08 டிசம்பர் 2023

பத்து தீகா கரு. ராஜாவின் மனவேதனைகள்

கரு. ராஜா, பத்து தீகா, சிலாங்கூர்

சிலாங்கூர், புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் 08.12.2023 - 10.12.2023 வரையில் இலவச இருசக்கர வண்டி கவசத் தொப்பிகள் வழங்கப்படுகின்றன எனும் செய்திக்கு பத்து தீகா கரு. ராஜா வழங்கிய பதில் பதிவுகளில் அவரின் மனவேதனைகள் பிரதிபலிக்கின்றன. அண்மையில் அவரின் மூன்றாவது மகன் ராஜமோகன் புற்றுநோயினால் மரணம் அடைந்தார். அந்தத் தாக்கம் இன்றும் அவரிடம் உள்ளது.


அவரின் பதிவு: காலையிலேயே போனால் ஒரு கவசத் தொப்பி வாங்கி வரலாம். ஒரு தடவை நான் பெட்டாலிங் ஜெயாவில் இருந்து பத்து தீகா போகும் போது இடையில் மடக்கி பழைய தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு ஒரு புதிய தொப்பியைக் கொடுத்தார்கள்.


எனக்கு இப்போது 77 வயது. இன்னும் இருசக்கர வண்டியை விரும்பி ஓட்டுகிறேன். ஒரு சிலர் என்னைப் பார்த்து இருசக்கர வண்டி ஓட்ட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்வார்கள். இந்தக் காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுவேன்.

சமீபத்தில் காலமான என் மகன் பெரிய மோட்டார் ஓட்டுவான். 900 சி.சி. நான் அவன் விசயத்தில் தலையிடமாட்டேன். இந்த மலேசியாவில் எல்லா இடங்களுக்கும் மோட்டார் சைக்கிளில் சென்று இருக்கிறான். அவனோடு சேர்ந்து சுமார் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பயணிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.

அப்பொழுது எல்லாம் எந்த விபத்தும் நடக்கவில்லை. இந்தக் கேன்சர் வந்து என் மகன் இறந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

பதில் இடுகைகள்:

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:

வயதை நினைக்காதீர்கள் ராஜா... மனசோடு வாழுங்கள்... என்னைப் பாருங்கள்... இன்றும் 16 என்றும் 16... அப்படி போய்க் கொண்டே இருக்கிறேன்... வயதை நினைத்தால் அங்கே ஒரு உள்ளார்ந்த தடை ஏற்படுவதை உணரலாம். Age is a number என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

07 டிசம்பர் 2023

ஈப்போவில் ஈமச் சடங்கு செய்ய 2500 ரிங்கிட்?

 மாசிலன், பகாவ் - 07.12.2023

அந்த அர்ச்சகர்களை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே இந்த இந்தியச் சமுதாயம் தானே... குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் இவர்களுக்கு இடம் கொடுப்பதால் தான் இந்த அளவுக்கு கேட்கிறார்கள்.


முன்பு கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில்‌ தொண்டு அடிப்படையில் சேவை வழங்குவார்கள். ஆனால் இன்று அது ஒரு வணிகம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து விட்டது.

ஈமச் சடங்குகள் செய்வதற்கு 2500 ரிங்கிட் கேட்ட அர்ச்சகர்...  100 ரிங்கிட்டில் செய்து முடிக்க வேண்டிய காரியம்...


மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். சமயத்தின் பெயரில் அதீதமாகக் கட்டணம் கேட்பது நியாயமன்று. இந்த சகோதரியைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து நம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முன் வரவேண்டும்.

ஈப்போ யோகேஸ்வரிக்கு மாமன்னரின் சிறப்பு விருது

 கென்னடி ஆறுமுகம், கிரீக், பேராக் - 07.12.2023

பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலரின் இரக்கச் செயல்களுக்காக, மாட்சிமை தாங்கிய மலேசிய நாட்டின் பேரரசரின் கரங்களால் அவருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.


ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் (Hospital Raja Permaisuri Bainun, Ipoh) பாதுகாவலரான யோகேஸ்வரி (Puan Yogeswary), சில மாதங்களுக்கு முன்பு நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் இவர் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து வைரலானது.

இந்த மருத்துவமனைக்கு வரும் குடும்பங்களின் மிகவும் கடினமான தருணங்களின் போது பார்க்கிங் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற அவரது உதவிகள் இந்த குடும்பங்கள் தாங்கும் கஷ்டங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு டிசம்பர் 19, 2023 அன்று இஸ்தானா நெகராவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இதற்கு முன்னர் இவர் கிரீக் குழுவக தமிழ்ப்பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றினார். அங்கும் அவர் சேவையை செய்தார். பள்ளி மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்குவது, அவர்களை வாகனத்தில் ஏற்றி விடுவது, அவர்களது புத்தக பைகளை எடுத்து சென்று வகுப்பறையில் வைப்பது, எவ்வளவு கனமழை பெய்து தான் நனைத்தாலும் மாணவர்களை மழையில் நனைய விடாமல் அழைத்து வருவார். 


ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா மணிக் கணக்கில் கடின உழைப்பை உழைக்கும் பொது மக்கள் தங்களுக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெறுவதைப் பார்ப்பது நம் இதயங்களை அரவணைக்கிறது. 
 
நாம் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் சரி, அதை அர்பணிப்புடனும், மனநிறைவுடனும் செய்தால் எந்த ஒரு உயரிய நிலையையும் அடையலாம் என்பதற்கு இவர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. 


இவருக்கு கடந்த மார்ச் 21-இல் பேராக் மாநில அளவிலான மகளிர் தின கொண்டாட்டத்தில் இவருக்கு செஜாத்திரா வனிதா விருது (Sejahtera Wanita Award) (பாதுகாப்பு வகை) எனும் சமூக சேவை விருதும் வழங்கப்பட்டது. அவர் பேராக் முதலமைச்சர் டத்தோஸ்ரீ சாரணி முகமட்டிடம் இருந்து விருதைப் பெற்றார்.

மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தபாவின் (Health Minister Dr Zaliha Mustafa) கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்ச்சி யோகேஸ்வரியின் அர்ப்பணிப்புக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

வாழ்த்துக்கள் சகோதரி யோகேஸ்வரி! ❤

-----------------------------------------------------------------

இடுகைகள்:

பெருமாள், கோலாலம்பூர்

வாழ்த்துகளும் நம்
இனத்திற்கு கிடைத்த பெருமையே.

ஒரு ஆண் பாதுகாவலர்
ஒருவர் அன்மையில்
பள்ளி ஒன்றிலிருந்து
ஓய்வு பெற்றார்.

ஆசிரியர்கள்
மாணவ மாணவியர்களும்
அவருக்கான பிரியாவிடையில்
பல பரிசு பொருட்களும்
கொடுத்து வழியனுப்பியுள்ளதும்
மனம் நெகிழ்வு கொள்ளும் நிகழ்வே.

செய்தொழிலை தெய்வமாக
மதிப்போரை பாராட்டுக்கள் தானாக
தேடி வரும் என்பதை
மெய்பிக்கும் இந்த நிகழ்வுகளே சாட்சியாகிறது.

நாமும் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்.ta





03 டிசம்பர் 2023

கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி

தனசேகரன் தேவநாதன் - 03.12.2023
வெண்பா மண்டப திறப்புவிழா

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் மற்றும் ஒரு சாதனைத் தளமாக கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி (SJKT Kampung Columbia, Ayer Tawar) உருமாற்றம் கண்டு வருகிறது. பற்பல போராட்டங்களுக்கு இடையில், மலேசிய தமிழர்களை ஈர்க்கும் வகையில், பற்பல சாதனைகளையும் படைத்து வருகிறது. 

பேராக், மஞ்சோங் மாவட்டம், ஆயர் தாவார் பகுதியில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது. 1918-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி 105 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. 

அத்தகைய கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாகத் தழைத்து வளர்ந்து வானுயரும் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றுதான் பேராக், ஆயர் தாவார் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளி. நல்லது நடக்கும் இடத்தில் நலிவின்மையும் தொடரும் என்பார்கள்.


அந்த வகையில் அண்மைய காலத்தில் இந்தப் பள்ளியில் எலிகளின் தொல்லையும் எல்லை மீறிப் போய்விட்டது. இப்பள்ளியைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் செம்பனை மரங்கள்; இயற்கை மேவிய பச்சை சமவெளிகள். அந்த வகையில் எலிகளும் மற்ற மற்ற ஊர்வனங்களும் இந்தப் பள்ளியில் அழையா விருந்தாளிகளாக வந்து போவது வாடிக்கையானது. 

பொது இடங்களிலும் சரி; பள்ளி வகுப்பறைகள் மற்றும் சிற்றுண்டி சாலையிலும் சரி; எலிகளின் கழிபொருள்கள் பெரும் சுகாதாரக் கேடுகளை விளைவித்து வந்தன. எலிகளை ஒழிக்கும் பல்வேறு திட்டங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை.



அஸ்ட்ரோ செய்திக் காணொலி

தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்களின் படிப்பை மேற்கொண்டால், அதுவே பின்னர் காலத்தில் மாணவர்களின் உடல்நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று பேராக் மாநில சுகாதார இலாகாவும் எச்சரிக்கை செய்தது. 

அந்த வகையில் எலிக் கழிவுகள், எலிகளின் சிறுநீர் துர்நாற்றத்தால் இந்தப் பள்ளி மூடும் ஆபத்தை நோக்கி இருந்தது. பள்ளியின் அமைவிடத்தை மாற்ற வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டது. அதே கட்டத்தில் கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளிக்கு பின்புறத்தில்; தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஓர் இடத்தில் புதிய பள்ளியைக் கட்டுவதற்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.


புதிய பள்ளி கட்டுவதற்கான நிலத்தை கொள்முதல் செய்யும் முயற்சிக்கு பேராக் மாநில மனித வள சுகாதார ஒற்றுமைத் துறை; இந்திய நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினரும்; சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு சிவநேசன் அச்சலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்தார். 

அதே வேளையில் ஓர் இக்கட்டான நிலைமை. புதிய பள்ளியின் நிலத்திற்கு 1.3 இலட்சம் ரிங்கிட் முன்பணம் (பிரிமியம்) கட்ட வேண்டும் என நிபந்தனையும் தொடர்ந்தது. இருப்பினும் மாநில அரசாங்கத்தின் தலையீட்டினால் அந்த முன்பணத் தொகை செயல்பாடு நிறுத்தம் செய்யப்பட்டது.


புதிய பள்ளிக்கு புதிய கட்டடத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு வழியாக, அடுத்த ஆண்டு மலேசியத் துணைக் கல்வியமைச்சர் இப்பள்ளிக்கு வரவிருப்பதாகவும் மாண்புமிகு சிவநேசன் தெரிவித்தார். 

பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2022-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 11,231 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 1679 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். அத்துடன் மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

தற்போது கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியில் 52 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன். சிறப்பான முறையில் கட்டொழுங்கான பார்வையில் பள்ளி நிர்வாகம் பயணித்து வருகின்றது. 



வணக்கம் மலேசியா காணொலி

பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பற்பல உள்நாட்டு வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு உயர்நிலைத் தோற்றத்தை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். ஆயர் தாவார் தமிழர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து மலேசியத் தமிழர்களுக்கும் பெருமை!

கடந்த 02.12.2023-ஆம் தேதி இப்பள்ளியின் வெண்பா மண்டபம் திறப்புவிழா கண்டது. அத்துடன் சிற்றுண்டி தினமும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்: 

1) மாணவர்களுக்கான பள்ளி நடவடிக்கைகளின் செலவு 
2) போக்குவரத்து கட்டணம்
3) கட்டட பழுது பார்ப்பதற்கான செலவு
4) வகுப்பறைகளில் திறன் தொலைக்காட்சி (Smart TV) பொருத்துதல்


பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைய காலங்களில் வாகனங்களின் மூலமாக பள்ளிக்கு வரும் பி 40 பிரிவு குடும்பங்களின் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டில் இருந்து வாகனப் போக்குவரத்து ஆண்டுத் தொகையான 12,500 ரிங்கிட்டை பேராக் மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. மகிழ்ச்சி தரும் செய்தி.


கொலம்பியா கிராமத் தமிழ்ப்பள்ளியின் வெண்பா மண்டப திறப்புவிழாவிற்கும்; மற்றும் பல பள்ளி நடவடிக்கைகளுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும்; பள்ளி மேலாளர் வாரியக் குழுவினரும்;  பொது மக்களும் வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இரமணி இராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன்

இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் வழிநடத்தியவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் ஆகும் அவர்களுக்கு பொறுப்பு வகித்த ஆசிரியர் திரு. மோ. கலைச்செல்வன். 

உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் தமிழ் மொழியின் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும். இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி என வாரியக் குழுவின் தலைவர் திரு. தனசேகரன் தேவநாதன் கூறுகிறார்.


தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற முடியும். அதுவே காலத்தின் கட்டாயம்.

01 டிசம்பர் 2023

மனித நேய மலேசிய உணர்வு

தனசேகரன் தேவநாதன், சித்தியவான், பேராக் - 01.12.2023

இனங்களுக்கு இடையில் மனிதத் தன்மைகள் பரவலாக அனுசரிக்கப் பட்டால், அங்கே பகுத்தறிவு வளர்கிறது. இணைந்து போகும் தாராள மனப்பான்மையை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்ல அவையே பகைமை உணர்வை வளர்வதைத் தடுக்கிறது என்று கூட சொல்லலாம்.


எல்லா இனங்களும் இணைந்து ஒவ்வொருவரின் மாறுபட்ட கலாசாரத்தை ஏற்றுக் கொள்வது பல்லின மக்கள் வாழும் நாட்டில் சுபிட்சத்தை வளர்க்க உதவும். ஒற்றுமையைக் காண நல்லெண்ணம் தேவை. நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்கின்ற முரட்டு இறுமாப்பு நல்லிணக்கத்தை வளர்க்காது.

பேராக், ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தான், கிந்தா தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கு பணிபுரிந்த ஓர் இந்திய பாதுகாவலரிடம் தங்களின் அன்பின் வெளிப்பாட்டை வெளிக் கொணர்ந்த முறை மலேசியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.