22 மார்ச் 2021

சிட்டுக்குருவி தினம் உருவான கதை

22.03.2021

சிட்டுக் குருவிகள்...  சின்னக் குருவிகள்... செல்லக் குருவிகள்.  அவை மனித குலத்துக்கு ஆற்றும் பணி அளப்பரியது. சீனாவில் நடந்த உண்மைச் சம்பவம் இது. 1950-களில் சீனாவில் ஆட்சிக்கு வந்த மாவோ Four pests campaign என்ற பெயரில் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நான்கு உயிர்களை அழிக்க உத்தரவிடுகிறார்.


அந்தப் பட்டியலில் சின்னஞ்சிறு சிட்டுக் குருவியும் இடம் பெற்றிருந்தது.  சின்னஞ்சிறிய பறவைகள் கொலை செய்யப்படும் அளவுக்கு என்ன தப்பு செய்தன?

விளை நிலங்களில் தானியங்களைக் கொத்தித் தின்றது தான் அந்தக் குருவிகள் செய்த தவறு. தானியங்கள்தான் அவற்றின் முக்கிய உணவு. புலி மானை அடித்துச் சாப்பிட்டால் தப்பா? பூனை, கருவாடு தின்னால் தப்பா?

மாவோவின் உத்தரவை அடுத்து சிட்டுக் குருவிகளை அழிக்கப் பெரும் படை கிளம்பியது. எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் கொன்று குவிக்கப் பட்டன குட்டிக் குட்டிக் குருவிகள்.

அதன் கூட்டை அழிப்பது, முட்டையை உடைப்பது என்று மனிதன் அத்தனை விதமான இழி புத்தியையும் சிட்டுக்குருவி இனத்தின் மீது காட்டினான்.

சிட்டுக்குருவியை அழித்து விட்டால் போதும்; நாடு சுபிட்சம் அடைந்து விடும்; உணவு உற்பத்தி பெருகிவிடும் என்ற செய்தியை சீனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர்.

கோடிக் கணக்கான சிட்டுக் குருவிகள் அழிந்து போயின. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன. நாட்டில் விளைச்சல் பாதியாகக் குறைந்தது. சீன அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவு புழுப் பூச்சிகள் மட்டுமல்ல; வெட்டுக்கிளிகள் போன்ற விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளும்தான். சிட்டுக்குருவிகள் அழிந்து போயின; அதனால் வெட்டுக்கிளிகள் பெருத்தன.

பயிர்களை சகட்டுமேனிக்கு வெட்டுக்கிளிகள் அழித்தன. விளைச்சல் பாதித்தது. மக்கள் பசியால் வாடத் தொடங்கினர். போதாக்குறைக்கு மழையும் பொய்த்தது. நிலங்கள் வெடித்தன, பயிர்கள் வாடின.

மக்கள் பட்டினியால் மடிந்தனர். சிட்டுக்குருவி இனத்தை அழித்ததற்கு சீனா கொடுத்த விலை... ஒன்றரை கோடி மனித உயிர்கள் (சீன அரசின் கணக்குப்படி).

ஆனால் 3 கோடியே 60 இலட்சம் பேர் வரை இறந்து போனதாக "Tombstone' என்ற புத்தகத்தில் சீனப் பத்திரிகையாளர் யாங் ஜிஜெங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்துக்கு தற்போது சீனா தடை விதித்துள்ளது. அந்தப் புத்தகத்தில், சீன மக்கள் பட்டினி காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று சாப்பிட்டதாகக் கூடச் சொல்லப் பட்டுள்ளது. மக்களை நரமாமிசம் புசிப்பவர்களாக மாற்றிய பின்தான், விழித்தது சீனா.

வெட்டுக்கிளிகள், பூச்சிகள் பெருக சிட்டுக்குருவிகள் மடிந்ததுதான் காரணம் என்பதை சீனா தாமதமாக உணர்ந்தது. உடனடியாக அந்தப் பட்டியலில் இருந்து சிட்டுக் குருவியின் பெயர் நீக்கப்பட்டது.

இப்போது சிட்டுக்குருவியைக் காக்க பெரும் படை புறப்பட்டது. சீனா சுபிட்சம் அடைந்தது. சின்னக் குருவிதான். ஆனால், அது அழிந்தால் மனித இனத்துக்கும் அழிவு வரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்.

இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் முக்கியத்துவம் குறித்து இப்போது பெரும் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர்கள் அவற்றைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிட்டுக்குருவி குறித்து இந்தியாவில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் நாசிக்கைச் சேர்ந்த முகமது திலாவர். கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக் குருவிகளைப் பாதுகாப்பதற்காக ''Nature forever society ''என்ற அமைப்பைத் தொடங்கினார்.

பழைய காலத்தில் நமது முன்னோர்கள் ஓட்டு வீடுகளில் வாழ்ந்தனர். ஓட்டு வீடுகளின் அமைப்பு கூடு கட்டி வாழத் தெரியாத சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்தது.

பொந்துகளில் கொஞ்சம் வைக்கோல் இருந்தால் போதும்; அதில் வசிக்க ஆரம்பிக்கும் பறவை இனம் சிட்டுக்குருவி. நகரத்தின் நவீனக் கட்டடங்கள் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. ஆனால், மண்ணுக்கு எப்படி புழு தேவையோ... காட்டுக்கு எப்படி புலி தேவையோ... அப்படி மனிதனுக்கும் சிட்டுக்குருவி தேவை.

இதை உணர்ந்து கொண்ட முகமது திலாவர்தான் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உலகம் முழுக்க 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக் குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சிட்டுக்குருவிகளுக்கு என்று ஒரு தினம் வேண்டுமென்றும் ஐ.நா. அமைப்பிடம் கோரிக்கை விடுத்தார். முகமதுவின் கோரிக்கையில் இருக்கும் உண்மையை உணர்ந்த ஐ.நா. சிட்டுக் குருவிகளைக் காப்பதன் அவசியம் கருதி, கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

டெல்லி மாநில அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு சிட்டுக் குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது. கடந்த 2008-ஆம் ஆண்டு டைம் இதழ் "Heroes of the Environment'' விருதை முகமதுவுக்கு வழங்கியது. உலகின் தலைசிறந்த 30 சுற்றுச் சூழலியலாளர்களில் இவரும் ஒருவர்.

- எம்.குமரேசன்; நன்றி: விகடன்

தனசேகரன் தேவநாதன்: உலக படைப்பே ஒன்றுக்கொன்று உதவி என்ற அடிப்படைதான் என்பதை உணர்த்தும் அனுபவக் கட்டுரை.

நாகராஜன்: பதிவு அருமை ஐயா

கென்னடி ஆறுமுகம்: அருமையான தகவல் ஐயா.

தேவிசர கடாரம்: அருமை ஐயா...👌

ராதா பச்சையப்பன்: சிட்டுக் குருவி, சிட்டு குருவி‌ சேதி தெரியுமா. சிட்டுக் குருவியின் தினம் கட்டுரை நன்று. பல விசயங்களை தெரிய வருகிறது. நன்றி 🙏🌻

வெங்கடேசன்: இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ முடியும். ஒரு சிறிய பறவை இனத்தை அழித்ததால் சீனர்கள் என்ன விலை கொடுத்து இருக்கிறர்கள். அருமையான கட்டுரை மிக்க நன்றி ஐயா.

கரு. ராஜா சுங்கை பூலோ: ஒரு சாதாரண சிட்டுக் குருவிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கதையா???? சீனாக்காரனும் சில நேரத்தில் முட்டாள் தனமாக முடிவு செய்து இருக்கிறான். பாராட்டுக்கள்.


 

மரகதப் புத்தர் சிலை

 22.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம் கிரீக்

1784 மார்ச் 22 ஆம் தேதி உலகின் மிகப் புகழ்பெற்ற மரகதப் புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள 'வாட் பரா கேவ்' அல்லது 'வாட் பரா சி ரத்தன சசாதரம்' என்று அழைக்கப்படும் ஆலயத்திற்கு மாற்றப் பட்டது.

உருவ வழிபாடு என்பதையே புத்தர் ஏற்காததால், தொடக்கத்தில் புத்தரின் சிலைகளே அமைக்கப்பட்டது இல்லை.

எண்பது வயதில் இறக்கும் வரை நடந்தே அவர் போதித்துக் கொண்டு இருந்ததால் அவருடைய பாதத் தடங்கள்; போதிமரம்; பயணிப்பவர் இல்லாமல் குடையுடன் குதிரை; அவர் இல்லாத வெற்றுச் சிம்மாசனம்; தர்மச் சக்கரம்; உள்ளிட்டவைதான் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன.

சக்கரத்தின் ஆரங்கள் சமமாக இருந்தால்தான் அது சரியாகச் செயல்படும். அந்த அடிப்படையில் சமத்துவத்தின் அடையாளமாகப் புத்தர் பயன்படுத்திய தர்மச் சக்கரம்; பாதம் உள்ளிட்டவை சமத்துவத்தையே ஏற்காத இந்து சமயத்தால் பின்னாளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

புத்தரின் உடலை அடையாளமாகப் பயன்படுத்துவதை அவர் மறுத்ததால், போதி சத்துவர்களின் உருவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரியதை புத்தர் ஏற்றுக் கொண்டதாக சர்வாஸ்த்திவாத பவுத்தம் கூறுவதால், போதி சத்துவர்களின் உருவங்களும் சிலைகளாகப் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து புத்தரின் சிலைகள் உருவாகத் தொடங்கின. இது அவருக்கு 5-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கிறித்துவின் உருவத்தை அந்தச் சமயத்தினர் பயன்படுத்தியதன் விளைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தொடக்ககால பவுத்தச் சிற்பக் கலையில், கிரேக்கச் சிற்பக் கலையின் தாக்கம் அதிகமிருப்பது, அப்பகுதிகளிலும் பவுத்தம் பெற்றிருந்த செல்வாக்கை மட்டுமின்றி, அங்கு கிறித்தவம் உருவான போது, பவுத்தத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் விளக்குகிறது.

இன்று உலகில் இருக்கிற மிகப் பெரிய 10 சிலைகளில் 4 புத்தர் சிலைகள். உலகம் முழுவதும் பரவலாக மிக அதிகச் சிலைகளைக் கொண்டு இருப்பவரும் புத்தர்தான். பல்வேறு மிக அரிய பொருட்களாலான சிலைகளும் புத்தருக்கு உள்ளன.

அவற்றில் ஒன்றான இந்த மரகதக் கல்லாலான புத்தர் சிலை உருவான வரலாறு யாருக்கும் தெரியவில்லை. இந்துக் கடவுளர்களான விஷ்ணு, இந்திரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன.

1434-இல் கிடைத்த இது, சுண்ணாம்பு சாந்தால் செய்யப்பட்ட சிலையாகவே கருதப்பட்டு, சியாங் ராய் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.

எதிர்பாராமல் சிலையின் மூக்குப் பகுதி சேதமுற்ற போது, உள்ளே பச்சை நிறம் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டபோது இரண்டு அடிக்கும் அதிக நீளமுள்ள மரகதக் கல்லில் செதுக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஐந்து முறை இடமாற்றம் செய்யப்பட்ட பின், 1784-இல் தற்போதைய ஆலயத்தில் இது அமையப் பெற்றது.



 

17 மார்ச் 2021

ராமோன் மாக்சாசே

17.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1957 மார்ச் 17-ஆம் நாளில் பிலிப்பைன்ஸ்சின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ராமோன் மாக்சேசே (49 வயதில்) விமான விபத்தில் பலியானார். "ஆசியாவின் நோபல் பரிசு" என்று புகழப்படும் மகசேசே (மாக்சாசே என்பதுதான் பிலிப்பினோ மொழியில் சரியான உச்சரிப்பு) விருது இவர் பெயரில்தான் வழங்கப் படுகிறது.

இவரின் எளிமை, நேர்மை, மக்களுடனான நெருக்கம், பிலிப்பைன்சின் பொற்காலம் என்று புகழப் படுகிறது. இவர் ஆண்ட மூன்றாண்டு காலத்தில் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்றும் அவர் பெயரை நிலைபெறச் செய்யும் நோக்கில் இந்த விருது உருவாக்கப்பட்டது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பேருந்து நிறுவனத்தில் வாகனங்களின் பழுது நீக்குபவராக (ஆட்டோமொபைல் மெக்கானிக்) வாழ்ந்த மாக்சேசே, இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் பிலிப்பைன்சின் இராணுவத்தில் சேர்ந்தார்.

ஸ்பெயினின் குடியேற்ற நாடாக இருந்து, 1899-இல் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு இருந்த பிலிப்பைன்சை, உலகப் போரில் ஜப்பான் கைப்பற்றிய போது தப்பிச் சென்ற மாக்சேசே, காடுகளில் ஒளிந்து கொரில்லா போராளியாகப் போராடினார்.

உலகப் போரின் முடிவில் விடுதலைப் பெற்ற பிலிப்பைன்சில் நாடாளுமன்ற உறுப்பினரானார் மாக்சேசே. கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் என்று கருதப்பட்ட ஹுக்பலஹாப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, முன்னாள் கொரில்லா என்ற முறையில் பாதுகாப்பு அமைச்சரான மாக்சேசே, நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. வாழ்வு இழந்த விவசாயிகள் என்று புரிந்ததும், சரண் அடைபவர்களுக்கு நிலம் முதலானவற்றை வழங்கி போராட்டத்தைச் சுமுகமாக முடித்தார்.

இராணுவத்தில் இருந்த ஊழல்வாதிகளை அகற்றி, சீரமைத்து இராணுவத்தின் மீதும் மரியாதையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் கூட்டாளி; தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர். 1953-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தி, எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.

ஊழல், நெருங்கியவர்களுக்கு சாதகம் முதலானவற்றை ஒழித்தது; குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பொதுமக்கள் வந்து செல்ல முதன்முறையாக அனுமதித்தது; பொது இடங்களுக்கு தன் பெயரைச் சூட்டுவதற்கு அனுமதி மறுத்தது; ஊதியத்தைத் தவிர சிறப்புச் சலுகைகளை ஏற்காதது என்று நீளும் பட்டியல் அவரை மக்களின் தலைவராக்கியது.

தன் காரின் ஓட்டுனர் சாலைவிதியை மீறிய போது, தானே இறங்கி அபராதம் செலுத்தியது; கார் பழுதாகி ஓட்டுநர் தடுமாறிய போது மீண்டும் மெக்கானிக்காக மாறி தானே சரி செய்தது; போன்றவற்றால் மக்கள் வியக்கும் தலைவராக இருந்தார்.

அவரின் ஆட்சியில், பல துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிய பிலிப்பைன்ஸ், ஆசியாவின் இரண்டாவது மிகச் சிறந்த நாடாக விளங்கியது.

அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் இந்த விருதும் உருவாக்கப்பட்டது.



வளமெலாம் பழைய சோற்றிலே - பாதாசன்

17.03.2021

பதிவு செய்தவர்: கரு. ராஜா, கோலாலம்பூர்

வீட்டுச் சமையலை விரும்பெனக் கூறினால்
நாட்டுக் காரியின் நாசி லெமா வே
வேண்டும் என்கிறாள் வீம்புடன் பெயர்த்தி !
யாண்டும் பலரிடம் இதுவே நடப்பு !
"நாட்டுக் காரி நாசி யும் வேண்டாம் ;
நீட்டு காசை நினைத்த படிநான்
முட்டை ரொட்டி சானாய் முழுங்கணும்"
முட்டி அழுகிறான் மூத்த பெயரனும் !
"வாந்தான் மீயை வாங்கிவா தாத்தா
'ஏன்தான் ?' கேட்டால் எனக்கது பிடிக்கும்"
என்கிறான் இன்னோர் இளைய பேரனும் !



மிளகு ரசத்தைக் கேட்டால் மீசூப்
வழங்கி டட்டுமா ? மனைவி கேட்கிறாள் !
தின்றிட பெர்கர் சிறப்பாம்பீசா
மென்றிடச் சுவைதரும் மேகி - இப்படித்
தமிழர் சமையலில் சம்பந்த மில்லா
அமிலம் கலந்த அத்தனை உணவிலும்
ஆர்வம் காட்டி அசத்தும் தமிழினம்
தீர்வாய்க் கெண்டகி சிக்கனு க் (கு) அடிமை
ஓர்வாய் மெக்டொனால்ட் உண்ணா விடிலோ
யார்வா யிலும்சுவை இருப்பதே இல்லை !
இத்தனை நடந்தும்  இனும்நான் இருந்திட
மொத்தமோர் காரணம் முந்தி மொழிகிறேன் !
பச்சை நீரினைப் பாலாய்க் கருதியான்
பச்சைவெங் காயம் பக்கம் வைத்துச்
சோற்றுடன் கலந்து சுவைத்தே உண்பதால்
ஆற்றங் கரைச்செடி போலவே செழிப்புடன்
நலத்துடன் வாழ்கிறேன் நாளும்
வளமெலாம் வீட்டுப் பழைய சோற்றிலே !


கவிஞர் பாதாசன்


 

ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி கணேசன்

17.03.2021

பதிவு செய்தவர்: இயக்குநர் விஜயசிங்கம்

’நான் மேடையிலே போடாத வேஷம் இல்லை. அர்ஜுனனா நடிச்சிருக்கேன், அரிசந்திரனா நடிச்சிருக்கேன். நான் போடாத வேஷம் இது ஒன்னுதான்ப்பா.

இன்னிக்கு தான்ப்பா என் தம்பிக்கு முன்னாலேயே அண்ணனா நடிக்க போறேன்' என்று ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் தம்பியாக நடித்த ஸ்ரீகாந்திடன் சொல்வார் ரங்கதுரையாக வாழ்ந்த நடிகர் திலகம்.

அதே படத்தில் டி.கே. பகவதி அவர்களிடம் "பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும், ராத்திரியிலே ராஜா வேஷம் போட்டு நடிக்கிறதுலே இருக்கிற இன்பம் வேறு எதிலேயும் இல்லை" என்று சொல்லும் போது நடிப்பில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும், பக்தியையும் உணர்த்தினார்.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வராமல் இருக்குமா? காட்சியின் ஆரம்பத்தில் காட்டும் கம்பீர நடை, முடிவில் தலை குனிந்து தளர்ந்த நடை... பிறவி நடிகரையா🙏

திரை உலகின் மிக சிறந்த நடிகன் என்ற பெயரும், புகழும் பெற்ற பின்பும் அவர் தனது முதல் காதலான நாடக மேடையை என்றும் மறக்கவில்லை.

சினிமாவுக்கு வந்த பின்னரும் பல படங்களில் ஓரங்க நாடகங்களில் நடித்து தன் நாடக நடிப்பென்னும் தாகத்தைத் தீர்த்து கொண்டதோடு மட்டுமில்லாமல், ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்தார்.

சேரன் - செங்குட்டுவன் (ராஜா ராணி), ஓதெல்லோ ஆங்கில வசனம் பேசி நடித்த இரத்த திலகம், சாம்ராட் அசோகனாக அன்னையின் ஆணையில், சீசராக சொர்கம் படத்தில், சலீமாக, சாக்ரடீசாக, வீர வசனம் பேசும் சத்ரபதி சிவாஜியாக (ராமன் எத்தனை ராமனடி)

'ராஜபார்ட் ரங்கதுரை'யில் ஒரு நாடகக் கலைஞன் தன் தொழில் நிலைத்து நிற்க சந்திக்கும் சோதனைகளை நடிகர் திலகம் மிக அருமையாக வெளி படுத்தி இருப்பார்.

தன் 32-ஆவது வயதில் 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக ஆசிய-ஆப்ரிக்க திரை விழாவில்  சிறந்த நடிகர் பட்டம் வாங்கிய முதல் இந்தியன் என்ற பெருமை பெற்ற நடிகர் திலகம் தான்.  

படங்களில் ஓய்வில்லாமல் நடித்து கொண்டிருந்த கால கட்டத்திலும் பல மேடை நாடகங்களில் நடித்தார். தனது 18-ஆவது வயதிலேயே 'சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்' நாடகத்தின் மூலம் 'சிவாஜி' கணேசன் என்று பெரியாரால் அழைக்கப் பட்டவர் அல்லவா நடிகர் திலகம்!

ஒரு கலைஞனுக்கு தன் திறமைக்கு எந்த விருது கிடைத்தாலும் அது தரும் மகிழ்ச்சியைவிட, தன் நடிப்பிற்கு மக்கள் அளிக்கும் கரவொலி மூலம் கிடைக்கும் ஆதரவுக்கு சமம் வேறு ஒன்றுமில்லை.

ஆகவேதான் திரையுலகில் மாபெரும் நடிகரான பின்னரும் நாடக மேடையை விடவில்லை நடிகர் திலகம்.

தனது நாடக நீண்டநாள் நண்பர் எஸ்.ஏ.கண்ணன் இயக்க, சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில், "தேன் கூடு", ஜகாங்கீர்" நாடகங்களும், தஞ்சைவாணன் எழுதிய "களம் கண்ட கவிஞன்" கவிதை நாடகமும் நடத்தினார்.

வியட்நாம் வீடு, தங்க பதக்கம் போன்ற நாடகங்களில் நடித்தார். பின்னர் அவை திரைபடமாக வந்து சக்கை போடு போட்டன. தனது சிவாஜி நாடக மன்றம் மூலம் பல நடிகர்களுக்கு வாய்பளித்தார், அவர்களின் வருமானத்துக்கு வழி வகுத்தார். தனது திரை படங்களிலும் பல நாடக  நடிகர்களுக்கு வாய்பளித்தார்.

நாடகங்களிலும், வெள்ளிதிரையில் மட்டுமில்லாமல், சின்ன திரையிலும் தோன்றி நம்மை அவர்  மகிழ்வித்திருக்கிறார்.

சிவாஜி மகராஜ் சத்ரபதியாக பட்டம் சூட்டி 300 ஆண்டுகளை கொண்டாட 'சத்ரபதி சிவாஜி' என்ற பெயரில் 1974-ஆம் ஆண்டில் 30-நிமிட படத்தை ஏ.வி.எம். நிறுவனம், பம்பாய் தூர்தர்ஷனுக்காக தயாரித்தது. 1974-ஆம் ஆண்டு ஜுலை 21-ஆம் தேதியில் அது ஒளிபரப்பபட்டது.

சிவாஜி சிவாஜியாக தோன்றி அற்புதமாக நடித்த மோனோ acting மிக பெரிய வரவேற்பை பெற்றது.

அதற்கான எல்லா தயாரிப்புச் செலவையும் நடிகர் திலகம் தானே ஏற்றுக் கொண்டார் என்பது கூடுதலான செய்தி.

சிவாஜியாக நடித்து புகழ் பெற்று திரை உலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த பூமியை விட்டு (நம்மை விட்டு போகவில்லை. இன்றும் நம் இதயங்களில் வாழ்கிறார்) பிரிந்ததும் ஒரு ஜூலை 21 தான்!!😢

நடிகர் திலகம் வெள்ளித் திரையில் அடைந்த புகழை போலவே, நாடக மேடையிலும் பல புகழ் பெற்ற கதாபாத்திரங்களை, தேசப் பக்தர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து நம்முடன் வாழ்ந்து வந்தார்.

அவர் அந்தப் பாத்திரங்களில் நடித்திருக்கா விட்டால், கட்டபொம்மனையும், கொடி காத்த குமரனையும், சத்ரபதி சிவாஜியையும், பகத் சிங்கையும், வாஞ்சிநாதனையும் அடுத்தடுத்த தலைமுறைகள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது.

தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழ் நாட்டின் பெருமை. அவர் போல் தொழில் பக்தி கொண்டவர்கள் உண்டோ?🙏

அனைவரும் படித்த, கேட்ட செய்தியாக இருக்கலாம். ஆயினும், நடிகர் திலகம் புகழ்  பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும், எழுதினாலும் அலுப்பதில்லையே! அதுதான் அவரின் மகிமை.


மலேசியத் திரைப்பட இயக்குநர் விஜயசிங்கம்


மலேசியம் புலன அன்பர். மலேசியாவில் பல மேடை நாடகங்களை அறங்கேற்றம் செய்து தன் திறமையை உணர்த்தியவர்.

தமிழ் மலாய் ஆங்கில மொழிகளில் நிறைய தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்தவர். கதாசிரியர்; வசனகர்த்தா; இயக்குநர்; தயாரிப்பாளர். இப்படிப் பல்வேறு பரிமாணங்கள். நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகர்.

தமிழகத்தில் ‘நினைவுகள் மறைவதில்லை’ என்ற திரைப்படத்தை பெரும் கனவுகளுடன் இயக்கியவர். 2002-ஆம் ஆண்டு Film Station Productions நிறுவனத்தை உருவாக்கி திரைப்படங்கள் தயாரித்து வருகிறார்.