pondicherry (1994-1999),

Editor of Revue HIstorique: Societe de l’ Histoire de Pondicherry (1995-1997),

Senior Advisor to Tata Central Archives, Pune, (2000-2001)

Head of the Department of History (2001-2004).

He is a Member of Executive Committee in the Indian Historical Records Commission nominated by the Government t of India.

He is the author of numerous books:

1. The Coromandel Coast and its Hinterland: Economy, Society and Political System, 1500-1600 (1997),

2. Portuguese in the Tamil Coast: Historical Explorations in Commerce and Culture, 1507-1749 (1998),

3. Rangappa Thiruvengadam Pillai Naatkurippu, Vol. I (1760-1768) Vol. II, 1762-1766, (2000),

4. The Diary of Rangappa Thiruvengadam Pillai, 1760-1768: Translated from Original Tamil with Notes (2001),

5. Portuguese- Tamil Grammar: Modernization and Democratisation of Tamil (2001) and

6. Letters of the Portuguese Jesuits from Tamil Countryside, 1666-1668, (2001).

7. He has also co-edited (with KS Mathew) Indo-French Relations, (1999) and edited Trade and Globalisation: Europeans, Americans and Indians in the Bay of Bengal, 1511-1819 (2003);

8. Literature, Caste and Society: The Masks and Veils (2006),

9. Arangappa THiruvengadam Pillai Naatkurippa from 13.6.1767 to 29.12.1769, (Vol. III, in Tamil), 2006.

10. His publications also include a large number of articles on socio-economic history of Medieval South India, Maritime history of Early Modern India in various journals and edited volumes.

11. He won the best book prize for his book Muthu Vijaya Thiruvengadam Pillai Naatkurippu, 1794-1796, in 1999 (in Tamil which deals with diary writing in Tamil during the Eighteenth Century).

நூல் விமர்சனம்: முனைவர் க.சுபாஷிணி

[பகுதி-1]

வண்ண வண்ண ஆடைகளை விரும்பாத மனிதர்கள் தான் உண்டா? சென்ற மாதம் ஒரு சேலை வாங்கி இருப்போம். ஆனால் இன்று யாராவது அணிந்து இருக்கும் சேலை அழகாகக் கண்களைக் கவர்ந்தால் அதனையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை.

பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் வகை வகையாக ஆடைகளை வாங்கி அணிந்து அழகு பார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தத் தவறுவது இல்லை. சிறு குழந்தைகளில் இருந்து வயதான மூத்தவர்கள் வரை எல்லோருக்குமே மனதைக் கவர்வது மனிதர்கள் நாம் அணிந்து கொள்கின்ற வகை வகையான ஆடைகள் தான்.

ஆடைகளை வாங்கி அணிகின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஆடை உற்பத்தியின் பின்னால் இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செல்வது இல்லை.


பொதுவாக எடுத்துக் கொண்டால் துணி நெ-நெய்வதற்குத் தேவையான நூலை உருவாக்கப் பருத்தி விவசாயம் அடிப்படையாக அமைகிறது.

அதன் பின்னர் பருத்திப் பஞ்சில் இருந்து நூல் உருவாக்கம் நூலுக்குச் சாயம் ஏற்றும் தொழில், துணி உருவாக்கம், துணியில் வண்ணம் தீட்டுவது, சாயத்தில் முக்குவது, துணிக்கு அச்சு செய்வது என்ற வகையில் முதல் கட்ட பணிகள் அமைகின்றன.

இப்படி உருவாக்கப்பட்ட துணிகளை வெவ்வேறு வகையான ஆடைகளாகத் தைப்பது அல்லது சேலை போல உருவாக்குவது என்பது அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அமைகிறது.

இதனை அடுத்து இப்படித் தனித்தனியாக உருவாக்கிய ஆடைகளை வணிகம் செய்வது என்பது நிகழ்கிறது. தமிழகம் மிக நீண்ட நெசவு பண்பாட்டைக் கொண்டு இருக்கிறது.

நமக்கு இன்று கிடைக்கின்ற ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான தாலமி போன்றோரின் ஆவணக் குறிப்புகளும், ரோமானிய வர்த்தக குறிப்புகளும், இன்றைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகர வணிகர்களின் குறிப்புகளும் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலக் கட்டத்திலேயே தமிழக நிலத்தில் உருவாக்கப்பட்ட துணி வகைகள் ஐரோப்பியச் சந்தையில் புகழ்பெற்று பொருளாதார பலமிக்க வணிகப் பொருளாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

மிக நீண்ட காலமாக தமிழகத் தொழில் பண்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்த ஒரு தொழிலாக நெசவுத் தொழில் அமைகிறது. நெசவுத் தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் தொடர்பு கொண்டு இருப்பதால் மிக விரிவான பொருளாதார தொடர்புடைய முக்கியத் தொழில் என்ற சிறப்பையும் நெசவுத்தொழில் பெறுகிறது.  

ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நெசவுத் தொழிலின் சிறப்பு பற்றி பேசும் நமக்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த நெசவுத் தொழில் எவ்வகையில் செயல் பட்டது என்பதைப் பற்றிய தகவல்கள் பேசப் படாமலேயே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

கிபி 16-ஆம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகின்ற பெருவாரியான வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாகப் பேசிச் செல்லும் ஆய்வுத் தளத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆய்வுத் தளத்தை மையமாகக் கொண்டு மிக விரிவான சான்றுகளுடன் முனைவர் எஸ்.ஜெசீல  ஸ்டீபன் "நெசவாளர்களும் துணி வணிகர்களும் (கிபி 1502-1793)" என்ற நூலை ஆங்கிலத்தில் வழங்கி இருக்கின்றார்.

இதனை மறைந்த முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ந. அதியமான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து உள்ளது.

முனைவர் ஜெயசீல ஸ்டீபன் மிக நீண்ட ஆய்வு அனுபவமும் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவரது ஒவ்வொரு நூலும் தமிழக வரலாற்றை மிக மிக நுணுக்கமான பார்வையுடன் மிக விரிவான பற்பல ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திகழக்கூடியவை.

இவருக்குள்ள பன்மொழி திறன் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதல் பலம். போர்த்துக்கீசிய மொழி, லத்தீன், பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் ஆழமான திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார்.

இத்தகைய மொழி ஆளுமை இருப்பதால் இவரது ஆய்வுகள் முதன்மைத் தரம் வாய்ந்த ஆவணங்களை அலசிப் பார்த்து அதிலிருந்து சான்றுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்க இயலாது.

நெசவுத் தொழில் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா..? இதற்கென்று ஒரு ஆய்வு நூல் தேவையா? எனச் சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்போருக்கு ஏராளமான பதில்களை முன்வைக்கிறது இந்த நூல்.

நூலாசிரியர் இந்த நூலுக்கு எடுத்துக் கொண்ட காலக் கட்டம் என்பது ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் காலக்கட்டம் மட்டுமே.

அதாவது கி.பி. 1502-ஆம் ஆண்டில் இருந்து 1793-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நெசவுத் தொழில் துணி வணிகர்களின் செயல்பாடுகள், சோழ மண்டல கடற்கரையோர வணிக முயற்சிகள் இவை ஏற்படுத்திய தாக்கங்கள், ஐரோப்பியர்களுடனான வணிகத் தொடர்புகள், கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ற வகையில் இந்த நூல் அமைகிறது.

நூல் தமிழாக்க அறிமுக உரையுடன் தொடங்குகிறது. அதனை அடுத்து ஆங்கில நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற நன்றியுரை இடம்பெறுகிறது.

அதன்பிறகு நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பும் நூலில் பயன்படுத்தப்பட்ட சொல் குறுக்கங்கள்  பட்டியலும் இடம் பெறுகின்றன. நூலை தொடங்குமுன் நூலின் மையக் கருத்திற்கான காட்சி அமைப்பு விளக்கப் படுகின்றது.

இதனைத் தொடர்ந்தார் போல கிபி. 1502-ஆம் ஆண்டிலிருந்து 1641-ஆம் ஆண்டுகளில் தமிழகக் கடற்கரை பகுதியிலிருந்து வளைகுடா இந்தோனேசியா தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணி வணிகம் பற்றி ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட்டு உள்ளது.

இக்காலக் கட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் தமிழகக் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருந்த படியினால் தமிழக நெசவாளர்களின் துணிகளை அவர்கள் எவ்வகையில் பெற்று அதனை கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள் என்பதை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது.

இதற்கு அடுத்தபடியாக வருகின்ற மூன்றாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்த அத்தியாயத்தின் தலைப்பு `செட்டியார் முதலியார் பிள்ளை மரக்காயர் வணிகர்கள் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் மேற்கொண்ட துணி வணிகம் மற்றும் பொருள் நிலவியல் என்பதாகும்.

இந்தப் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்ற ஆழமான செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டுமே நூலாசிரியர் 346 அடிக்குறிப்புச் சான்றுகளாக வழங்கி இருக்கின்றார் எனும் போது எத்தனைத் தகவல்களை இது உள்ளடக்கி இருக்கும் என்பதை  வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அதனை அடுத்து முடிவுரை வருகிறது. நூலில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லடைவுகளும் அவற்றிற்கான விளக்கங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்டு உள்ளன. நூலுக்குப் பயன்பட்ட ஆய்வு நூல்களின் பட்டியல் அதனை அடுத்து இடம்பெறுகின்றது.

இறுதியாகப் புத்தகத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிலவரைப் படங்களும் தமிழகக் கடற்கரையோர முக்கிய வணிகத் தளங்களின் பெயர்களும் காட்டப்பட்டு உள்ளன.

மொத்தம் 220 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக இந்த நூல் அமைகிறது. நீண்ட காலமாகவே தமிழக சோழ மண்டல கடற்கரை ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி.

இடைப்பட்ட காலத்தில் அரேபியர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழகக் கடற்கரைப் பகுதியில் மீண்டும் வணிக முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக கி.பி. 15-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தைக் கூறலாம்.

வாஸ்கோட காமாவின் இந்தியாவிற்கான வருகை இதுவரை மறைந்திருந்த வணிகக் கதவுகளை மீண்டும் திறப்பதாக அமைந்தது. தொடர்ச்சியாகப் போர்த்துகீசிய வணிகர்கள் கோவா மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதி மட்டும் அல்லாது தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்கினர்.

போர்த்துக்கீசியர்களின் முயற்சி ஐரோப்பாவில் ஏனைய பிற நாடுகளில் வணிக ஆர்வத்தை எழுப்பியதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின.

ஏற்கனவே இத்தாலி வணிகர்கள் மற்றும் அரேபிய வணிகர்கள் மூலமாகத் தென்னிந்திய வணிக வளம் பற்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் அதிகமாகவே அறிந்திருந்தனர்.

ஆக, போர்த்துக்கீசியர்கள் அதற்கடுத்து டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை வணிகத்திற்குத் தகுந்த இடமாகக் காணத் தொடங்கி வணிக முயற்சிகளைக் கட்டமைக்கத் தொடங்கினர்.

இந்த வணிக முயற்சிகள் தான் இன்றைக்கு நமக்கு இந்தியாவைப் பற்றி மட்டும் அல்லாது மிகக் குறிப்பாகத் தென்னிந்தியாவின் நில வரைபடம் மற்றும் இலங்கையின் நில வரைபடம் தொடர்பான ஆவணங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன.

ஆங்கிலத்தில் cartography என்று சொல்லப் படுகின்ற ஒரு தனித் துறையை ஐரோப்பியர்கள் தங்கள் கடல் பயணங்களுக்காக மிக விரிவாகப் பயன்படுத்தினார்கள்.

இந்தியாவுடனான வணிகம் என்பது ரோமானிய காலம் தொடங்கி முக்கியத்துவம் பெற்றதால் அப்போதிருந்தே நில வரைபடங்கள் உருவாக்கம் என்பது ஐரோப்பிய வணிகர்களது முக்கியமான ஒரு செயல்பாடாகவே இருந்தது.

கி பி 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இன்றைய இலங்கை பற்றிய குறிப்பிடத்தக்க வரைபடங்கள் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டு உள்ளன.

இவை மட்டும் அல்ல. கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் கருவிகள் இல்லாத அந்தக் காலக் கட்டத்தில் தாங்கள் காண்கின்ற காட்சிகளைத் துல்லியமாக ஓவியங்களாக வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைக்கும் செயலையும் ஐரோப்பிய வணிகர்களது குழுவில் இடம் பெற்ற வரலாற்று அறிஞர்களும் பாதிரிமார்களும், செயல்படுத்தினர்.

இத்தகைய நில வரைபடங்களும் ஓவியங்களும் தான் இன்றைக்கு நாம் கடந்த ஐநூறு ஆண்டுகால தமிழகத்தின் சமூக நிலையையும் புவியியல் சூழலையும் அறிந்து கொள்ள நமக்கு முதன்மை நிலை ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

(தொடரும்)


     டாக்டர் சுபாஷினி

பின்னூட்டங்கள்:

தேவசேகரன் தனசேகரன்: சிறப்பான வரலாற்றை பறைசாற்றும் நூல். விரைவில் அடுத்த பகுதியை பதிவு செய்க. நன்றி அம்மா

தேவி கெடா கடாரம்: அருமையான தகவல்கள். நெசவாளர்கள் பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறது.உழவர்களின் அவலம் பற்றி அறிந்த அளவுக்கு ...நெசவு தொழிலை பற்றிய செய்தி அறிய வில்லை. அடுத்த தொடர் வரும் ஆவலில் நான்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நெசவாளர்களும் துணி வணிகர்களும்... இப்படி ஒரு நூல் இருப்பது பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்புகள் குறைவு.. இப்போது தெரிய வருகிறது. அறிமுகம் செய்த சகோதரி டாக்டர் சுபாஷினி அவர்களுக்கும்; நூலை எழுதிய பேராசிரியர் ஜெயசீலா ஸ்டீபன் அவர்களுக்கும்; மொழியாக்கம் செய்த அமரர் பேராசிரியர் அதியமான் அவர்களுக்கும் நம்முடைய நன்றி கலந்த வாழ்த்துகள்...

ராதா பச்சையப்பன்:
நல்ல விளக்கம். நெசவாளர்களின், திறமையோடு அவர்களின் ஏழ்மையும்... மனம் கலங்குகிறது

17 ஜனவரி 2021

ஜாசின் தமிழ்ப்பள்ளி ரேனுஷா ஆனந்த்

17.01.2021

மலாக்கா ஜாசின் தமிழ்ப்பள்ளியில் பயின்ற ரேனுஷா ஆனந்த் தற்சமயம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். அவரின் திறமைகளை அடையாளம் காட்டியது ஜாசின் தமிழ்ப்பள்ளி என்று புகழாரம் செய்கிறார்.

தமிழ்ப் பள்ளிகளைத் தவிர்த்து விட்டு மற்ற மற்ற மொழிப் பள்ளிகளில் நம் இன மாணவர்கள் அதிகம் சேர்த்த காலம் மலை ஏறி வருகிறது. இப்போது தமிழ்ப் பள்ளிகளில் நம் மாணவர்களைச் சேர்க்கும் காலம் கரை சேர்ந்து வருகிறது.

தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் அதே வேளையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்றுவதும் நம் கடமையாகும். தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

தமிழ்ப் பள்ளியே நம் தேர்வாக அமையட்டும் என்ற உயரிய சிந்தனையில் இந்தியப் பெற்றோர்கள் ஆக்ககரமாகச் செயல்பட வேண்டும். மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த வேளையில் நம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு. அதுவே மலேசியத் தமிழர்களின் தேர்வு. மாணவி ரேனுஷா ஆனந்த் அவர்களுக்கு மலேசியம் புலனம் தம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தனசேகரன் தேவநாதன்: வாழ்க வளர்க... தமிழோடு உயர்வோம்

வெங்கடேசன்: தங்க மகளுக்கு மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் இறைவன் அருளால்... வாழ்க வளமுடன்...

ரஞ்சன் கங்கார் பூலாய்: தமிழ்ப்பள்ளிக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் மாணவிக்கு... வாழ்த்துகள்...

கரு ராஜா:
வாழ்த்துகள்

ராதா பச்சையப்பன்:
வாழ்த்துகள்

பாரதிதாசன் சித்தியவான்: வாழ்த்துகள்