17.03.2021
பதிவு செய்தவர்: இயக்குநர் விஜயசிங்கம்
’நான் மேடையிலே போடாத வேஷம் இல்லை. அர்ஜுனனா நடிச்சிருக்கேன், அரிசந்திரனா நடிச்சிருக்கேன். நான் போடாத வேஷம் இது ஒன்னுதான்ப்பா.
இன்னிக்கு தான்ப்பா என் தம்பிக்கு முன்னாலேயே அண்ணனா நடிக்க போறேன்' என்று ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் தம்பியாக நடித்த ஸ்ரீகாந்திடன் சொல்வார் ரங்கதுரையாக வாழ்ந்த நடிகர் திலகம்.
அதே படத்தில் டி.கே. பகவதி அவர்களிடம் "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், ராத்திரியிலே ராஜா வேஷம் போட்டு நடிக்கிறதுலே இருக்கிற இன்பம் வேறு எதிலேயும் இல்லை" என்று சொல்லும் போது நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், பக்தியையும் உணர்த்தினார்.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வராமல் இருக்குமா? காட்சியின் ஆரம்பத்தில் காட்டும் கம்பீர நடை, முடிவில் தலை குனிந்து தளர்ந்த நடை... பிறவி நடிகரையா🙏
திரை உலகின் மிக சிறந்த நடிகன் என்ற பெயரும், புகழும் பெற்ற பின்பும் அவர் தனது முதல் காதலான நாடக மேடையை என்றும் மறக்கவில்லை.
சினிமாவுக்கு வந்த பின்னரும் பல படங்களில் ஓரங்க நாடகங்களில் நடித்து தன் நாடக நடிப்பென்னும் தாகத்தைத் தீர்த்து கொண்டதோடு மட்டுமில்லாமல், ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்தார்.
சேரன் - செங்குட்டுவன் (ராஜா ராணி), ஓதெல்லோ ஆங்கில வசனம் பேசி நடித்த இரத்த திலகம், சாம்ராட் அசோகனாக அன்னையின் ஆணையில், சீசராக சொர்கம் படத்தில், சலீமாக, சாக்ரடீசாக, வீர வசனம் பேசும் சத்ரபதி சிவாஜியாக (ராமன் எத்தனை ராமனடி)
'ராஜபார்ட் ரங்கதுரை'யில் ஒரு நாடகக் கலைஞன் தன் தொழில் நிலைத்து நிற்க சந்திக்கும் சோதனைகளை நடிகர் திலகம் மிக அருமையாக வெளி படுத்தி இருப்பார்.
தன் 32-ஆவது வயதில் 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக ஆசிய-ஆப்ரிக்க திரை விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வாங்கிய முதல் இந்தியன் என்ற பெருமை பெற்ற நடிகர் திலகம் தான்.
படங்களில் ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்த கால கட்டத்திலும் பல மேடை நாடகங்களில் நடித்தார். தனது 18-ஆவது வயதிலேயே 'சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்' நாடகத்தின் மூலம் 'சிவாஜி' கணேசன் என்று பெரியாரால் அழைக்கப் பட்டவர் அல்லவா நடிகர் திலகம்!
ஒரு கலைஞனுக்கு தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட, தன் நடிப்பிற்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை.
ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை நடிகர் திலகம்.
தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடத்தினார்.
வியட்நாம் வீடு, தங்க பதக்கம் போன்ற நாடகங்களில் நடித்தார். பின்னர் அவை திரைபடமாக வந்து சக்கை போடு போட்டன. தனது சிவாஜி நாடக மன்றம் மூலம் பல நடிகர்களுக்கு வாய்பளித்தார், அவர்களின் வருமானத்துக்கு வழி வகுத்தார். தனது திரை படங்களிலும் பல நாடக நடிகர்களுக்கு வாய்பளித்தார்.
நாடகங்களிலும், வெள்ளிதிரையில் மட்டுமில்லாமல், சின்ன திரையிலும் தோன்றி நம்மை அவர் மகிழ்வித்திருக்கிறார்.
சிவாஜி மகராஜ் சத்ரபதியாக பட்டம் சூட்டி 300 ஆண்டுகளை கொண்டாட 'சத்ரபதி சிவாஜி' என்ற பெயரில் 1974-ஆம் ஆண்டில் 30-நிமிட படத்தை ஏ.வி.எம். நிறுவனம், பம்பாய் தூர்தர்ஷனுக்காக தயாரித்தது. 1974-ஆம் ஆண்டு ஜுலை 21-ஆம் தேதியில் அது ஒளிபரப்பபட்டது.
சிவாஜி சிவாஜியாக தோன்றி அற்புதமாக நடித்த மோனோ acting மிக பெரிய வரவேற்பை பெற்றது.
அதற்கான எல்லா தயாரிப்புச் செலவையும் நடிகர் திலகம் தானே ஏற்றுக் கொண்டார் என்பது கூடுதலான செய்தி.
சிவாஜியாக நடித்து புகழ் பெற்று திரை உலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த பூமியை விட்டு (நம்மை விட்டு போகவில்லை. இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார்) பிரிந்ததும் ஒரு ஜூலை 21 தான்!!😢
நடிகர் திலகம் வெள்ளித் திரையில் அடைந்த புகழை போலவே, நாடக மேடையிலும் பல புகழ் பெற்ற கதாபாத்திரங்களை, தேசப் பக்தர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து நம்முடன் வாழ்ந்து வந்தார்.
அவர் அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கா விட்டால், கட்டபொம்மனையும், கொடி காத்த குமரனையும், சத்ரபதி சிவாஜியையும், பகத் சிங்கையும், வாஞ்சிநாதனையும் அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது.
தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழ் நாட்டின் பெருமை. அவர் போல் தொழில் பக்தி கொண்டவர்கள் உண்டோ?🙏
அனைவரும் படித்த, கேட்ட செய்தியாக இருக்கலாம். ஆயினும், நடிகர் திலகம் புகழ் பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும், எழுதினாலும் அலுப்பதில்லையே! அதுதான் அவரின் மகிமை.
மலேசியத் திரைப்பட இயக்குநர் விஜயசிங்கம்
மலேசியம் புலன அன்பர். மலேசியாவில் பல மேடை நாடகங்களை அறங்கேற்றம் செய்து தன் திறமையை உணர்த்தியவர்.
தமிழ் மலாய் ஆங்கில மொழிகளில் நிறைய தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்தவர். கதாசிரியர்; வசனகர்த்தா; இயக்குநர்; தயாரிப்பாளர். இப்படிப் பல்வேறு பரிமாணங்கள். நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகர்.
தமிழகத்தில் ‘நினைவுகள் மறைவதில்லை’ என்ற திரைப்படத்தை பெரும் கனவுகளுடன் இயக்கியவர். 2002-ஆம் ஆண்டு Film Station Productions நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக