16.12.2020
தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்குப் புத்ரா கட்சிக்கு ஆதரவு கொடுத்த மலேசிய இன்சான் பெகா பாலகோபாலுக்கு மலேசிய தமிழர் அமைப்புகளின் கண்டன அறிக்கை.
Raja Sg Buluh: தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென புத்ரா கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த இன்சான் பெகா (Insan Peka) இயக்கத்தை சார்ந்த பாலகோபாலின் செயல் அருவருக்கத் தக்கது
உலக கல்வி நிறுவனமாகிய யுனெசுகோவின் (UNESCO) பரிந்துரையின்படி தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயே கல்வியை கற்க வேண்டும். தாய்மொழி உரிமை அவரவர் பிறப்புரிமை. மலேசிய அரசியலமைப்புச் சட்டத்திலும் தாய்மொழி பள்ளி இயங்கவும் காக்கவும் உரிமை இருக்கிறது.
அதை அவமதிக்கும் வகையில் மூட வேண்டுமென வழக்கு தொடுப்பதும் அதை ஆதரிப்பதும் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகும்
தாய்மொழி பள்ளிகளை மூட வழக்கு தொடுப்பத்திருப்பது ஒரு கீழ்த்தரமான செயல். அதற்கு ஆதரவு குரல் கொடுப்பது அதைவிட கேவலமான செயல். அச்செயலை புரிந்திருக்கும் இன்சான் பெகா இயக்கத்தின் தலைவர் பாலகோபல் தமிழ்ப்பள்ளி வேண்டாம் என பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது..?
இந்நாட்டில் வாழும் இந்தியர்களில் 85% -தில் இருக்கும் தமிழர்களின் தாய்மொழியான தமிழ் மொழியை போதிக்கும் தமிழ்ப் பள்ளிகளை மூட சொல்ல தமிழரல்லாத இவருக்கு என்ன தகுதி இருக்கிறது..? யார் இவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது..?
நாடு விடுதலை அடைவதற்கு முன்பே, ஏன் தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென சொல்கிற புத்ரா எனும் இனவாத கட்சி தொடங்குவதற்கு முன்பே, அதாவது 1816இல் பினாங்கு பிரீ பள்ளியில் தொடங்கிய தமிழ் வகுப்பிலிருந்து சுமார் 204 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் இம்மண்ணில் நிலைத்து வருகிறது
இந்த 204 ஆண்டுகள் தொடர்ச்சிக்கு எத்தனையோ கல்விமான்கள், அறிஞர்கள், சமுதாய தலைவர்கள், இனப்பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரது உழைப்பு, தியாகம், அற்பணிப்பு இதில் இருக்கிறது. இதை எல்லாம் கொஞ்சம் கூட தெரியாது தமிழ் பள்ளியின் வரலாறு அறியாது குருட்டுத்தனமாக அதை மூட வேண்டுமென குறைப்பது வேடிக்கையாக இருக்கிறது
அப்போதெல்லாம் சீர்குலையாத ஒற்றுமையாய் இப்போது சீர்குலைந்தது. உண்மையில் தாய்மொழி பள்ளிகளை அகற்றினால்தான் நாட்டின் ஒற்றுமை சீர்குலையும், உரிமைப் போர் தொடங்கும்.
தாய்மொழி பள்ளிதான் ஆரம்பப் பள்ளி மாணவர்களை சீர்படுத்துகிறது. குறிப்பாக, தாய்மொழி வழியாக கணிதம், அறிவியல் படிப்பவர்களுக்கு ஆய்வுச் சிந்தனை (Critical Thinking) ஏரணம் (Logic) கரணவியல் (Reasoning) புத்தாக்கச் சிந்தனை (Inovative) முதலான திறன்கள் மிகச் சிறப்பாக வளரும்.
பிரான்சு, செருமன், சப்பான், சீனா, கொரியா முதலான நாடுகளில் அதிகமான கண்டுபிடிப்புகளும் ஆக்கங்களும் உருவாகுவதற்கு காரணம் அந்த நாடுகளில் கணிதம், அறிவியலைத் தாய்மொழியில் படிப்பதுதான் என்பதே உண்மை.
இத்தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் பெரும்பாலோர் தலை சிறந்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல துறைகளில் கால் பதித்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எல்லா போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இதைப் பொறுக்காது பொறாமையால் சில இனவாத கும்பல் கிளம்பியிருக்கிறது. அதில் ஒன்றுதான் புத்ரா கட்சியும் அதற்கு வக்காலத்து வாங்கும் அரைவேக்காடு கூட்டமும்
தாய்மொழி பள்ளிகளை சீண்டி தம்மின ஆதரவாளர்கள் மூன் கதாநாயகனாக திகழலாம், பேசும் மனிதராக ஆகலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்தில் சில அரசியல்வாதிகள் திரிந்து வருகிறார்கள்
இப்படிப்பட்டவர்களையும் அதற்கு ஆதரவைத் தரும் பாலகோபால் போன்ற நயவஞ்சகர்களின் முகத் திரையை கிழித்து, நிந்தனை சட்டத்தில் கைது செய்யும் வரை நாம் ஓயக்கூடாது
மலாய்க்காரர்களின் உரிமைகள் பற்றி எந்த சூழலிலும் தமிழர்கள் நாங்கள் கேள்வி எழுப்பியதில்லை. அதற்கு எதிராக எந்த செயல்பாடும் நாங்கள் புரிந்ததில்லை. நிலைமை இப்படியிருக்க, எங்கள் தாய்மொழி பள்ளிகளை மூட தொடர்ச்சியாக மாறி மாறி குரல் எழுப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம்
இறுதியாக ஒன்றை நினைவூட்டுகிறோம். தென்னகத்தில் இந்தித் திணிப்பால் எங்கள் தாய்மொழி அழிந்து விடுமோ என அஞ்சி போராடி, நெருப்புக்கு இறையாக உயிர்நீத்த 840 வீரமறவர்கள் வழிவந்த, தமிழர் தேசிய இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
எங்கள் இனத்தின் அடையாளமாக திகழும் தாய்மொழி பள்ளிகளை காக்க நாங்கள் எதுவரைக்கும் செல்வோம் என்பதை புத்ரா கட்சிக்கும் அதற்கு ஆதரவு தந்த இன்சான் பெகா பாலகோபாலுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்
11:37 pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக