22.03.2021
பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம் கிரீக்
1784 மார்ச் 22 ஆம் தேதி உலகின் மிகப் புகழ்பெற்ற மரகதப் புத்தர் சிலை, தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள 'வாட் பரா கேவ்' அல்லது 'வாட் பரா சி ரத்தன சசாதரம்' என்று அழைக்கப்படும் ஆலயத்திற்கு மாற்றப் பட்டது.
உருவ வழிபாடு என்பதையே புத்தர் ஏற்காததால், தொடக்கத்தில் புத்தரின் சிலைகளே அமைக்கப்பட்டது இல்லை.
எண்பது வயதில் இறக்கும் வரை நடந்தே அவர் போதித்துக் கொண்டு இருந்ததால் அவருடைய பாதத் தடங்கள்; போதிமரம்; பயணிப்பவர் இல்லாமல் குடையுடன் குதிரை; அவர் இல்லாத வெற்றுச் சிம்மாசனம்; தர்மச் சக்கரம்; உள்ளிட்டவைதான் அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன.
சக்கரத்தின் ஆரங்கள் சமமாக இருந்தால்தான் அது சரியாகச் செயல்படும். அந்த அடிப்படையில் சமத்துவத்தின் அடையாளமாகப் புத்தர் பயன்படுத்திய தர்மச் சக்கரம்; பாதம் உள்ளிட்டவை சமத்துவத்தையே ஏற்காத இந்து சமயத்தால் பின்னாளில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
புத்தரின் உடலை அடையாளமாகப் பயன்படுத்துவதை அவர் மறுத்ததால், போதி சத்துவர்களின் உருவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரியதை புத்தர் ஏற்றுக் கொண்டதாக சர்வாஸ்த்திவாத பவுத்தம் கூறுவதால், போதி சத்துவர்களின் உருவங்களும் சிலைகளாகப் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து புத்தரின் சிலைகள் உருவாகத் தொடங்கின. இது அவருக்கு 5-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கிறித்துவின் உருவத்தை அந்தச் சமயத்தினர் பயன்படுத்தியதன் விளைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.
தொடக்ககால பவுத்தச் சிற்பக் கலையில், கிரேக்கச் சிற்பக் கலையின் தாக்கம் அதிகமிருப்பது, அப்பகுதிகளிலும் பவுத்தம் பெற்றிருந்த செல்வாக்கை மட்டுமின்றி, அங்கு கிறித்தவம் உருவான போது, பவுத்தத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும் விளக்குகிறது.
இன்று உலகில் இருக்கிற மிகப் பெரிய 10 சிலைகளில் 4 புத்தர் சிலைகள். உலகம் முழுவதும் பரவலாக மிக அதிகச் சிலைகளைக் கொண்டு இருப்பவரும் புத்தர்தான். பல்வேறு மிக அரிய பொருட்களாலான சிலைகளும் புத்தருக்கு உள்ளன.
அவற்றில் ஒன்றான இந்த மரகதக் கல்லாலான புத்தர் சிலை உருவான வரலாறு யாருக்கும் தெரியவில்லை. இந்துக் கடவுளர்களான விஷ்ணு, இந்திரா ஆகியோரால் உருவாக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு கதைகள் கூறப் படுகின்றன.
1434-இல் கிடைத்த இது, சுண்ணாம்பு சாந்தால் செய்யப்பட்ட சிலையாகவே கருதப்பட்டு, சியாங் ராய் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.
எதிர்பாராமல் சிலையின் மூக்குப் பகுதி சேதமுற்ற போது, உள்ளே பச்சை நிறம் தெரிந்தது. சுத்தம் செய்யப்பட்டபோது இரண்டு அடிக்கும் அதிக நீளமுள்ள மரகதக் கல்லில் செதுக்கப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஐந்து முறை இடமாற்றம் செய்யப்பட்ட பின், 1784-இல் தற்போதைய ஆலயத்தில் இது அமையப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக