17.03.2021
பதிவு செய்தவர்: கரு. ராஜா, கோலாலம்பூர்
வீட்டுச் சமையலை விரும்பெனக் கூறினால்
நாட்டுக் காரியின் நாசி லெமா வே
வேண்டும் என்கிறாள் வீம்புடன் பெயர்த்தி !
யாண்டும் பலரிடம் இதுவே நடப்பு !
"நாட்டுக் காரி நாசி யும் வேண்டாம் ;
நீட்டு காசை நினைத்த படிநான்
முட்டை ரொட்டி சானாய் முழுங்கணும்"
முட்டி அழுகிறான் மூத்த பெயரனும் !
"வாந்தான் மீயை வாங்கிவா தாத்தா
'ஏன்தான் ?' கேட்டால் எனக்கது பிடிக்கும்"
என்கிறான் இன்னோர் இளைய பேரனும் !
மிளகு ரசத்தைக் கேட்டால் மீசூப்
வழங்கி டட்டுமா ? மனைவி கேட்கிறாள் !
தின்றிட பெர்கர் சிறப்பாம்பீசா
மென்றிடச் சுவைதரும் மேகி - இப்படித்
தமிழர் சமையலில் சம்பந்த மில்லா
அமிலம் கலந்த அத்தனை உணவிலும்
ஆர்வம் காட்டி அசத்தும் தமிழினம்
தீர்வாய்க் கெண்டகி சிக்கனு க் (கு) அடிமை
ஓர்வாய் மெக்டொனால்ட் உண்ணா விடிலோ
யார்வா யிலும்சுவை இருப்பதே இல்லை !
இத்தனை நடந்தும் இனும்நான் இருந்திட
மொத்தமோர் காரணம் முந்தி மொழிகிறேன் !
பச்சை நீரினைப் பாலாய்க் கருதியான்
பச்சைவெங் காயம் பக்கம் வைத்துச்
சோற்றுடன் கலந்து சுவைத்தே உண்பதால்
ஆற்றங் கரைச்செடி போலவே செழிப்புடன்
நலத்துடன் வாழ்கிறேன் நாளும்
வளமெலாம் வீட்டுப் பழைய சோற்றிலே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக