06.02.2021
தமிழ்ப்பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் ஆக்ககரமான பணிகள் இப்போது நாடு முழுவதும் நடக்கின்றன. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் முழக்கமும் நேர்த்தியான இயக்கமும் சூடுபிடிக்கும் சூழ்நிலை மெல்ல உருவாகி வருகின்றது.
இம்மாதிரி நேரத்தில் தமிழ்ப் பள்ளிகள் மீது நம்பிக்கை தருகின்ற செய்திகள், தகவல்கள், காணொளிகள் ஆகியவைக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதிகமாக வெளியிட வேண்டும். பகிர வேண்டும்.
அதை விட்டுவிட்டு "தமிழ்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா... தமிழ்ப்பள்ளிகள் அழிந்துபோகும்... என்று எச்சரிக்கை மணி" அடிப்பது தேவையற்றது.
ஆதாரம் இல்லாத பொய்யான விபரங்களைப் பரப்புவது நல்லதல்ல. இதனால், தமிழ்ப்பள்ளியை நம்பிக்கையோடு தேர்வு செய்துள்ள பெற்றோர் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்ப்பள்ளியை நம்பியவர்கள் கூட திரும்பி ஓடுவதற்கு வாய்ப்பு உருவாகிவிடும்.
கல்வி அமைச்சின் தகவல், புள்ளி விவரம் என்று சொல்லி ஆதாரம் அற்ற தகவல்களையும் கணக்குகளையும் பரப்புவதையும் மக்களைக் குழப்புவதையும் நிறுத்த வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகள் அழிந்து போகும் என்று கணக்குகள் காட்டி அச்சுறுத்தும் பொறுப்பற்ற போக்கு நிறுத்தப்பட வேண்டும்.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் இயக்கத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் நல்ல. (Positive) தகவல்களை அதிகம் வழங்க வேண்டும்.
தற்போது நமது நாளிதழ்கள், மின்னல் எப்.எம் & டி.எச்.ஆர் ராகா வானொலி, தொலைக்காட்சி 2, பெர்னாமா ஆகிய அனைத்து ஊடகங்களும் சிறப்பான பரப்புரைப் பணிகளை செய்ய தொடங்கி விட்டன. இதன்வழி மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும் என்று நம்புவோம்.
இதோடு தமிழ்ப் பள்ளிகளின் சாதனைகள், வெற்றிக் கதைகள், வசதிகள், கற்றல் கற்பித்தல் வளர்ச்சிகள், தற்போது இணையவழி கற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பள்ளிகளையும் மாணவர்களையும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. நமது ஊடகங்கள் மிகச் சிறப்பாக இதைச் செய்கின்றன.
தமிழ்ப்பள்ளிக்கு ஆக்கமான காரியங்கள் மட்டும் செய்வோம். எச்சரிக்கை மணி அடிக்கிறோம் என்று நினைத்து சாவு மணியை யாரும் அடிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக