17 மார்ச் 2021

ராமோன் மாக்சாசே

17.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1957 மார்ச் 17-ஆம் நாளில் பிலிப்பைன்ஸ்சின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ராமோன் மாக்சேசே (49 வயதில்) விமான விபத்தில் பலியானார். "ஆசியாவின் நோபல் பரிசு" என்று புகழப்படும் மகசேசே (மாக்சாசே என்பதுதான் பிலிப்பினோ மொழியில் சரியான உச்சரிப்பு) விருது இவர் பெயரில்தான் வழங்கப் படுகிறது.

இவரின் எளிமை, நேர்மை, மக்களுடனான நெருக்கம், பிலிப்பைன்சின் பொற்காலம் என்று புகழப் படுகிறது. இவர் ஆண்ட மூன்றாண்டு காலத்தில் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்றும் அவர் பெயரை நிலைபெறச் செய்யும் நோக்கில் இந்த விருது உருவாக்கப்பட்டது.

எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பேருந்து நிறுவனத்தில் வாகனங்களின் பழுது நீக்குபவராக (ஆட்டோமொபைல் மெக்கானிக்) வாழ்ந்த மாக்சேசே, இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் பிலிப்பைன்சின் இராணுவத்தில் சேர்ந்தார்.

ஸ்பெயினின் குடியேற்ற நாடாக இருந்து, 1899-இல் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டு இருந்த பிலிப்பைன்சை, உலகப் போரில் ஜப்பான் கைப்பற்றிய போது தப்பிச் சென்ற மாக்சேசே, காடுகளில் ஒளிந்து கொரில்லா போராளியாகப் போராடினார்.

உலகப் போரின் முடிவில் விடுதலைப் பெற்ற பிலிப்பைன்சில் நாடாளுமன்ற உறுப்பினரானார் மாக்சேசே. கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் என்று கருதப்பட்ட ஹுக்பலஹாப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, முன்னாள் கொரில்லா என்ற முறையில் பாதுகாப்பு அமைச்சரான மாக்சேசே, நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

போராடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல. வாழ்வு இழந்த விவசாயிகள் என்று புரிந்ததும், சரண் அடைபவர்களுக்கு நிலம் முதலானவற்றை வழங்கி போராட்டத்தைச் சுமுகமாக முடித்தார்.

இராணுவத்தில் இருந்த ஊழல்வாதிகளை அகற்றி, சீரமைத்து இராணுவத்தின் மீதும் மரியாதையை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் கூட்டாளி; தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர். 1953-இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தி, எளிய மக்களின் மதிப்பைப் பெற்றார்.

ஊழல், நெருங்கியவர்களுக்கு சாதகம் முதலானவற்றை ஒழித்தது; குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பொதுமக்கள் வந்து செல்ல முதன்முறையாக அனுமதித்தது; பொது இடங்களுக்கு தன் பெயரைச் சூட்டுவதற்கு அனுமதி மறுத்தது; ஊதியத்தைத் தவிர சிறப்புச் சலுகைகளை ஏற்காதது என்று நீளும் பட்டியல் அவரை மக்களின் தலைவராக்கியது.

தன் காரின் ஓட்டுனர் சாலைவிதியை மீறிய போது, தானே இறங்கி அபராதம் செலுத்தியது; கார் பழுதாகி ஓட்டுநர் தடுமாறிய போது மீண்டும் மெக்கானிக்காக மாறி தானே சரி செய்தது; போன்றவற்றால் மக்கள் வியக்கும் தலைவராக இருந்தார்.

அவரின் ஆட்சியில், பல துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிய பிலிப்பைன்ஸ், ஆசியாவின் இரண்டாவது மிகச் சிறந்த நாடாக விளங்கியது.

அதனால்தான் அவரது இறுதி ஊர்வலத்தில் இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்குள் இந்த விருதும் உருவாக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக