17 மார்ச் 2021

வளமெலாம் பழைய சோற்றிலே - பாதாசன்

17.03.2021

பதிவு செய்தவர்: கரு. ராஜா, கோலாலம்பூர்

வீட்டுச் சமையலை விரும்பெனக் கூறினால்
நாட்டுக் காரியின் நாசி லெமா வே
வேண்டும் என்கிறாள் வீம்புடன் பெயர்த்தி !
யாண்டும் பலரிடம் இதுவே நடப்பு !
"நாட்டுக் காரி நாசி யும் வேண்டாம் ;
நீட்டு காசை நினைத்த படிநான்
முட்டை ரொட்டி சானாய் முழுங்கணும்"
முட்டி அழுகிறான் மூத்த பெயரனும் !
"வாந்தான் மீயை வாங்கிவா தாத்தா
'ஏன்தான் ?' கேட்டால் எனக்கது பிடிக்கும்"
என்கிறான் இன்னோர் இளைய பேரனும் !



மிளகு ரசத்தைக் கேட்டால் மீசூப்
வழங்கி டட்டுமா ? மனைவி கேட்கிறாள் !
தின்றிட பெர்கர் சிறப்பாம்பீசா
மென்றிடச் சுவைதரும் மேகி - இப்படித்
தமிழர் சமையலில் சம்பந்த மில்லா
அமிலம் கலந்த அத்தனை உணவிலும்
ஆர்வம் காட்டி அசத்தும் தமிழினம்
தீர்வாய்க் கெண்டகி சிக்கனு க் (கு) அடிமை
ஓர்வாய் மெக்டொனால்ட் உண்ணா விடிலோ
யார்வா யிலும்சுவை இருப்பதே இல்லை !
இத்தனை நடந்தும்  இனும்நான் இருந்திட
மொத்தமோர் காரணம் முந்தி மொழிகிறேன் !
பச்சை நீரினைப் பாலாய்க் கருதியான்
பச்சைவெங் காயம் பக்கம் வைத்துச்
சோற்றுடன் கலந்து சுவைத்தே உண்பதால்
ஆற்றங் கரைச்செடி போலவே செழிப்புடன்
நலத்துடன் வாழ்கிறேன் நாளும்
வளமெலாம் வீட்டுப் பழைய சோற்றிலே !


கவிஞர் பாதாசன்


 

ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி கணேசன்

17.03.2021

பதிவு செய்தவர்: இயக்குநர் விஜயசிங்கம்

’நான் மேடையிலே போடாத வேஷம் இல்லை. அர்ஜுனனா நடிச்சிருக்கேன், அரிசந்திரனா நடிச்சிருக்கேன். நான் போடாத வேஷம் இது ஒன்னுதான்ப்பா.

இன்னிக்கு தான்ப்பா என் தம்பிக்கு முன்னாலேயே அண்ணனா நடிக்க போறேன்' என்று ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் தம்பியாக நடித்த ஸ்ரீகாந்திடன் சொல்வார் ரங்கதுரையாக வாழ்ந்த நடிகர் திலகம்.

அதே படத்தில் டி.கே. பகவதி அவர்களிடம் "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், ராத்திரியிலே ராஜா வேஷம் போட்டு நடிக்கிறதுலே இருக்கிற இன்பம் வேறு எதிலேயும் இல்லை" என்று சொல்லும் போது நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், பக்தியையும் உணர்த்தினார்.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வராமல் இருக்குமா? காட்சியின் ஆரம்பத்தில் காட்டும் கம்பீர நடை, முடிவில் தலை குனிந்து தளர்ந்த நடை... பிறவி நடிகரையா🙏

திரை உலகின் மிக சிறந்த நடிகன் என்ற பெயரும், புகழும் பெற்ற பின்பும் அவர் தனது முதல் காதலான நாடக மேடையை என்றும் மறக்கவில்லை.

சினிமாவுக்கு வந்த பின்னரும் பல படங்களில் ஓரங்க நாடகங்களில் நடித்து தன் நாடக நடிப்பென்னும் தாகத்தைத் தீர்த்து கொண்டதோடு மட்டுமில்லாமல், ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்தார்.

சேரன் - செங்குட்டுவன் (ராஜா ராணி), ஓதெல்லோ ஆங்கில வசனம் பேசி நடித்த இரத்த திலகம், சாம்ராட் அசோகனாக அன்னையின் ஆணையில், சீசராக சொர்கம் படத்தில், சலீமாக, சாக்ரடீசாக, வீர வசனம் பேசும் சத்ரபதி சிவாஜியாக (ராமன் எத்தனை ராமனடி)

'ராஜபார்ட் ரங்கதுரை'யில் ஒரு நாடகக் கலைஞன் தன் தொழில் நிலைத்து நிற்க சந்திக்கும் சோதனைகளை நடிகர் திலகம் மிக அருமையாக வெளி படுத்தி இருப்பார்.

தன் 32-ஆவது வயதில் 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக ஆசிய-ஆப்ரிக்க திரை விழாவில்  சிறந்த நடிகர் பட்டம் வாங்கிய முதல் இந்தியன் என்ற பெருமை பெற்ற நடிகர் திலகம் தான்.  

படங்களில் ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்த கால கட்டத்திலும் பல மேடை நாடகங்களில் நடித்தார். தனது 18-ஆவது வயதிலேயே 'சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்' நாடகத்தின் மூலம் 'சிவாஜி' கணேசன் என்று பெரியாரால் அழைக்கப் பட்டவர் அல்லவா நடிகர் திலகம்!

ஒரு கலைஞனுக்கு தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட, தன் நடிப்பிற்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை.

ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை நடிகர் திலகம்.

தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடத்தினார்.

வியட்நாம் வீடு, தங்க பதக்கம் போன்ற நாடகங்களில் நடித்தார். பின்னர் அவை திரைபடமாக வந்து சக்கை போடு போட்டன. தனது சிவாஜி நாடக மன்றம் மூலம் பல நடிகர்களுக்கு வாய்பளித்தார், அவர்களின் வருமானத்துக்கு வழி வகுத்தார். தனது திரை படங்களிலும் பல நாடக  நடிகர்களுக்கு வாய்பளித்தார்.

நாடகங்களிலும், வெள்ளிதிரையில் மட்டுமில்லாமல், சின்ன திரையிலும் தோன்றி நம்மை அவர்  மகிழ்வித்திருக்கிறார்.

சிவாஜி மகராஜ் சத்ரபதியாக பட்டம் சூட்டி 300 ஆண்டுகளை கொண்டாட 'சத்ரபதி சிவாஜி' என்ற பெயரில் 1974-ஆம் ஆண்டில் 30-நிமிட படத்தை ஏ.வி.எம். நிறுவனம், பம்பாய் தூர்தர்ஷனுக்காக தயாரித்தது. 1974-ஆம் ஆண்டு ஜுலை 21-ஆம் தேதியில் அது ஒளிபரப்பபட்டது.

சிவாஜி சிவாஜியாக தோன்றி அற்புதமாக நடித்த மோனோ acting மிக பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கான எல்லா தயாரிப்புச் செலவையும் நடிகர் திலகம் தானே ஏற்றுக் கொண்டார் என்பது கூடுதலான செய்தி.

சிவாஜியாக நடித்து புகழ் பெற்று திரை உலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த பூமியை விட்டு (நம்மை விட்டு போகவில்லை. இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார்) பிரிந்ததும் ஒரு ஜூலை 21 தான்!!😢

நடிகர் திலகம் வெள்ளித் திரையில் அடைந்த புகழை போலவே, நாடக மேடையிலும் பல புகழ் பெற்ற கதாபாத்திரங்களை, தேசப் பக்தர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து நம்முடன் வாழ்ந்து வந்தார்.

அவர் அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கா விட்டால், கட்டபொம்மனையும், கொடி காத்த குமரனையும், சத்ரபதி சிவாஜியையும், பகத் சிங்கையும், வாஞ்சிநாதனையும் அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது.

தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழ் நாட்டின் பெருமை. அவர் போல் தொழில் பக்தி கொண்டவர்கள் உண்டோ?🙏

அனைவரும் படித்த, கேட்ட செய்தியாக இருக்கலாம். ஆயினும், நடிகர் திலகம் புகழ்  பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும், எழுதினாலும் அலுப்பதில்லையே! அதுதான் அவரின் மகிமை.


மலேசியத் திரைப்பட இயக்குநர் விஜயசிங்கம்


மலேசியம் புலன அன்பர். மலேசியாவில் பல மேடை நாடகங்களை அறங்கேற்றம் செய்து தன் திறமையை உணர்த்தியவர்.

தமிழ் மலாய் ஆங்கில மொழிகளில் நிறைய தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்தவர். கதாசிரியர்; வசனகர்த்தா; இயக்குநர்; தயாரிப்பாளர். இப்படிப் பல்வேறு பரிமாணங்கள். நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகர்.

தமிழகத்தில் ‘நினைவுகள் மறைவதில்லை’ என்ற திரைப்படத்தை பெரும் கனவுகளுடன் இயக்கியவர். 2002-ஆம் ஆண்டு Film Station Productions நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். 




15 மார்ச் 2021

கல்வெட்டுகளில் தேவதாசி நூல் விமர்சனம்

14.03.2021

பதிவு செய்தவர்: முனைவர் க.சுபாஷிணி

வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சாந்தினிபி அவர்கள் எழுதி, விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் ''கல்வெட்டுகளில் தேவதாசி'.

தேவதாசி அல்லது தேவரடியார் என்று குறிப்பிடப் படுவோர் யார் என்ற கேள்வியும், அதன் பின்னணியிலான சர்ச்சைகளும், அவர்களைப் பொதுவாகவே பாலியல் தொழில் சார்ந்தவர்களாக எண்ணக் கூடிய சிந்தையும் அதிகரித்து வெளிப்பட்ட சூழலில், தேவரடியார் என்பவர் யார் என்பதை கல்வெட்டுகளின் சான்றுகளின் அடிப்படையை வைத்து ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி இருக்கின்றார் நூலாசிரியர்.

நூலின் 12 தலைப்புகளில் தேவரடியார் தொடர்பான செய்திகள் ஆராயப் படுகின்றன. தேவரடியார் தோற்றம், தேவரடியார்களின் பெயர்கள், அவற்றிற்கான விளக்கம், கோயிலுக்குள் பணிசெய்ய வந்தது எப்படி, கோயில்களில் தேவரடியார்கள், அவர்களது கடமை, அவர்களது போராட்டம், சிறப்பான செயல்பாடுகள், அவர்களது பொருளாதார சமூக நிலை, கோயில்களில் கொள்ளைகளும் நடந்தன போன்ற செய்திகள், கால ஓட்டத்தில் தேவரடியார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், அம்மாற்றத்தின் பின்னணி, தேவதாசிகள் எனப் படுவோருக்குள் உள்ள பிரிவு என நூல் விரிவாக ஆராய்கின்றது.

நூலில் மிக முக்கியமாக தேவரடியார் - தேவதாசி என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கம் வழங்கப் படுகின்றது. அதனை அடுத்து தேவரடியார் எனப்படுபவர் அல்லது தேவர் மகளார் என மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெயரிடப்பட்ட பெண்கள் எத்தகைய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், அவர்களைப்பற்றி பல்வேறு கோயில்களில் வழங்கப்பட்டுள்ள கல்வெட்டுச் சான்றுகள் பற்றிய செய்தி என்பவை நூலில் பல இடங்களில் விளக்கப் படுகின்றன.

நூலில் தனியொரு அத்தியாயமாக `பொருளாதார சமூக நிலை` என்ற தலைப்பில் நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்கள் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. `அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு` என்ற அறிவுக்கு ஒவ்வாத பழமொழி கடந்த நூற்றாண்டில் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் வந்திருக்க வேண்டும்.

ஏனெனில் காலம் காலமாக தங்கள் குடும்ப வாழ்க்கையின் பொருளாதார நிலையை தக்கவைக்க பெண்கள் விவசாயத்திலும், தொழிற்சாலைகளிலும், வெளி இடங்களிலும், பொது இடங்களிலும், பணிபுரிந்த செய்திகளை நாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அந்தப் பணியை செய்வதில் இச்சிறு நூல் பங்களித்துள்ளது.

தேவரடியார் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட பெண்களின் நிலை அவலநிலைக்கு மாறியதற்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசியல் நிலைத்தன்மை முக்கிய காரணமாகிறது.

குறிப்பாக விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் கோயில் கலாச்சாரம் என்பது மாற்றம் கண்டு, பெண்கள் பாலியல் ரீதியாக குறிவைத்து தாக்கப்படும் அவலநிலை ஏற்பட்டது.

தேவரடியார் எனும் சொல்லில் `ர`கரம் நீக்கப்பட்டு `தேவடியாள்` என மாறி, பரத்தை எனும்  சொல்லாக நம் சமூகத்தில் ஒரு சொல் உருவாகியிருப்பது அவலம். தமிழைப் சிறப்பித்து செம்மொழியைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

அழுக்கேறிய சிந்தனையுடன் தேவரடியார் என்ற சொல்லைச்  சிதைத்ததோடு அதன் பொருளையும் சிதைத்து பெண் சமூகத்திற்குக் கேட்டினை விளைவித்த செயலை நாம் கண்டிக்க வேண்டியது அவசியம். அச்சொல்லை நம் பேச்சு வழக்கிலிருந்தே தமிழ் மக்கள் ஒதுக்க வேண்டியதும் தமிழுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது.  மிகப்பழமையான பல செய்திகளைக் கல்வெட்டு சார்ந்து கூறும் ஆசிரியர்,  இக்கால மற்றும் இடைக்கால அரசியல் மற்றும் சமூக செய்திகளையும் நூலில் பல இடங்களில் இணைத்திருக்கிறார்.

அத்துடன் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டங்கள், கடந்த நூற்றாண்டில் பல தளங்களில் பாலியல் தொழிலுக்கு எதிராக நிகழ்ந்த சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமன்றி  சில மதம் சார்ந்த அமைப்புகளின் `நாட்டிய எதிர்ப்பு

இயக்கம்` போன்ற செய்திகளும் இணைக்கப் பட்டிருப்பது சிறப்பு. இது பாராட்டுதலுக்குரியது. நூலில் பல சான்றுகள் பேசப்படுகின்றன. ஆனால் இந்த நூலில் கூறப்படுகின்ற சான்றுகளுக்கான துணை குறிப்புகளோ அல்லது `சைட்டேஷன்` என்று சொல்லப்படுகின்ற சான்றுகள் தொடர்பான ஆவணங்கள் பற்றிய செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரும் குறையாகவே காண்கிறேன்.

இந்த நூல் எடுத்துக் கொண்ட தலைப்பு ஆழமானது, கணமானது. இத்தகைய தலைப்பு பற்றி கூறுகின்ற நூல் ஒவ்வொரு கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும்,  அரசியல் தொடர்பான செய்திகள் கூறப்படும் போது அல்லது வரலாற்று நிகழ்வுகள் பதியப்படும் போது அவை பற்றிய சரியான துணை குறிப்புகளையும் பட்டியலிட்டிருக்க வேண்டும்.

அது இடம்பெறாமல் இருப்பது இந்த நூலில் நான்  காணும் மிகப்பெரிய ஒரு குறை என்றே கருதுகிறேன்.ஆசிரியர் தனது அடுத்த பதிப்பில் இந்தக் குறையை நீக்கி எல்லாச் சான்றுகளுக்கும் முறையான துணை குறிப்புகளை வழங்கி இந்த நூலின் தரத்தை மேலும் உயர்த்துவார் என்று நம்புகின்றேன்.

ஏறக்குறைய 102 பக்கங்கள் கொண்ட இந்த நூல் கணமான பொருளை, வரலாறு, சமூகவியல், அரசியல் என்ற முப்பரிமாணத்தில் அலசி ஆராய்கின்றது. தமிழ் ஆய்வுலகத்திற்கு, அதிலும் குறிப்பாக சமூகவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு இந்த நூல் நிச்சயம் பயனளிக்கும்.


ஜூலியஸ் சீசர் படுகொலை நாள் மார்ச் 14

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

கி.மு. 44-ஆம் ஆண்டு இன்றைய நாளில் ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப் பட்டார்.

ரோமக் குடியரசு தோற்றுவிக்கப்பட்ட பின் ஆண்டுக்கு ஒரு முறை செனட் தேர்ந்து எடுக்கும் இரண்டு கான்சல்கள் இணைந்து ஆட்சி நடத்துவார்கள். கி.மு.59-இல் கான்சலாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட சீசர், முந்தைய ஆட்சியாளர்களைப் போலன்றி, எளிய மக்களின் நலனில் அக்கறை காட்டினார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்கினார். நிலச் சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு விளைநிலங்கள் வழங்கினார்.

வேலையின்மை, வன்முறை, ஊழல் ஆகியவை மலிந்து இருந்த ரோம் நகரில், சீசர் வேலைகளை வழங்கியதுடன், நகரையும் ஒழுங்கு படுத்தினார். நாள்காட்டியைச் சீரமைத்து ஜூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். பிரதேச ஆளுநர்களின் பதவிக் காலத்தைக் குறைத்துச் செனட்டை விரிவாக்கினார்.

இத்தகைய செயல்பாடுகளைத் தடையின்றித் தொடர்வதற்காகத் தன்னைச் சர்வாதிகாரியாகவும் செனட்டையே அறிவிக்கச் செய்தார். இவற்றால் இராணுவம், எளிய மக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும், ஏற்கெனவே இருந்த ஆளும் வர்க்கத்தினரால் ஏற்க முடியவில்லை.

பேரரசர் எனும் அளவுக்குச் செய்யப்பட்ட மரியாதைகளைச் சீசர் மறுத்தாலும், அவரின் ஒப்புதலுடன் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, குடியரசைக் காப்பதற்காக அவரைக் கொலை செய்யச் சதி செய்தனர்.

மார்ச் ஐடஸ் (15) என்பது பாரம்பரியமாக, ரோமானியர்கள் கடன்களைத் தீர்ப்பதற்கான நாளாகும். அந்த நாளில், 60 சதிகாரர்கள் சூழ்ந்து, சீசரின் உடலில் 23 இடங்களில் கத்தியால் குத்தினர்.

அன்றைக்கு அவைக்குச் செல்ல வேண்டாம் என்று சீசரின் மனைவி தடுத்த போதும், அவரை அழைத்து வந்தது டெசிமஸ் புரூட்டஸ்தான். அதனால்தான், இரண்டாவது ஆளாக புரூட்டஸ் கத்தியால் குத்தியதும், 'நீயுமா புரூட்டஸ்' என்று சீசர் கூறியதாக சேக்ஸ்பியர் எழுதினார்.

ஆனால், உண்மையில் சீசர் எதுவுமே சொல்லவில்லை என்றும், 'நீயுமா குழந்தையே' என்று சொன்னதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.

சதிகாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மக்கள் கிளர்ந்து எழுந்ததில், அவர்கள் அனைவரும் நாட்டை விட்டே ஓட நேர்ந்தது. வாரிசாக சீசர் அறிவித்து இருந்த ஆக்டேவியஸ் (அகஸ்டஸ் சீசர்) பேரரசராகி, குடியரசே இல்லாமல் போனது.

நாட்டை விரிவாக்குவதில் தீவிரமாக இருந்த சீசர் கொல்லப் படாமல் இருந்து இருந்தால், அலெக்சாண்டர் போல ரோமப் பேரரசை விரிவாக்கம் செய்து இருக்கக் கூடும். ஐரோப்பிய வரலாறேகூட வேறு மாதிரி இருந்து இருக்கலாம் என்கிறார்கள்!

சில கூடுதல் தகவல்கள்:


பூம்புகார் படத்தின் 'போகாதே, போகாதே, என் கணவா...' போலவே, கெட்ட கனவுகளைக் கண்டதாகக் கூறி, அன்றைய நாளில் அவைக்குச் செல்ல வேண்டாமென்று அவரின் மனைவி தடுத்தார்.

சீசர் நண்பராகக் கருதிக் கொண்டு இருந்த புரூட்டஸ்தான், ’பெண்களின் கனவுக்கு எல்லாம் சீசர் முக்கியத்துவம் தரலாமா’ என்று கூறி (சீண்டி) அழைத்துச் சென்றார்.

சீசர் அவைக்குள் நுழைந்த உடனேயே, நாடு கடத்தப் பட்டிருந்த தன் சகோதரரை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கும் சாக்கில், டிலியஸ் சிம்பர், சீசரின் தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவரது அங்கியைப் பிடித்து இழுத்ததால், சீசர் அசைய முடியாமல் போன நேரத்தில், சூழ்ந்து கொண்டு, கத்திகளால் குத்தினர்.

சீசரைக் கொன்றபின், கொன்ற செனட்டர்கள், மக்கள் மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு, 'வெற்றி வெற்றி, குடியரைக் காப்பாற்றி விட்டோம்' என்று கூவியபடி தெருக்களில் செல்ல, வீடுகளின் கதவுகளை அடைத்துக் கொண்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேயில்லை.

கொல்லப் பட்டபின் நடைபெற்ற குழப்பங்களில், சீசரின் உடல், அவையின் படிகளிலேயே மூன்று மணி நேரத்திற்குக் கிடந்தது. சீசரின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, புரூட்டஸ், கேஷியஸ் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கினர்.

நடுத்தர, கீழ்த்தட்டு வர்க்க மக்கள், தங்கள் நலனில் அக்கறை கொண்டவரை, ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறிய கூட்டம் கொன்று விட்டதாகப் பொங்கி எழுந்தது உள்நாட்டுப் போராகியது.

சீசர் வாரிசாக அறிவித்து இருந்த கையஸ் ஆக்டேவியஸ், 18 வயதே ஆகி இருந்தாலும், தெளிவான அரசியல் அறிவுகளைப் பெற்று இருந்ததால், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அரசுத் தலைவரானார்.

 

தமிழர் இனத்தின் மீது ஏன் வஞ்சனை?

15.03.2021

வெங்கடேசன்: அறிவு பூர்வமாக எதையும் அணுகுவது கிடையாது. சிறிய விசயத்திற்கு கூட உணர்ச்சி வயப்படுவது. அதற்கு உதாரணம் நம் சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகள். சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் கடையை அடித்து நொறுக்குவது 😭😭😭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முறையாக வளர்த்து இருந்தால் அடாவடித் தனங்கள் நடைபெறா. தலை சரியாக இருந்தால் வாலும் சரியாக இயங்கும்.

வெங்கடேசன்: நான் பார்த்த சில பெற்றோர்கள் நல்ல குணம் உடையவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் படுமோசமாக இருக்கிறார்கள் ஐயா 😭😭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மையாக இருக்கலாம். இருந்தாலும் கோழி முட்டை போடுவது எப்படி ஐயா கோழிக்குத் தெரியாமல் இருக்கும்?

வெங்கடேசன்: ஆகா என்ன உவமானம் ஐயா 🤭🤭🤭

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். மகன் செய்வது பெற்றோருக்குத் தெரியாமலா போகும். போற்றிப் போற்றி வளர்ப்பதை நாம் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறோம். ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் பக்கத்தில் இருக்கும் மட்டையைச் சார்ந்துதான் ஊறிக் கொண்டு இருக்கும்.

டாக்டர் ஜெயஸ்ரீ: இயந்திர கதியில் ஒடும் இவ்வுலகில் குழந்தைப் பராமரிப்புக்கு பெற்றோருக்கு நேரம் செலவிட நேரமில்லை; அவர்களுக்கு நேரமின்மை காரணம். எவ்வளவு நல்ல பெற்றோராய் இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி, தட்டித் திருத்தி கலந்து ஆலோசித்து சரி எது  தவறு எது என மாதிரிகளுடன் உணர்த்துகிற போது; பல்வேறு சூழ்நிலைகளில் நீண்ட நேரம் செலவிடுகிற போது; பெற்றோரைப் பார்த்து பிள்ளைகள் வழி நடப்பர்.

நீண்ட நேரம் பேசுகிற போது குழந்தைகளுக்கு எண்ணங்களைப் பகிரும் பழக்கத்தை போதிக்கிறோம். பின்னர் அதுவே பழக்கமாகி விட பிள்ளைகள் பகிரும் வழக்கமும் எடுத்துச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். இன்று என்னைப் பொருத்தவரை நேரமின்மை தான் பரம எதிரி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சரியாகச் சொன்னீர்கள். அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழலில் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்க நேரம் இல்லாமல் போகிறது. ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கிப் பிள்ளைகளுடன் பேச வேண்டும். அன்றைக்கு எங்கே போனார்கள். என்ன செய்தார்கள் என்பதைக் கண்டு அறிய வேண்டும்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் பெற்றோர் நம்மைக் கண்காணிக்கிறார்கள் எனும் அச்சம் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டே இருக்கும். தவறு செய்ய தயங்குவார்கள். தவறு செய்தாலும் பெற்றோரிடம் அறிவுரை கேட்பார்கள்.

பிள்ளைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தால் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அவர்கள் செய்வதே அவர்களுக்குச் சரி எனப் படும். தவறு செய்தாலும் அந்தத் தவறு சரி எனவே அவர்களுக்குத் தோன்றும்.

ஒரு குழந்தை வாழ்வது பெற்றோரின் கைகளில் உள்ளது. தாழ்வது சுற்றுச் சூழல்; நடைமுறைப் பழக்க வழக்கங்கள்; நண்பர்களிடம் உள்ளது.

வெங்கடேசன்: உண்மை தான் நீங்கள் சொல்வது. தற்போதய சூழ் நிலையில் இருவருமே வேலை செய்தால்தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் 👍