27 டிசம்பர் 2020

தமிழ்ப்பள்ளிக்கு வந்த அவல நிலை - ஜெயகோபாலன்

17.12.2020

Jayagopalan: பல ஆயிரங்களைச் (அது லட்சமாகக்கூட மாறலாம்) செலவழித்து இப்படி பலதரப்பட்ட சலுகைகளை வழங்கி தம் பள்ளிக்குக் குழந்தைகளை ஈர்க்கும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் & நிர்வாகத்திற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் & பள்ளி வாரியத்திற்கும் முதற்கண் நமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் பகிர்ந்து கொள்வோம்.

ஆனாலும் அதிக அளவில் பணம் செலவாகும் எல்லாப் பள்ளிகளும் இச் சலுகைகளை வழங்க இயலாது.

இவ்வளவு சலுகைகள் வழங்கினால்தான் நம் தமிழ்ப்பள்ளிக்கு தனது குழந்தைகளை அனுப்புவேன் என்று பெற்றோர்கள் அடம் பிடிபார்களேயானால்; அந்த அவல நிலையை என்னவென்று சொல்வது.

அவல நிலையின் உச்சம் இலவச சீன மொழி போதனை (அது கட்டாயம் இல்லை என்றாலும்கூட) . ஜாவியை எதிர்க்கும் நாம் சீனத்தை ஏற்கலாமோ?!

சீனப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு தமிழ் இலவசமாக போதிக்கப்படும் என சீனன் தன்மானத்தைவிட்டு கூவி அழைப்பானா என்ன🤷‍♂?!

தமிழ்ப் பள்ளியின்பால் உள்ள பற்று - அது இரத்தத்திலும் சதை நரம்புகளிலும் ஊறி இருக்க வேண்டும். மொத்தத்தில் உயிரோடு கலந்து இருக்க வேண்டும். இலவசத்தால் வருவது அல்ல தமிழ்ப்பற்று ஐயா. தமிழ்ப்பள்ளியே எமது தேர்வு 🙋‍♂

BK Kumar: எட்டு பேர் தமிழர்களாகவும் தமிழ்ப் பள்ளியில் அல்லது தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பியவர்களாக இருப்பார்களா. அப்படி இல்லை என்றால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை

Muthukrishnan: நியாயமான பார்வை. நியாயமான கருத்துகள். பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதற்குத் தயக்கம் காட்டும் பெற்றோர்களை ஈர்ப்பதற்குத் தான் அப்படி ஒரு சலுகை முறையைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

தலையாய நோக்கம் தமிழ்ப்பள்ளிகளைப் பாதுக்காப்பதே..

எனினும் எல்லாப் பள்ளிகளிலும் அந்த முறையை அமல்படுத்த இயலாது. உண்மைதான் ஐயா. தங்களின் கருத்தும் ஏற்புடையதே... நன்றிங்க...

-அன்பர் ஜெயகோபாலன் நல்ல ஒரு தமிழார்வலர். மலேசியத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிறையவே தொண்டுகள் செய்து உள்ளார். இணையம் வழியாகத் தமிழ்க்கல்வி கற்பித்து வருவதில் முன்னோடியாகத் திகழ்கின்றார்.

இவர் பாகான் செராய் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்.

பணி ஓய்வு பெற்றுவிட்டேன் (15.08.2020 - 60 வயது நிறைவு) ஐயா 🙏


Kumaran Marimuthu: உங்கள் பதிவை நான் இரண்டாகப் பார்க்கிறேன்.

கருத்து 1


எல்லா தமிழ்ப்பள்ளிகளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் கொடுப்பதைப் போன்று சலுகைகளை ஏற்படுத்தித் தர இயலாது என்ற கூற்றை நானும் ஏற்கிறேன்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு முயற்சி செய்யத் தெரிந்தவர்களுக்கும் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குமே அது சாத்தியமாகும். உணர்வுகளின் அடிப்படையில் வீம்புக்கு வீர வசனம் பேசுகின்றவர்களாலும் வாயில் வடை சுடுபவர்களாலும் அவ்வாறு செய்ய இயலாதுதான் ஐயா.

மக்களாட்சி முறையில் நேர்மையாக அரசாங்கம் இதுவரை ஆட்சி செய்து இருந்தால் நாமும் மலாய் பள்ளிகளைப் போன்று மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வெறுமனே இருந்து இருக்கலாம்.

இதுவரை நாட்டை ஆண்டவர்களும் சிறுபான்மை மக்களை, குறிப்பாக கல்வித் தேவைகளை நாசுக்காக புறக்கணித்தார்கள். கேட்பார் யாரும் இல்லை.

விடுதலைக்குப் பிறகு இந்த இனத்தின் காவலன் என்று கொக்கரித்தவர்களும் எஜமானர்களின் கைப்பாவையாக மாறி சமுதாயத் தேவைகளை நிறைவு செய்யாமல் உல்லாசத்தில் சிலேகித்துப் போனார்கள்.

தேவைகள் பூர்த்தியாகிவிட்டால் அரசியல்வாதிகளை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி, கால்களுக்கு கீழே செக்கு மாடுகளாய், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

இவர்கள் சீன அரசியல்வாதிகளைப் போல் செயல்பட்டு இருந்தால் பள்ளிகளின் தரம் உயர்ந்திருக்கும்; என்ன செய்ய? பள்ளி மேம்பாட்டிலும் உருமாற்றத்திலும் ஏகப்பட்ட ஊழல். மல்லாந்து உமிழ்ந்தால் வேறென்ன வந்து சேரும் ஐயா? (இது எல்லா அரசியல் சகுனிகளுக்கும் பொருந்தும்).

கருத்து 2

அவல நிலையின் உச்சம் இலவச சீன மொழி போதனை என்று கூறி இருக்கின்றீர்கள்.

இந்தக் கூற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ஐயா. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்? நடப்பு நிலவரங்களை சரியாக உள்வாங்கிக் கொல்லாது ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைக்கின்றீர்கள்?

மேலும் ஒரு மொழியைக் கற்றல் ஒரு மாணவனுக்கு கூடுதல் பலம் தானே? அதுவும் மலேசியாவைப் பொருத்த மட்டில் வேலைச் சந்தைக்கு சீன மொழியும் ஏற்றதுதானே? மாணவர்களை சிறு வயதிலிருந்தே தயார் செய்வது எவ்வாறு அவலமாகும்?

// ஜாவியை எதிர்க்கும் நாம் சீனத்தை ஏற்கலாமோ?//

மன்னிக்கவும். இதை உங்கள் சொந்தனையின் அவலமாகவே நான் கருதுகிறேன்.

ஜாவியை கற்க யார் எதிர்த்தார்கள்? கூறுங்கள். ஜாவி என்ற ஒரு மொழியை கட்டாயப் பாடமான மலாய் மொழியில் ஓர் அங்கமாக வலுக் கட்டாயமாக திணிப்பதைத் தானே இந்த சமுதாயம் எதிர்க்கிறது (ம.இ.கா எந்த அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பும் இதுவரை காட்டவில்லை). தனி ஒரு பாடமாக ஜாவி மொழியை பயில்வதற்கு யாரும் எதிர்க்கவில்லையே?

சீன மொழியை படிப்பது அவலம் என்றால் ஆங்கிலம் எதற்கு?

மலேசியம் அறிவார்ந்த புலனம். என்னற்ற தகவல்களை தேடித் தேடி, அள்ளி அள்ளி நமக்கு விருந்தாகக் கொடுத்து வருகிறார் ஐயா மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்கள். அப்படி இருக்க இங்கே தவறான தகவல்களை அரங்கேற்றலாமா?

முன்னேற்றகரமான சிந்தனைகளை விதைத்து, செயல்களைச் செய்து சமுதாய சிந்தனைப் புரட்சிக்கு வித்திடுவோம்.

(குமரன் மாரிமுத்து)
கெர்லிங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்,
பள்ளி வாரிய துணைத் தலைவர்.


பின் குறிப்பு: ஜாவி வழக்கு மற்று தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் சட்டத்திற்கு புறம்பானது என்ற இரு வழக்கிலும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் சார்பில் என் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. (விளம்பரம் தேவை இல்லை என்பதால் இதுவரை நான் இந்தப் புலனத்தில்கூட காட்டிக் கொண்டது இல்லை; இன்று வேறு வழி இல்லை)


Raja Sg Buluh: ஒரே வரியில் சொல்கிறேன்... அருமை.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக