26 டிசம்பர் 2020

கெர்லிங் தமிழ்ப்பள்ளி - குமரன் மாரிமுத்து

16.12.2020

மாணவர் எண்ணிக்கை சரிகிறதே என்று சும்மா இல்லாமல் முயற்சிகள் செய்கிறது கெர்லிங் தமிழ்ப்பள்ளி!


Kumaran Marimuthu: பள்ளி வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் இயக்கம்... இவை மூன்றும் பள்ளி நிர்வாகத்திற்குத் துணையாய் நிற்கின்றன. TAB முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை பயிலும் எல்லா மாணவர்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.

அருகாமையில் மாணவர்கள் இல்லை; தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் சற்று தூரத்தில் இருக்கும் இடங்களில் இருந்து வருகின்றவர்கள்; அந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் பெருமைப் படுத்துவது நியாயம் என்று கருதுகிறோம்.

அவர்களின் பற்று போற்றப்பட வேண்டியதாகவே கருதுகிறோம். ஆகவே, இது போன்ற சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் கற்றலுக்குத் துணையாகவும் அமையும்.

இதில் தலைமை ஆசிரியர் திரு. குமார் சிதம்பரம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ ஆனந்தன் இருவரின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியது.

அதோடு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள், வட்டார அரசு சாரா இயக்கங்கள், ஆலயங்கள் என்று பலரின் ஒருங்கிணைந்த உழைப்பும் இதில் உண்டு.

அதோடு மட்டுமின்றி, ஐந்தாண்டுகளுக்கு முன்பு குருகுலம் என்ற திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றோம்.

வறுமை, குடும்ப சிக்கல்களின் காரணத்தால் படிப்பதற்குச் சவால்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு முழு தங்கும் வசதியுடன் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி இன்று வரை செயல் படுத்தி வருகின்றோம்.

இதுவே நாட்டில் தங்குமிடத்தோடு மாணவர்களைக் கொண்ட முதல் தமிழ்ப்பள்ளி (தற்சமயம் சா ஆலாம் மிட்லண்ட் தமிழ்ப்பள்ளியும் மாணவர் தங்கும் விடுதி கொண்டு உள்ளது).

அரசாங்கம் செய்ய முடியாத ஒரு திட்டத்தை நம் சக்திகளை ஒன்று இணைத்தால் செய்ய முடியும் என்பதை ஒற்றுமையோடு மலேசிய இந்தியர்களுக்கு செயல் வடிவில் மெய்ப்பித்து வருகின்றோம்.

குமரன் மாரிமுத்து
16.12.2020

Muthukrishnan: நன்றிங்க தம்பி. கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் தமிழ் எழுச்சி உணர்வு...  போற்றப்பட வேண்டிய ஒரு தமிழ்ப் பரிமாணம். மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக் காட்டாகவும் அமைகின்றது... வாழ்த்துகிறோம்...

தவிர, நான் ஆசிரியராய்ப் பணியாற்றிய பள்ளி. உணர்வுகளின் உரசல்கள் இருக்கவே செய்யும்.  🙏🙏

Amachiappan: இதைப் போன்று தான் மற்ற தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்; இதர ஆசிரியர்கள்; தங்கள் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டும்?

அப்படி பள்ளிகளில் நடக்கிறதா எனப் பார்த்தால் மருந்துக்கு கூட எந்த  ஆசிரியர்களும் அக்கறை எடுப்பது இல்லை? மொழி இன உணர்வுள்ள ஆசிரியர்களை தேடித்தான் பார்க்க வேண்டும்?

Manogaran G: தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்"#கை" இருந்தாலே போதும்.. முடியாதது எதுவும் இல்லை👍👍👍

Jayashree Kannan:
தலைமையாசிரியர் திரு. குமார் அவர்கள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார். மகிழ்ச்சியாக உள்ளது. நாடு தழுவிய அளவில் இத்தகைய முயற்சி விரிவு அடைந்தால் பல பள்ளிகள் காப்பாற்றப்படும். அருமைத் தகவல் - அற்புத முயற்சி.

ksmuthukrishnan: குமரன் மாரிமுத்து அவர்களின் பதிவு ஒரு மலேசியத் தமிழனின் மொழி சார்ந்த ஆதங்கமாகவே பிரதிபலிக்கின்றது. இந்த நாட்டில் தமிழ் மொழியின் உயிர்ப்பிற்காக எப்படி எப்படி எல்லாமோ போராடி வருகிறோம். 1950-ஆம் ஆண்டுகளில் இருந்து போராட்டம் செய்து வருகிறோம். அந்தப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்றும் ஓயவில்லை.

ஐயா ஜெயகோபாலன் அவர்களின் கருத்துகளுக்குப் பதில் கருத்துகளாகவே குமரன் மாரிமுத்துவின் கருத்துகளும் அமைகின்றன. மற்றபடி எதிர்க் கருத்துகள் அல்ல. மாற்றுக் கருத்துகளாகப் பார்ப்பதே சிறப்பு.

பொதுவாகவே ஒருவரின் கருத்து ஒத்து வரவில்லை என்றால் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கலாம். அதனால் முன்வைக்கப்படும் கருத்துகள் பல் பரிமாணங்களைப் பெறுகின்றன. ஆழ்ந்து பார்த்தால் அந்த வழித் தடயத்தில் எது சரி எது தவறு என்பதும் தெரிய வரும்.

தம்பி குமரன்... தங்களின் கருத்து முன்வைப்புகளைக் காட்டிலும் தங்களின் தமிழ் மொழிப் பயன்பாடுதான் என்னை வெகுவாகக் கவர்கின்றது.

தமிழுக்கு இணையாக வேறு மொழி இல்லை என்பதற்குத் தங்களின் மொழிச் சாரலே நிறைவான மழை முகிலாய் அமைகின்றது. அதுவே தமிழை மேலும் நனையச் செய்யும் பூமழையாகவும் பரிணமிக்கின்றது.

ஏற்கனவே சில பல பதிவுகளில் கவனித்து இருக்கிறேன். தங்களின் மொழி வளாகத்தில் ஆங்காங்கே செருகலாய்ச் சிலேடை ஆம்பல்கள்; மற்றவரைப் புண்படுத்தா மென்மை நயங்கள்; ஆனால் அழுத்தமான சொல்லாடல்கள்.

அடியேன் தங்களின் தமிழாசிரியர் என்பதை நினைத்துப் பார்க்கின்றேன். பெருமையின் உச்சத்தில் என் கண்கள் பனிக்கின்றன. நன்றிங்க தம்பி.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக