07 பிப்ரவரி 2021

தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா - பொய்யான தகவல்கள்

06.02.2021

தமிழ்ப்பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் ஆக்ககரமான பணிகள் இப்போது நாடு முழுவதும் நடக்கின்றன. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் முழக்கமும் நேர்த்தியான இயக்கமும் சூடுபிடிக்கும் சூழ்நிலை மெல்ல உருவாகி வருகின்றது.

இம்மாதிரி நேரத்தில் தமிழ்ப் பள்ளிகள் மீது நம்பிக்கை தருகின்ற செய்திகள், தகவல்கள், காணொளிகள் ஆகியவைக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதிகமாக வெளியிட வேண்டும். பகிர வேண்டும்.

அதை விட்டுவிட்டு "தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா... தமிழ்ப்பள்ளிகள் அழிந்துபோகும்... என்று எச்சரிக்கை மணி" அடிப்பது தேவையற்றது.

ஆதாரம் இல்லாத பொய்யான விபரங்களைப் பரப்புவது நல்லதல்ல. இதனால், தமிழ்ப்பள்ளியை நம்பிக்கையோடு தேர்வு செய்துள்ள பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்ப்பள்ளியை நம்பியவர்கள் கூட திரும்பி ஓடுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும்.

கல்வி அமைச்சின் தகவல், புள்ளி விவரம் என்று சொல்லி ஆதாரம் அற்ற தகவல்களையும் கணக்குகளையும் பரப்புவதையும் மக்களைக் குழப்புவதையும் நிறுத்த வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகள் அழிந்து போகும் என்று கணக்குகள் காட்டி அச்சுறுத்தும் பொறுப்பற்ற போக்கு நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நல்ல. (Positive) தகவல்களை அதிகம் வழங்க வேண்டும்.

தற்போது நமது நாளிதழ்கள், மின்னல் எப்.எம் & டி.எச்.ஆர் ராகா வானொலி, தொலைக்காட்சி 2, பெர்னாமா ஆகிய அனைத்து ஊடகங்களும் சிறப்பான பரப்புரைப் பணிகளை செய்ய தொடங்கி விட்டன. இதன்வழி மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம்.

இதோடு தமிழ்ப் பள்ளிகளின் சாதனைகள், வெற்றிக் கதைகள், வசதிகள், கற்றல் கற்பித்தல் வளர்ச்சிகள், தற்போது இணையவழி கற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பள்ளிகளையும் மாணவர்களையும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. நமது ஊடகங்கள் மிகச் சிறப்பாக இதைச் செய்கின்றன.

தமிழ்ப்பள்ளிக்கு ஆக்கமான காரியங்கள் மட்டும் செய்வோம். எச்சரிக்கை மணி அடிக்கிறோம் என்று நினைத்து சாவு மணியை யாரும் அடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

உரைப்பு மிளகாய் உளறல் மனிதர்கள்

06.02.2021

உலகத்திலேயே மிக உரைப்பான மிளகாய் கரோலினா ரீப்பர் (Carolina Reaper குண்டு மிளகாய்). இதன் உரைப்புத் தன்மை 1,569,300 SHU. உரைப்புத் தன்மையைக் கணக்கிடுவதற்கு Scoville Heat Units எனும் அளவையைப் பயன்படுத்துகிறார்கள்.

உலகிலேயே ஆக உயர்ந்த உரைப்புத் தன்மை அந்தக் கரோலினா ரீப்பர் குண்டு மிளகாய்க்கு உண்டு. அந்த மிளகாய் வகையில்: Trinidad Scorpion Moruga; Pot Douglah; Pot Primo; Trinidad Scorpion Butch T; Naga Viper; Ghost Pepper; Pot Barrackpore; Pot Jonah; Red Savina Habanero எனும் கொடும் உரைப்பு மிளகாய்கள் உள்ளன.

ஒரு சாமானிய மனிதர் ஒரு குண்டு மிளகாய் சாப்பிடலாம். சமயங்களில் அதுவே உயிருக்கு ஆபத்தாகவும் அமையலாம்.

2018-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒருவர் (34 வயது) ஒரே ஒரு மிளகாய் சாப்பிட்டு பல நாட்கள் மருத்துவமனையில் கிடந்தாராம். அவருக்கு thunderclap எனும் தலைவலி. உயிர் போகும் ’debilitating severe headaches’ தலைவலி. அப்படியே Reversible cerebral vasoconstriction syndrome எனும் நோய்க்குறி.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது என்னென்னவோ உளறி  இருக்கிறார். அதில் தற்புகழ்ச்சி புகழாரங்கள். மூளைதான் மயக்க நிலையில் இருக்கிறதே. அதனால் என்ன பெருமை பேசினார் என்று அவருக்கே தெரியவில்லை போலும். சரி. விசயத்திற்கு வருகிறேன்.

மனித மூளையில் பெருமூளை சிறுமூளை எனும் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கு இடையில் மெடுல்லா எனும் மூளைத் தண்டு உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா மனித இனத்தவர்களுக்கும் அதே மூளைதான். அதே மூளைத் தண்டு தான்.

ஆனால் ஒரு சில இனத்தவருக்கு மூளைத் தண்டுக்குப் பதிலாக கரோலினா ரீப்பர் குண்டு மிளகாய் போல மூளைத் தண்டு இருக்கலாம்; குண்டு மிளகாய் போல இயங்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு சில இனத்தவர் அண்டை நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த காலத்தில் இருந்து அந்த குண்டு மிளகாய் கூடவே அவர்களின் மூளையில் ஒட்டிக் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

ஆகவே அவர்களைக் குறை சொல்லி ஒன்றும் இல்லை. கரோலினா ரீப்பர் குண்டு மிளகாயைத் தான் குறை சொல்ல வேண்டும். அந்தக் குண்டு மிளகாய் காரம் குறையும் வரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டுதான் இருப்பார்கள். காரம் குறைய இன்னும் பல மாமாங்கங்கள் பிடிக்கலாம்.

குமரிக் கண்டம் அவர்களின் பாட்டன் சொத்து என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

சிந்துவெளியில் அவர்களின் பாட்டிமார்கள் பட்டம் விட்டார்கள் என்று உளறலாம்.  ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

ஐஸ்லாந்தில் அவர்களின் மாமா ஐஸ்கிரீம் விற்றார் என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள்.

இத்தாலியில் அவர்களின் அத்தைமார்கள் இட்லி சுட்டு விற்றார்கள் என்று உளறலாம். ஆமாம் என்று தலையை ஆட்டுங்கள். வேறு வழி இல்லை.

அதே சமயத்தில் அவர்களின் உளறல்களை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட மறந்துவிடவும் வேண்டாம். அதனால் அவர்களுக்கும் பெருமை. நமக்கும் நிம்மதி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.02.2021


 

காஜாங் தமிழ்ப்பள்ளி சாதனை - அனைத்துலக ரோபோட்டிக் போட்டி 2021

06.02.2021

தென் கொரியாவில் நடை பெற்ற அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் காஜாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.

இணையம் வழி நடைபெற்ற இப்போட்டியில் பல நாடுகள் கலந்து கொண்ட வேளையில், ரோபோட்டிக் குழு பிரிவில் காஜாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ரேகன் பிள்ளை அந்தோணிப் பிள்ளை, முகேஷ் குமார் சரவணகுமார், கவியரசு தமிழரசு ஆகியோர் தங்கம் வென்று உள்ளனர்.

திரிஷர் நிஷேல் குமார், அரவிந்தன் ஜெய்சந்திரன், யுவனேஸ்வர் சண்முகசீலன் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

தர்ஷன் ஜெயசீலன், பித்திகா அரிகிருஷ்ணன், மோஷிகன் ரமேஸ் ஆகியோர் அடங்கிய மாணவர் குழு வெண்கலப் பதக்கம் வென்றது.

2018, 2019 பிலிப்பைன்ஸில் நடந்த இப்போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இம்முறை 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று காஜாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து இருப்பதாகத் தலைமையாசிரியர் ஜோன் பொஸ்கோ தெரிவித்தார்.

புறப்பாட நடவடிக்கை துணை தலைமையாசிரியர் கு. நெடுஞ்செழியன், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சி. காந்திமதி, பயிற்றுநர் விக்னேஸ்வரன் ஆகியோர் மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.
 

 

 

அகங்காரம் எனும் படகு

06.02.2021

இந்த உலகில் ஒவ்வொருவரும் அடுத்தவர்களை அதிகாரம் செய்து அவர்களை விட தான் உயர்வாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்.

தன்னை மிகவும் முக்கியமானவனாக எல்லோரும் கருத வேணடும் என்று நினைக்கிறார்கள். இது தான் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

ஒருவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தான் வெளிப்பட வேண்டும் என்று மன இறுக்கம் கொள்கின்றான். தான் நினைப்பது போல் நடக்க வில்லை என்றால் துன்புறுகிறான். கவலைப் படுகிறான். மன நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.

அவனுடைய அகங்கார மனமே இந்தத் துன்பங்களுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம். இப்படி அகங்கார மனம் படைத்தவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போடுகின்றனர். பணம், அதிகாரம், பதவி, அரசியல் பலம், பொய் நடிப்பு, கொள்கை; ஏன் மதத்திலும் கூட ஒழுக்கத்திலும் கூட போட்டி போடுகிறார்கள்.

தான்தான் இந்த உலகத்தின் மையம் என்று எல்லோரும் கருத வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள். இந்த விபரீதமான அகங்கார எண்ணம்தான் உங்கள் பிரச்சினைகளின் ஆணிவேர்.

இதனால் உங்களைத் தவிர எல்லோரும் பகைவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் எல்லோரும் ஒரே படகில் தான் பயணம் செய்கிறார்கள். அது தான் அந்த அகங்காரப் படகு.

-ஓஷோ



06 பிப்ரவரி 2021

இயற்கையை ரசிப்போம்

05.02.2021

பதிவு செய்தவர் - தேவி, கடாரம்

சின்ன வயதில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் போது எல்லாம், ஒரு புறம் மனத்தில் வியப்பாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா என்று தோன்றும்.

“அசோகர் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார், சத்திரங்களைக் கட்டினார்” என்று ஒரே வாய்பாடு. எப்போது பார்த்தாலும் மரம், செடி, கொடிகளைப் பற்றித்தான் பேசுவார்கள்.


இப்போதுதான் அந்த வரிகளின் உண்மையான ஆழம் தெரிகிறது. பொருளும் புரிகிறது. இப்போது பாருங்கள். எங்கு பார்த்தாலும் நிஜக் காடுகள் அழிக்கப் படுகின்றன., கான்கிரீட் காடுகள் உருவாகி வருகின்றன. அதனால் உலகின் வெப்ப நிலையும் உயர்ந்து வருகிறது.


மனித உறவுகளைப் போல இயற்கை மீதான நமது நேசமும் பாசமும் ஆழமாகக் காலா காலத்திற்கும் தொடர வேண்டும். இது உலக மக்கள் பலருக்குப் புரிவது இல்லை.

இன்று நம்மில் பலர் மிக வேகமாக இயற்கைச் சூழலை மாற்றி வருகிறார்கள். இயற்கைக்கு நம் உதவி தேவை இல்லை. ஆனால் நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை.


நாம் வாழும் இந்த உலகின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கி இருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்க வேண்டியது இதுதான்: “இயற்கை தான் நமது வாழ்க்கை”.

1964-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங். அவரிடம் ஒருமுறை “நீங்கள் நாளை இறந்து போகப் போவதாக அறிந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவரின்பதில்: “ஒரு மரம் நடுவேன்”.


மரம் நம் வாழ்க்கையின் குறியீடு. நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப்பாறுவார்கள். அடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை சிறிதும் அற்றவர்கள் தான் இயற்கையைப் பாழாக்குவார்கள்.

மலைகளை அழிப்பார்கள். மரங்களை வெட்டுவார்கள். மணலை அள்ளுவார்கள். இவர்களைவிட மானிட இனத்திற்குப் பெரிய துரோகிகள் யாரும் இல்லை.

சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: “நிழல் தர மரம் இல்லையா? கொளுத்தும் வெயிலைக் குற்றம் சொல்லக் கூடாது, உன்னைத் தான் சொல்ல வேண்டும்”.