27 டிசம்பர் 2020

நீலப் பெருகடல் திட்டம் - குமரன் வேலு

17.12.2020
 
பதிவு செய்தவர் - பி.கே.குமார்


நீலப் பெருங்கடல் திட்டம் (Blue Ocean Strategy) ஒரு சிந்தனை ஊக்கி, உத்தி, நல்ல வழிகாட்டி.  திட்டமிடும் எல்லோர்க்கும் சிறந்த கருவி. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் சான் கிம் (Chan Kim); உதவியவர் அவரின் நண்பர் பேராசிரியை ரெனி (Renee Maubougrne).

இந்த நீலப் பெருங்கடல் சிந்தனையின் சில அடிப்படைகளைப் பார்ப்போம்.

ஒரு அனுமானக் காட்சியைப் முதலில் பார்ப்போம்.

குமரன் வேலு

நீஙகள், பினாங்கில் இருந்து 400 கி.மி தொலைவுத் தாண்டி புத்திரா ஜெயாவில் உள்ள ஓர் அரசு அலுவலகத்திற்கு வருகின்றீர்கள். முக்கியமான சிக்கல் ஒன்றுக்குத் தீர்வுக் காண அந்த அலுவலகம் வருகின்றீர்கள்.

கார் நிறுத்துமிடம் கிடைக்காததால், 2கி.மி வியர்க்க விறுவிறுக்க  நடந்து சென்று அலுவலகத்தை அடைகின்றீர்கள்.

வந்த இடத்தில் அதிகாரி விடுமுறையில் இருப்பதாகவும், வேறு யாருக்கும் அந்த சிக்கலைப் பற்றி தெரியாது என்று சிடுசிடுக்க கூறி உங்களை அடுத்த வாரம் வந்து பார்க்கச் சொல்கின்றார்கள்.

உங்கள் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கும்? உங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?

உங்களுக்கு சினம் வருகிறது. நேரம் வீணாகி விட்டது. பணம் வீண் செலவு. அருகில் இருக்க வேண்டிய அலுவலகம் முட்டிவலி வரவழைக்கும் தொலைவில் இருக்கிறது. தனியாக நடந்து போவதால் திருட்டு பயம் வேறு. 'பேருதான் பெரிய பேரு. புத்திராஜெயா. ஒரு மண்ணும் வேலைக்கு ஆகவில்லை'. இப்படி நீங்கள் புலம்புகின்றீர்கள்.


ஒரு பயனீட்டாளர் என்ற முறையில் நீங்கள் கீழே உள்ள 6  விடயங்களை எதிர்ப்பார்க்கின்றீர்கள்.

1.  உற்பத்தித்திறன் (Productivity)

2.  வசதி   (Convenience)

3.  எளிமை (Simplicity)

4.  இடரின்மை (Risk free)

5.   மதிப்பும் & கலகலப்பும் (Fun and Image)

6.  நட்புச் சூழல்   (Environmental friendliness)

ஓர் இடத்திற்கு சென்றோமா ஒரே நேரத்தில், விரைவாக  பல வேலை வேலைகளை முடித்தோமா சாதித்தோமா என்றிருந்தால் அது உற்பத்தித் திறன் (productivity) .  

காரை விட்டு இறங்கியதும் அலுவலகம் மிக பக்கம்  இருந்தால் வசதி (convenience). அலுவலகத்திற்கு உள்ளே செல்ல படிக்கட்டு ஏற வேண்டியதில்லை.

ஒரு பொத்தானை அமுக்கினால் உடனே மாடிக்கு உங்கள் தூக்கிச் செல்ல ஒரு மின்தூக்கி (lift). அது எளிமை (simplicity).  

வரும் வழியில் திருட்டு பயம், காணாமல் போய் விடுவோம் என்ற பயம் இல்லை (Risk free).  


அலுவலகத்தில் அதிகாரிகள் வரவேற்று சிரித்தமுகத்துடன் உங்கள் குறைகளைக் கேட்டு அறிந்தால் (fun & image) உங்களுக்கு அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் நல்லெண்ணமும் உண்டாகும்.

நீங்கள் வந்த இடத்தில் மகிழுந்து நிறுத்தம் கிடைக்காமல் அல்லாடியதற்கு சூழல் நெருக்கடி காரணம். இது சூழல் சிக்கல். அதிகமாக கார்கள் இருந்ததால் இடம் கிடைக்கவில்லை. சாலை நெரிசல் கூட நட்புறவற்ற சூழல்தான்.

நாம் வாழும் புறச் சூழல் சுத்தமாக, விசாலமாக, தூய்மையாக, நெரிசல் இன்றி இருந்தால் அது நமக்கு நட்புடறவுமிக்க சூழல் (environmental friendliness). சில நேரங்களில் அகச் சூழலும் நமக்கு சாதகமாக இருப்பதில்லை.

சரி, இப்போது தமிழ்ப்பள்ளியை தேர்ந்தெடுக்கும் ஒரு படித்த பெற்றோர் என்ன வகையான எதிர்ப்பார்ப்புகளை கொண்டு இருப்பார்?

உற்பத்தித் திறன்

1. தன் பிள்ளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்ததும் விரைவாக மொழிகளில் நன்கு   எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று புகழ்பெற வேண்டும். குறிப்பாக தமிழ், ஆங்கிலம், மலாய். கணக்குப் பாடத்தில் கெட்டிக்காரனாக வேண்டும். அறிவியலில் 100 புள்ளிகள் எடுக்க வேண்டும்.  


#இதுதான் உற்பத்தித் திறன். இப்படிப்பட்ட  மாணவரை உற்பத்தி செய்யும் திறனைப் பள்ளிகள் கொண்டிருந்தால், தமிழ்ப்பள்ளிகள், முழக்கமிடாமலே தானாகவே தேர்வாகும். இந்தச் சாதனையைச் செய்யக்கூடிய ஆற்றல் ஆசிரியரிடம் உண்டு. இந்த எதிர்ப்பார்பைப் பூர்த்தி செய்ய நம் பள்ளிகள் முயல வேண்டும்.

வசதி

2.  பள்ளிகள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வசதி வேண்டும். போக்குவரத்தில் செலவாகும் நேரத்தையும் பணத்தையும் மிச்சம் பிடிக்க பெற்றோர் விரும்புவர். குறைந்தது இந்த வசதியைப் பெற்றோருக்கு வழங்க வேண்டும். 70% தமிழ்ப்பள்ளிகள் தோட்டப்புறத்தில் அமைந்து உள்ளன.

90% இந்தியர்கள் நகர்ப் புறத்தில் வாழ்கிறார்கள். நகர்ப்புறத்தில் இருந்து தோட்டப் புறத்து பள்ளிக்குச் செல்ல அதீதமான தமிழ்பற்று வேண்டும். மேலும், நல்ல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி வசதிகள் கொண்ட பள்ளிகளைப் பெற்றோர் விரும்புகின்றனர்.

மாட்டுக் கொட்டகை மாதிரி இருக்கிறது என்று தமிழ்ப் பள்ளிகளை கிண்டல் அடிக்கும் சிலரும் இருக்கின்றார்கள். பள்ளியின் வெளித் தோற்றம், உட்கட்டமைப்பு வசதி இவையும் கவனிக்கப்படும் அமசங்களே.

எளிமை

3. ஆசிரியரையும் தலைமையாசிரியரையும் உடனே கண்டு பேசக் கூடிய எளிமையை பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். பந்தா காட்டாத, பகைமைக் காட்டாத ஆசிரியர்கள், மாணவர்களுடன் நன்கு பழகி அவத்களின் சிறப்புத் தேவைகளை அறிந்திருக்கும் ஆசிரியரை பெற்றொர் எதிர்ப்பார்க்கின்றனர்.

மதிப்பும் கலகலப்பும்

4. பள்ளியின் பெயரைச் சொன்னாலே மதிப்பும் மரியாதையும் உண்டாகும் அளவுக்கு உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் விரும்புகின்றனர். மதிப்பு மிகுந்த  தலைமையாசிரியர், ஆசிரியரும் இதனுள் அடங்குவர்.

அதனால் பள்ளிகள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் புகழ் பெற்றிடும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பள்ளிக்கு வரும் பெற்றோரைக் கலகலப்பாக வரவேற்கும் பண்பும் பெருக வேண்டும்.

இடரின்மை ( ஆபத்தில்லாமை)

5. பெற்றோர்கள் பிள்ளைகளின் உயிர், உடல், உடமை இம்மூன்றின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எனவே, பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  மாணவர்க்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது.

பள்ளிக்கு வரும் வேளை, பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகும் வேளை, பள்ளியில் இருக்கும் வேளையில் மாணவரின் உடலுக்கும் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பள்ளியைப் பெற்றோர் விரும்புவர்.

பாதுகாப்பான போக்குவரத்து வசதி, பள்ளியில் வழங்கப்படும் கவனிப்பு, அக்கறை, பிள்ளைகள் தோல்வி அடையாமல் காக்கும் முயற்சிகளைப் பெற்றோர் போற்றுவர். பிள்ளைகளுக்கு உணவு, அன்பு, கவனிப்பு தரும் பள்ளிகளைத் தேடி ஏழைப் பாட்டாளிகள் வருவதும் உண்டு.

இவற்றைப் பற்றி பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும். பள்ளி வழங்கும் அனைத்து வாய்புகளையும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.

சூழல் நட்புறவு

6. பள்ளி வழங்கும் விசாலமான கட்டிடங்கள், படிக்கும் அறைகள், ஒரு மாணவருக்கு ஒரு மேசை, ஒரு நாற்காலி, வகுப்பின் உள்ளே பல்வேறு வசதிகள், நெருக்கடி , நெரிசல் இல்லாத சூழல், பெற்றோர் வந்தால் வசதியான கார் நிறுத்துமிடம், தூய்மை, சுத்தமான சுற்றுச் சூழல், துர்நாற்றம் இல்லாத கழிப்பறை, செப்டிக் தாங்கிகள், இப்படிப் பள்ளியின் சூழலை நோக்கும் பெற்றோரும் உண்டு.

# ஒரு பள்ளியைத் தேர்தெடுக்கும் பெற்றோர் முழுக்க முழுக்கத் தமிழ்ப்பற்றின் காரணமாக மட்டும் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. 51% விழுக்காடு இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளியிலும் சீனப் பள்ளியிலும் படிப்பதே இதற்கு போதுமான சான்று.

அவர்கள் வெவ்வேறு ஈர்ப்புகளையும் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அறிந்து அதை வழங்கினால் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு  முழக்கம் வெற்றி பெரும். இல்லையேல் எந்த பயனும் இல்லாது வெற்று முழக்கமாகி விடும்.

அடுத்து, தமிழ்ப் பள்ளியை விரும்பாத, ஆனால் அவர்களைத் தமிழ்ப் பள்ளிப் பக்கம் தொடர்ந்து கவர்ந்து இழுக்க வேண்டிய அளவுக்கு முக்கியமான பெற்றோரைப் பார்ப்போம்.

#அ. ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் (DLP & PPSMI) என்றால் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் தற்காலிக வாடிக்கையாளர்கள் இந்த வகையினர்.

2003-இல் 90 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். (PPSMI அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு)
 
2009-இல் 115,000 மாணவர்கள். ஏறக்குறைய 25,000 பேர் அதிகரித்தனர். அதன் பிறகு மாணவர் எண்ணிக்கை இறங்கு முகம் கண்டது.

2010- இல், PPSMI இல்லை என்றதும் மறுபடியும் மலாய்ப் பள்ளிக்கு மூட்டைக் கட்டிய பெற்றோர்கள் இவ்வகையினர்.

இவர்களை எவ்வாறு தமிழ்ப்பள்ளிப் பக்கம் கவர்வது?

இவர்கள் ஆங்கில மோகிகள். அதாவது ஆங்கிலத்தில் படித்தால் அறிவு என்றும் அதுவே எதிர்காலம் என்று நம்புகின்ற பெற்றோர்.

ஆங்கில மொழியின் & மலாய் மொழியின் தரத்தை, தேசியப் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வழங்கினால் தமிழ்ப்பள்ளிப் பக்கம் இவர்கள் ஓடிவருவர் என்று தாராளமாக நம்பலாம்.

அதனால், தமிழ்ப் பள்ளிகளில் பாலர்ப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். தடைகள் வரும். அதை தகர்க்கும் வழியும் உண்டு.

ஆங்கில, மலாய்மொழி  அடைவை உயர்த்த தமிழ்ப் பள்ளிகள் கொண்டுள்ள சிறப்பு திட்டங்கள் விளம்பரப் படுத்தப்பட வேண்டும். வெற்றியைக் காட்ட வேண்டும். இதுவே மதிப்பு கூட்டப்பட்ட திட்டங்கள் பொதுமக்கள் அறிய வேண்டும்.

எ.கா. பாட நேரத்திற்கு பிந்திய மாலை வகுப்பு - அறிவியல் ஆங்கிலம், தொடர்பு கொள்ள மலாய் மொழி, கூடுதல் கணிதம், என்று முறைப் படுத்தப்பட்ட  திட்டங்கள் நிறைவேற வேண்டும். கண்டிப்பாகப்  பெற்றோர் கவரப் படுவர்.

பெற்றோர் ஆசிரிய சங்கம், வாரியங்கள், முன்னால் மாணவர் இயக்கம், தமிழாசிரியர் இயக்கம், தமிழ்ச்சங்கம் இவை முயன்று செய்ய வேண்டியப் பணிகள் இவை.

#ஆ.  தமிழ்ப்பள்ளி வெறுப்பாளர்கள்

இவர்களில் தமிழரும் உண்டு; தமிழர் அல்லாதாரும் உண்டு.

தமிழராக இருந்தால், இவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்கள் என்றே கூறலாம். மேட்டுக்குடி என்று தங்களைக் கருதிக் கொள்ளும் கூட்டம். தமிழ்ப் பள்ளிகள் ஏழைகளின் கல்விக் கூடம் என்ற சிந்தனை உடையவர்கள்.  தாங்கள் பணத்தால், வசதியால் உயர் சாதியினர் என்றும் நினைப்பது உண்டு.

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சாதாரண தமிழ்ப்பள்ளிப் பக்கம் தலைவைக்க மாட்டார்கள்.

இவர்கள் மதிப்பு (image) விரும்பிகள். தமிழ்ப் பள்ளிகள் உலகப் புகழ்ப் பெற்றால் மட்டுமே அதன் தரத்தை நம்புவார்கள்.

நாம் வழங்கும் தொடர் விளம்பரம், சான்றுகளுடன் கூடிய வளர்ச்சி, எதிர்காலத்தில்  சிலரைத் தமிழ்ப்பள்ளி பக்கம் கொண்டு வரக்கூடும்.

இவர்களுக்காகவே சில சிறப்பு தமிழ்ப் பள்ளிகள் (elite) உருவாக வேண்டும். இங்கு அதி மேதாவித் தனமான (gifted children) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இருந்தால் சிலர் இங்கு பிள்ளைகளை அனுப்பக்கூடும்.

இ. மூன்றாவது பிரிவு மிகப்பெரிய கூட்டம். இவர்கள் தமிழர் அல்லாத மற்ற இனத்தினராக இருக்கும் கூட்டம். சீனர், மலாய்க்காரர்கள், சீக்கியர்கள், வட இந்திய வம்சாவளியினர், தெலுங்ககர், மலையாளிகள் போன்றவர்கள்

இவர்கள் தமிழ்ப்பள்ளியைப் பற்றி ஒன்றும் அறியாதவராக இருக்கக் கூடும்.

எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளியின் வாடிக்கையாளராக இவர்கள் மாறும் சூழல் உருவாகும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இப்போது இல்லை. ஆயினும் இவர்களில் ஒரு கணிசமானவர்கள் தமிழ்ப் பள்ளியில் படித்தால், தமிழ்ப் பள்ளிகளின் நிலைத் தன்மைக்கு உதவியாக இருக்கும்.

இவர்களின் தேவை என்ன? எதிர்ப்பார்ப்பு என்ன?

இவர்கள் விரும்புவது தரம். போட்டியிட்டு வாழ்வதற்கு ஆதாரமான கல்வி அனைத்தும் தரமாக கிடைக்க வேண்டும் என்பது  இவர்கள் எதிர்ப்பார்ப்பு. அதனால் தான் 100,000 மலாய் மாணவர்கள் சீனப் பள்ளியில் படிக்கின்றனர்.

தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு முழக்கம். தமிழ் அறிந்தவர்களை; தமிழ்ப்பள்ளிக்கு இப்போது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிற பெற்றோரை; மட்டுமே சுற்றி வந்து கொண்டிராமல், அனுப்பாத அந்த மூன்று வகை பெற்றோரின் எதிர்ப்பார்புகளுக்குப் பதில் சொன்னால், மாணவர் எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

51% தேசியப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவரைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் இழுக்கவில்லை என்றால், மாணவர் எண்ணிக்கை உயராது என்பதே வருத்தத்திற்கு உரிய செய்தி.

- குமரன் வேலு

தமிழ்ப்பள்ளிக்கு வந்த அவல நிலை - ஜெயகோபாலன்

17.12.2020

Jayagopalan: பல ஆயிரங்களைச் (அது லட்சமாகக்கூட மாறலாம்) செலவழித்து இப்படி பலதரப்பட்ட சலுகைகளை வழங்கி தம் பள்ளிக்குக் குழந்தைகளை ஈர்க்கும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் & நிர்வாகத்திற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் & பள்ளி வாரியத்திற்கும் முதற்கண் நமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் பகிர்ந்து கொள்வோம்.

ஆனாலும் அதிக அளவில் பணம் செலவாகும் எல்லாப் பள்ளிகளும் இச் சலுகைகளை வழங்க இயலாது.

இவ்வளவு சலுகைகள் வழங்கினால்தான் நம் தமிழ்ப்பள்ளிக்கு தனது குழந்தைகளை அனுப்புவேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிபார்களேயானால்; அந்த அவல நிலையை என்னவென்று சொல்வது.

அவல நிலையின் உச்சம் இலவச சீன மொழி போதனை (அது கட்டாயம் இல்லை என்றாலும்கூட) . ஜாவியை எதிர்க்கும் நாம் சீனத்தை ஏற்கலாமோ?!

சீனப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தமிழ் இலவசமாக போதிக்கப்படும் என சீனன் தன்மானத்தைவிட்டு கூவி அழைப்பானா என்ன🤷‍♂?!

தமிழ்ப் பள்ளியின்பால் உள்ள பற்று - அது இரத்தத்திலும் சதை நரம்புகளிலும் ஊறி இருக்க வேண்டும். மொத்தத்தில் உயிரோடு கலந்து இருக்க வேண்டும். இலவசத்தால் வருவது அல்ல தமிழ்ப்பற்று ஐயா. தமிழ்ப்பள்ளியே எமது தேர்வு 🙋‍♂

BK Kumar: எட்டு பேர் தமிழர்களாகவும் தமிழ்ப் பள்ளியில் அல்லது தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பியவர்களாக இருப்பார்களா. அப்படி இல்லை என்றால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை

Muthukrishnan: நியாயமான பார்வை. நியாயமான கருத்துகள். பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயக்கம் காட்டும் பெற்றோர்களை ஈர்ப்பதற்குத் தான் அப்படி ஒரு சலுகை முறையைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

தலையாய நோக்கம் தமிழ்ப்பள்ளிகளைப் பாதுக்காப்பதே..

எனினும் எல்லாப் பள்ளிகளிலும் அந்த முறையை அமல்படுத்த இயலாது. உண்மைதான் ஐயா. தங்களின் கருத்தும் ஏற்புடையதே... நன்றிங்க...

-அன்பர் ஜெயகோபாலன் நல்ல ஒரு தமிழார்வலர். மலேசியத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிறையவே தொண்டுகள் செய்து உள்ளார். இணையம் வழியாகத் தமிழ்க்கல்வி கற்பித்து வருவதில் முன்னோடியாகத் திகழ்கின்றார்.

இவர் பாகான் செராய் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்.

பணி ஓய்வு பெற்றுவிட்டேன் (15.08.2020 - 60 வயது நிறைவு) ஐயா 🙏


Kumaran Marimuthu: உங்கள் பதிவை நான் இரண்டாகப் பார்க்கிறேன்.

கருத்து 1


எல்லா தமிழ்ப்பள்ளிகளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் கொடுப்பதைப் போன்று சலுகைகளை ஏற்படுத்தித் தர இயலாது என்ற கூற்றை நானும் ஏற்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு முயற்சி செய்யத் தெரிந்தவர்களுக்கும் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குமே அது சாத்தியமாகும். உணர்வுகளின் அடிப்படையில் வீம்புக்கு வீர வசனம் பேசுகின்றவர்களாலும் வாயில் வடை சுடுபவர்களாலும் அவ்வாறு செய்ய இயலாதுதான் ஐயா.

மக்களாட்சி முறையில் நேர்மையாக அரசாங்கம் இதுவரை ஆட்சி செய்து இருந்தால் நாமும் மலாய் பள்ளிகளைப் போன்று மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வெறுமனே இருந்து இருக்கலாம்.

இதுவரை நாட்டை ஆண்டவர்களும் சிறுபான்மை மக்களை, குறிப்பாக கல்வித் தேவைகளை நாசுக்காக புறக்கணித்தார்கள். கேட்பார் யாரும் இல்லை.

விடுதலைக்குப் பிறகு இந்த இனத்தின் காவலன் என்று கொக்கரித்தவர்களும் எஜமானர்களின் கைப்பாவையாக மாறி சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யாமல் உல்லாசத்தில் சிலேகித்துப் போனார்கள்.

தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் அரசியல்வாதிகளை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி, கால்களுக்கு கீழே செக்கு மாடுகளாய், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

இவர்கள் சீன அரசியல்வாதிகளைப் போல் செயல்பட்டு இருந்தால் பள்ளிகளின் தரம் உயர்ந்திருக்கும்; என்ன செய்ய? பள்ளி மேம்பாட்டிலும் உருமாற்றத்திலும் ஏகப்பட்ட ஊழல். மல்லாந்து உமிழ்ந்தால் வேறென்ன வந்து சேரும் ஐயா? (இது எல்லா அரசியல் சகுனிகளுக்கும் பொருந்தும்).

கருத்து 2

அவல நிலையின் உச்சம் இலவச சீன மொழி போதனை என்று கூறி இருக்கின்றீர்கள்.

இந்தக் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ஐயா. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்? நடப்பு நிலவரங்களை சரியாக உள்வாங்கிக் கொல்லாது ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைக்கின்றீர்கள்?

மேலும் ஒரு மொழியைக் கற்றல் ஒரு மாணவனுக்கு கூடுதல் பலம் தானே? அதுவும் மலேசியாவைப் பொருத்த மட்டில் வேலைச் சந்தைக்கு சீன மொழியும் ஏற்றதுதானே? மாணவர்களை சிறு வயதிலிருந்தே தயார் செய்வது எவ்வாறு அவலமாகும்?

// ஜாவியை எதிர்க்கும் நாம் சீனத்தை ஏற்கலாமோ?//

மன்னிக்கவும். இதை உங்கள் சொந்தனையின் அவலமாகவே நான் கருதுகிறேன்.

ஜாவியை கற்க யார் எதிர்த்தார்கள்? கூறுங்கள். ஜாவி என்ற ஒரு மொழியை கட்டாயப் பாடமான மலாய் மொழியில் ஓர் அங்கமாக வலுக் கட்டாயமாக திணிப்பதைத் தானே இந்த சமுதாயம் எதிர்க்கிறது (ம.இ.கா எந்த அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பும் இதுவரை காட்டவில்லை). தனி ஒரு பாடமாக ஜாவி மொழியை பயில்வதற்கு யாரும் எதிர்க்கவில்லையே?

சீன மொழியை படிப்பது அவலம் என்றால் ஆங்கிலம் எதற்கு?

மலேசியம் அறிவார்ந்த புலனம். என்னற்ற தகவல்களை தேடித் தேடி, அள்ளி அள்ளி நமக்கு விருந்தாகக் கொடுத்து வருகிறார் ஐயா மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்கள். அப்படி இருக்க இங்கே தவறான தகவல்களை அரங்கேற்றலாமா?

முன்னேற்றகரமான சிந்தனைகளை விதைத்து, செயல்களைச் செய்து சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுவோம்.

(குமரன் மாரிமுத்து)
கெர்லிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்,
பள்ளி வாரிய துணைத் தலைவர்.


பின் குறிப்பு: ஜாவி வழக்கு மற்று தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் சட்டத்திற்கு புறம்பானது என்ற இரு வழக்கிலும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் சார்பில் என் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. (விளம்பரம் தேவை இல்லை என்பதால் இதுவரை நான் இந்தப் புலனத்தில்கூட காட்டிக் கொண்டது இல்லை; இன்று வேறு வழி இல்லை)


Raja Sg Buluh: ஒரே வரியில் சொல்கிறேன்... அருமை.



 

தமிழர் தாயகம் - பி.கே.குமார்

16.12.2020

BK Kumar: உலகில் மக்களினம் முதல் முதல் தோன்றி வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவது குமரிக்கண்டம் என்பதாகும்.

ஆய்வாளர்கள் இது இன்றைய இந்திய ஒன்றியத்தின் தென்பகுதியும் இந்தியப் பெருங்கடலில் மடகாசுகர் முதல் ஆத்திரேலியா வரையும் பரந்து விரிந்த நிலப் பரப்பாக இருந்தது என்கின்றனர்.

குமரிகண்டத்தின் தென்பகுதி:

ஏழ்தெங்குநாடு,

ஏழ்பனைநாடு,

ஏழ்முன்பாலைநாடு,

ஏழ்பின்பாலைநாடு,

ஏழ்குன்றநாடு,

ஏழ்குணகாரைநாடு,

ஏழ்குறும்பனைநாடு,

என 49 பிரிவுகளாகச் சிறந்தோங்கித் திகழ்ந்தன. புலவர் கா.ப. சாமி அவர்கள் இன்றைய மலாயா, சாவா, சுமத்ரா, போர்னியோ, இலங்கை யாவும் இந்த 49 நாடுகளைச் சேர்ந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்.

📖 நூல்: வரலாற்றில் தமிழகம், பக்கம்~32



26 டிசம்பர் 2020

இன்சான் பெகா பாலகோபாலுக்கு கண்டனம்

16.12.2020

தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்குப் புத்ரா கட்சிக்கு ஆதரவு கொடுத்த மலேசிய இன்சான் பெகா பாலகோபாலுக்கு மலேசிய தமிழர் அமைப்புகளின் கண்டன அறிக்கை.

Raja Sg Buluh:
தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென புத்ரா கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்சான் பெகா (Insan Peka) இயக்கத்தை சார்ந்த பாலகோபாலின் செயல் அருவருக்கத் தக்கது

உலக கல்வி நிறுவனமாகிய யுனெசுகோவின் (UNESCO) பரிந்துரையின்படி தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியை கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி பள்ளி இயங்கவும் காக்கவும் உரிமை இருக்கிறது.

அதை அவமதிக்கும் வகையில் மூட வேண்டுமென வழக்கு தொடுப்பதும் அதை ஆதரிப்பதும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்

தாய்மொழி பள்ளிகளை மூட வழக்கு தொடுப்பத்திருப்பது ஒரு கீழ்த்தரமான செயல். அதற்கு ஆதரவு குரல் கொடுப்பது அதைவிட கேவலமான செயல். அச்செயலை புரிந்திருக்கும் இன்சான் பெகா இயக்கத்தின் தலைவர் பாலகோபல் தமிழ்ப்பள்ளி வேண்டாம் என பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது..?

இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் 85% -தில் இருக்கும் தமிழர்களின் தாய்மொழியான தமிழ் மொழியை போதிக்கும் தமிழ்ப் பள்ளிகளை மூட சொல்ல தமிழரல்லாத இவருக்கு என்ன தகுதி இருக்கிறது..? யார் இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது..?

நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, ஏன் தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென சொல்கிற புத்ரா எனும் இனவாத கட்சி தொடங்குவதற்கு முன்பே, அதாவது 1816இல் பினாங்கு பிரீ பள்ளியில் தொடங்கிய தமிழ் வகுப்பிலிருந்து சுமார் 204 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் இம்மண்ணில் நிலைத்து வருகிறது

இந்த 204 ஆண்டுகள் தொடர்ச்சிக்கு எத்தனையோ கல்விமான்கள், அறிஞர்கள், சமுதாய தலைவர்கள், இனப்பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரது உழைப்பு, தியாகம், அற்பணிப்பு இதில் இருக்கிறது. இதை எல்லாம் கொஞ்சம் கூட தெரியாது தமிழ் பள்ளியின் வரலாறு அறியாது குருட்டுத்தனமாக அதை மூட வேண்டுமென குறைப்பது வேடிக்கையாக இருக்கிறது

அப்போதெல்லாம் சீர்குலையாத ஒற்றுமையாய் இப்போது சீர்குலைந்தது. உண்மையில் தாய்மொழி பள்ளிகளை அகற்றினால்தான் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும், உரிமைப் போர் தொடங்கும்.

தாய்மொழி பள்ளிதான் ஆரம்பப் பள்ளி மாணவர்களை சீர்படுத்துகிறது. குறிப்பாக, தாய்மொழி வழியாக கணிதம், அறிவியல் படிப்பவர்களுக்கு ஆய்வுச் சிந்தனை (Critical Thinking) ஏரணம் (Logic) கரணவியல் (Reasoning) புத்தாக்கச் சிந்தனை (Inovative) முதலான திறன்கள் மிகச் சிறப்பாக வளரும்.

பிரான்சு, செருமன், சப்பான், சீனா, கொரியா முதலான நாடுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் உருவாகுவதற்கு காரணம் அந்த நாடுகளில் கணிதம், அறிவியலைத் தாய்மொழியில் படிப்பதுதான் என்பதே உண்மை.

இத்தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் பெரும்பாலோர் தலை சிறந்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல துறைகளில் கால் பதித்து வருகிறார்கள்.

அதுமட்டுமின்றி தற்போது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எல்லா போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதைப் பொறுக்காது பொறாமையால் சில இனவாத கும்பல் கிளம்பியிருக்கிறது. அதில் ஒன்றுதான் புத்ரா கட்சியும் அதற்கு வக்காலத்து வாங்கும் அரைவேக்காடு கூட்டமும்

தாய்மொழி பள்ளிகளை சீண்டி தம்மின ஆதரவாளர்கள் மூன் கதாநாயகனாக திகழலாம், பேசும் மனிதராக ஆகலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் சில அரசியல்வாதிகள் திரிந்து வருகிறார்கள்

இப்படிப்பட்டவர்களையும் அதற்கு ஆதரவைத் தரும் பாலகோபால் போன்ற நயவஞ்சகர்களின் முகத் திரையை கிழித்து, நிந்தனை சட்டத்தில் கைது செய்யும் வரை  நாம் ஓயக்கூடாது

மலாய்க்காரர்களின் உரிமைகள் பற்றி எந்த சூழலிலும் தமிழர்கள் நாங்கள் கேள்வி எழுப்பியதில்லை. அதற்கு எதிராக எந்த செயல்பாடும் நாங்கள் புரிந்ததில்லை. நிலைமை இப்படியிருக்க, எங்கள் தாய்மொழி பள்ளிகளை மூட தொடர்ச்சியாக மாறி மாறி குரல் எழுப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம்

இறுதியாக ஒன்றை நினைவூட்டுகிறோம். தென்னகத்தில் இந்தித் திணிப்பால் எங்கள் தாய்மொழி அழிந்து விடுமோ என அஞ்சி போராடி, நெருப்புக்கு இறையாக உயிர்நீத்த 840 வீரமறவர்கள் வழிவந்த, தமிழர் தேசிய இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.

எங்கள் இனத்தின் அடையாளமாக திகழும் தாய்மொழி பள்ளிகளை காக்க நாங்கள் எதுவரைக்கும் செல்வோம் என்பதை புத்ரா கட்சிக்கும் அதற்கு ஆதரவு தந்த இன்சான் பெகா பாலகோபாலுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்

11:37 pm

 

கெர்லிங் தமிழ்ப்பள்ளி - குமரன் மாரிமுத்து

16.12.2020

மாணவர் எண்ணிக்கை சரிகிறதே என்று சும்மா இல்லாமல் முயற்சிகள் செய்கிறது கெர்லிங் தமிழ்ப்பள்ளி!


Kumaran Marimuthu: பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் இயக்கம்... இவை மூன்றும் பள்ளி நிர்வாகத்திற்குத் துணையாய் நிற்கின்றன. TAB முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.

அருகாமையில் மாணவர்கள் இல்லை; தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் சற்று தூரத்தில் இருக்கும் இடங்களில் இருந்து வருகின்றவர்கள்; அந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் பெருமைப் படுத்துவது நியாயம் என்று கருதுகிறோம்.

அவர்களின் பற்று போற்றப்பட வேண்டியதாகவே கருதுகிறோம். ஆகவே, இது போன்ற சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் கற்றலுக்குத் துணையாகவும் அமையும்.

இதில் தலைமை ஆசிரியர் திரு. குமார் சிதம்பரம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ ஆனந்தன் இருவரின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியது.

அதோடு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள், வட்டார அரசு சாரா இயக்கங்கள், ஆலயங்கள் என்று பலரின் ஒருங்கிணைந்த உழைப்பும் இதில் உண்டு.

அதோடு மட்டுமின்றி, ஐந்தாண்டுகளுக்கு முன்பு குருகுலம் என்ற திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம்.

வறுமை, குடும்ப சிக்கல்களின் காரணத்தால் படிப்பதற்குச் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு முழு தங்கும் வசதியுடன் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி இன்று வரை செயல் படுத்தி வருகின்றோம்.

இதுவே நாட்டில் தங்குமிடத்தோடு மாணவர்களைக் கொண்ட முதல் தமிழ்ப்பள்ளி (தற்சமயம் சா ஆலாம் மிட்லண்ட் தமிழ்ப்பள்ளியும் மாணவர் தங்கும் விடுதி கொண்டு உள்ளது).

அரசாங்கம் செய்ய முடியாத ஒரு திட்டத்தை நம் சக்திகளை ஒன்று இணைத்தால் செய்ய முடியும் என்பதை ஒற்றுமையோடு மலேசிய இந்தியர்களுக்கு செயல் வடிவில் மெய்ப்பித்து வருகின்றோம்.

குமரன் மாரிமுத்து
16.12.2020

Muthukrishnan: நன்றிங்க தம்பி. கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் தமிழ் எழுச்சி உணர்வு...  போற்றப்பட வேண்டிய ஒரு தமிழ்ப் பரிமாணம். மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக் காட்டாகவும் அமைகின்றது... வாழ்த்துகிறோம்...

தவிர, நான் ஆசிரியராய்ப் பணியாற்றிய பள்ளி. உணர்வுகளின் உரசல்கள் இருக்கவே செய்யும்.  🙏🙏

Amachiappan: இதைப் போன்று தான் மற்ற தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்; இதர ஆசிரியர்கள்; தங்கள் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும்?

அப்படி பள்ளிகளில் நடக்கிறதா எனப் பார்த்தால் மருந்துக்கு கூட எந்த  ஆசிரியர்களும் அக்கறை எடுப்பது இல்லை? மொழி இன உணர்வுள்ள ஆசிரியர்களை தேடித்தான் பார்க்க வேண்டும்?

Manogaran G: தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்"#கை" இருந்தாலே போதும்.. முடியாதது எதுவும் இல்லை👍👍👍

Jayashree Kannan:
தலைமையாசிரியர் திரு. குமார் அவர்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார். மகிழ்ச்சியாக உள்ளது. நாடு தழுவிய அளவில் இத்தகைய முயற்சி விரிவு அடைந்தால் பல பள்ளிகள் காப்பாற்றப்படும். அருமைத் தகவல் - அற்புத முயற்சி.

ksmuthukrishnan: குமரன் மாரிமுத்து அவர்களின் பதிவு ஒரு மலேசியத் தமிழனின் மொழி சார்ந்த ஆதங்கமாகவே பிரதிபலிக்கின்றது. இந்த நாட்டில் தமிழ் மொழியின் உயிர்ப்பிற்காக எப்படி எப்படி எல்லாமோ போராடி வருகிறோம். 1950-ஆம் ஆண்டுகளில் இருந்து போராட்டம் செய்து வருகிறோம். அந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்றும் ஓயவில்லை.

ஐயா ஜெயகோபாலன் அவர்களின் கருத்துகளுக்குப் பதில் கருத்துகளாகவே குமரன் மாரிமுத்துவின் கருத்துகளும் அமைகின்றன. மற்றபடி எதிர்க் கருத்துகள் அல்ல. மாற்றுக் கருத்துகளாகப் பார்ப்பதே சிறப்பு.

பொதுவாகவே ஒருவரின் கருத்து ஒத்து வரவில்லை என்றால் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கலாம். அதனால் முன்வைக்கப்படும் கருத்துகள் பல் பரிமாணங்களைப் பெறுகின்றன. ஆழ்ந்து பார்த்தால் அந்த வழித் தடயத்தில் எது சரி எது தவறு என்பதும் தெரிய வரும்.

தம்பி குமரன்... தங்களின் கருத்து முன்வைப்புகளைக் காட்டிலும் தங்களின் தமிழ் மொழிப் பயன்பாடுதான் என்னை வெகுவாகக் கவர்கின்றது.

தமிழுக்கு இணையாக வேறு மொழி இல்லை என்பதற்குத் தங்களின் மொழிச் சாரலே நிறைவான மழை முகிலாய் அமைகின்றது. அதுவே தமிழை மேலும் நனையச் செய்யும் பூமழையாகவும் பரிணமிக்கின்றது.

ஏற்கனவே சில பல பதிவுகளில் கவனித்து இருக்கிறேன். தங்களின் மொழி வளாகத்தில் ஆங்காங்கே செருகலாய்ச் சிலேடை ஆம்பல்கள்; மற்றவரைப் புண்படுத்தா மென்மை நயங்கள்; ஆனால் அழுத்தமான சொல்லாடல்கள்.

அடியேன் தங்களின் தமிழாசிரியர் என்பதை நினைத்துப் பார்க்கின்றேன். பெருமையின் உச்சத்தில் என் கண்கள் பனிக்கின்றன. நன்றிங்க தம்பி.