14.03.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்
கி.மு. 44-ஆம் ஆண்டு இன்றைய நாளில் ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப் பட்டார்.
ரோமக் குடியரசு தோற்றுவிக்கப்பட்ட பின் ஆண்டுக்கு ஒரு முறை செனட் தேர்ந்து எடுக்கும் இரண்டு கான்சல்கள் இணைந்து ஆட்சி நடத்துவார்கள். கி.மு.59-இல் கான்சலாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட சீசர், முந்தைய ஆட்சியாளர்களைப் போலன்றி, எளிய மக்களின் நலனில் அக்கறை காட்டினார்.
நகர்ப்புற ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்கினார். நிலச் சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு விளைநிலங்கள் வழங்கினார்.
வேலையின்மை, வன்முறை, ஊழல் ஆகியவை மலிந்து இருந்த ரோம் நகரில், சீசர் வேலைகளை வழங்கியதுடன், நகரையும் ஒழுங்கு படுத்தினார். நாள்காட்டியைச் சீரமைத்து ஜூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். பிரதேச ஆளுநர்களின் பதவிக் காலத்தைக் குறைத்துச் செனட்டை விரிவாக்கினார்.
இத்தகைய செயல்பாடுகளைத் தடையின்றித் தொடர்வதற்காகத் தன்னைச் சர்வாதிகாரியாகவும் செனட்டையே அறிவிக்கச் செய்தார். இவற்றால் இராணுவம், எளிய மக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும், ஏற்கெனவே இருந்த ஆளும் வர்க்கத்தினரால் ஏற்க முடியவில்லை.
பேரரசர் எனும் அளவுக்குச் செய்யப்பட்ட மரியாதைகளைச் சீசர் மறுத்தாலும், அவரின் ஒப்புதலுடன் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, குடியரசைக் காப்பதற்காக அவரைக் கொலை செய்யச் சதி செய்தனர்.
மார்ச் ஐடஸ் (15) என்பது பாரம்பரியமாக, ரோமானியர்கள் கடன்களைத் தீர்ப்பதற்கான நாளாகும். அந்த நாளில், 60 சதிகாரர்கள் சூழ்ந்து, சீசரின் உடலில் 23 இடங்களில் கத்தியால் குத்தினர்.
அன்றைக்கு அவைக்குச் செல்ல வேண்டாம் என்று சீசரின் மனைவி தடுத்த போதும், அவரை அழைத்து வந்தது டெசிமஸ் புரூட்டஸ்தான். அதனால்தான், இரண்டாவது ஆளாக புரூட்டஸ் கத்தியால் குத்தியதும், 'நீயுமா புரூட்டஸ்' என்று சீசர் கூறியதாக சேக்ஸ்பியர் எழுதினார்.
ஆனால், உண்மையில் சீசர் எதுவுமே சொல்லவில்லை என்றும், 'நீயுமா குழந்தையே' என்று சொன்னதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
சதிகாரர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மக்கள் கிளர்ந்து எழுந்ததில், அவர்கள் அனைவரும் நாட்டை விட்டே ஓட நேர்ந்தது. வாரிசாக சீசர் அறிவித்து இருந்த ஆக்டேவியஸ் (அகஸ்டஸ் சீசர்) பேரரசராகி, குடியரசே இல்லாமல் போனது.
நாட்டை விரிவாக்குவதில் தீவிரமாக இருந்த சீசர் கொல்லப் படாமல் இருந்து இருந்தால், அலெக்சாண்டர் போல ரோமப் பேரரசை விரிவாக்கம் செய்து இருக்கக் கூடும். ஐரோப்பிய வரலாறேகூட வேறு மாதிரி இருந்து இருக்கலாம் என்கிறார்கள்!
சில கூடுதல் தகவல்கள்:
பூம்புகார் படத்தின் 'போகாதே, போகாதே, என் கணவா...' போலவே, கெட்ட கனவுகளைக் கண்டதாகக் கூறி, அன்றைய நாளில் அவைக்குச் செல்ல வேண்டாமென்று அவரின் மனைவி தடுத்தார்.
சீசர் நண்பராகக் கருதிக் கொண்டு இருந்த புரூட்டஸ்தான், ’பெண்களின் கனவுக்கு எல்லாம் சீசர் முக்கியத்துவம் தரலாமா’ என்று கூறி (சீண்டி) அழைத்துச் சென்றார்.
சீசர் அவைக்குள் நுழைந்த உடனேயே, நாடு கடத்தப் பட்டிருந்த தன் சகோதரரை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கும் சாக்கில், டிலியஸ் சிம்பர், சீசரின் தோள்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அவரது அங்கியைப் பிடித்து இழுத்ததால், சீசர் அசைய முடியாமல் போன நேரத்தில், சூழ்ந்து கொண்டு, கத்திகளால் குத்தினர்.
சீசரைக் கொன்றபின், கொன்ற செனட்டர்கள், மக்கள் மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு, 'வெற்றி வெற்றி, குடியரைக் காப்பாற்றி விட்டோம்' என்று கூவியபடி தெருக்களில் செல்ல, வீடுகளின் கதவுகளை அடைத்துக் கொண்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேயில்லை.
கொல்லப் பட்டபின் நடைபெற்ற குழப்பங்களில், சீசரின் உடல், அவையின் படிகளிலேயே மூன்று மணி நேரத்திற்குக் கிடந்தது. சீசரின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, புரூட்டஸ், கேஷியஸ் ஆகியோரின் வீடுகளை அடித்து நொறுக்கினர்.
நடுத்தர, கீழ்த்தட்டு வர்க்க மக்கள், தங்கள் நலனில் அக்கறை கொண்டவரை, ஆளும் வர்க்கத்தின் ஒரு சிறிய கூட்டம் கொன்று விட்டதாகப் பொங்கி எழுந்தது உள்நாட்டுப் போராகியது.
சீசர் வாரிசாக அறிவித்து இருந்த கையஸ் ஆக்டேவியஸ், 18 வயதே ஆகி இருந்தாலும், தெளிவான அரசியல் அறிவுகளைப் பெற்று இருந்ததால், உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து அரசுத் தலைவரானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக