17.12.2020
பதிவு செய்தவர் - பி.கே.குமார்
நீலப் பெருங்கடல் திட்டம் (Blue Ocean Strategy) ஒரு சிந்தனை ஊக்கி, உத்தி, நல்ல வழிகாட்டி. திட்டமிடும் எல்லோர்க்கும் சிறந்த கருவி. இந்த முறையைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் சான் கிம் (Chan Kim); உதவியவர் அவரின் நண்பர் பேராசிரியை ரெனி (Renee Maubougrne).
இந்த நீலப் பெருங்கடல் சிந்தனையின் சில அடிப்படைகளைப் பார்ப்போம்.
ஒரு அனுமானக் காட்சியைப் முதலில் பார்ப்போம்.
நீஙகள், பினாங்கில் இருந்து 400 கி.மி தொலைவுத் தாண்டி புத்திரா ஜெயாவில் உள்ள ஓர் அரசு அலுவலகத்திற்கு வருகின்றீர்கள். முக்கியமான சிக்கல் ஒன்றுக்குத் தீர்வுக் காண அந்த அலுவலகம் வருகின்றீர்கள்.
கார் நிறுத்துமிடம் கிடைக்காததால், 2கி.மி வியர்க்க விறுவிறுக்க நடந்து சென்று அலுவலகத்தை அடைகின்றீர்கள்.
வந்த இடத்தில் அதிகாரி விடுமுறையில் இருப்பதாகவும், வேறு யாருக்கும் அந்த சிக்கலைப் பற்றி தெரியாது என்று சிடுசிடுக்க கூறி உங்களை அடுத்த வாரம் வந்து பார்க்கச் சொல்கின்றார்கள்.
உங்கள் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கும்? உங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?
உங்களுக்கு சினம் வருகிறது. நேரம் வீணாகி விட்டது. பணம் வீண் செலவு. அருகில் இருக்க வேண்டிய அலுவலகம் முட்டிவலி வரவழைக்கும் தொலைவில் இருக்கிறது. தனியாக நடந்து போவதால் திருட்டு பயம் வேறு. 'பேருதான் பெரிய பேரு. புத்திராஜெயா. ஒரு மண்ணும் வேலைக்கு ஆகவில்லை'. இப்படி நீங்கள் புலம்புகின்றீர்கள்.
1. உற்பத்தித்திறன் (Productivity)
2. வசதி (Convenience)
3. எளிமை (Simplicity)
4. இடரின்மை (Risk free)
5. மதிப்பும் & கலகலப்பும் (Fun and Image)
6. நட்புச் சூழல் (Environmental friendliness)
ஓர் இடத்திற்கு சென்றோமா ஒரே நேரத்தில், விரைவாக பல வேலை வேலைகளை முடித்தோமா சாதித்தோமா என்றிருந்தால் அது உற்பத்தித் திறன் (productivity) .
காரை விட்டு இறங்கியதும் அலுவலகம் மிக பக்கம் இருந்தால் வசதி (convenience). அலுவலகத்திற்கு உள்ளே செல்ல படிக்கட்டு ஏற வேண்டியதில்லை.
ஒரு பொத்தானை அமுக்கினால் உடனே மாடிக்கு உங்கள் தூக்கிச் செல்ல ஒரு மின்தூக்கி (lift). அது எளிமை (simplicity).
வரும் வழியில் திருட்டு பயம், காணாமல் போய் விடுவோம் என்ற பயம் இல்லை (Risk free).
நீங்கள் வந்த இடத்தில் மகிழுந்து நிறுத்தம் கிடைக்காமல் அல்லாடியதற்கு சூழல் நெருக்கடி காரணம். இது சூழல் சிக்கல். அதிகமாக கார்கள் இருந்ததால் இடம் கிடைக்கவில்லை. சாலை நெரிசல் கூட நட்புறவற்ற சூழல்தான்.
நாம் வாழும் புறச் சூழல் சுத்தமாக, விசாலமாக, தூய்மையாக, நெரிசல் இன்றி இருந்தால் அது நமக்கு நட்புடறவுமிக்க சூழல் (environmental friendliness). சில நேரங்களில் அகச் சூழலும் நமக்கு சாதகமாக இருப்பதில்லை.
சரி, இப்போது தமிழ்ப்பள்ளியை தேர்ந்தெடுக்கும் ஒரு படித்த பெற்றோர் என்ன வகையான எதிர்ப்பார்ப்புகளை கொண்டு இருப்பார்?
உற்பத்தித் திறன்
1. தன் பிள்ளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்ததும் விரைவாக மொழிகளில் நன்கு எழுத, பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று புகழ்பெற வேண்டும். குறிப்பாக தமிழ், ஆங்கிலம், மலாய். கணக்குப் பாடத்தில் கெட்டிக்காரனாக வேண்டும். அறிவியலில் 100 புள்ளிகள் எடுக்க வேண்டும்.
வசதி
2. பள்ளிகள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வசதி வேண்டும். போக்குவரத்தில் செலவாகும் நேரத்தையும் பணத்தையும் மிச்சம் பிடிக்க பெற்றோர் விரும்புவர். குறைந்தது இந்த வசதியைப் பெற்றோருக்கு வழங்க வேண்டும். 70% தமிழ்ப்பள்ளிகள் தோட்டப்புறத்தில் அமைந்து உள்ளன.
90% இந்தியர்கள் நகர்ப் புறத்தில் வாழ்கிறார்கள். நகர்ப்புறத்தில் இருந்து தோட்டப் புறத்து பள்ளிக்குச் செல்ல அதீதமான தமிழ்பற்று வேண்டும். மேலும், நல்ல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி வசதிகள் கொண்ட பள்ளிகளைப் பெற்றோர் விரும்புகின்றனர்.
மாட்டுக் கொட்டகை மாதிரி இருக்கிறது என்று தமிழ்ப் பள்ளிகளை கிண்டல் அடிக்கும் சிலரும் இருக்கின்றார்கள். பள்ளியின் வெளித் தோற்றம், உட்கட்டமைப்பு வசதி இவையும் கவனிக்கப்படும் அமசங்களே.
3. ஆசிரியரையும் தலைமையாசிரியரையும் உடனே கண்டு பேசக் கூடிய எளிமையை பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். பந்தா காட்டாத, பகைமைக் காட்டாத ஆசிரியர்கள், மாணவர்களுடன் நன்கு பழகி அவத்களின் சிறப்புத் தேவைகளை அறிந்திருக்கும் ஆசிரியரை பெற்றொர் எதிர்ப்பார்க்கின்றனர்.
மதிப்பும் கலகலப்பும்
4. பள்ளியின் பெயரைச் சொன்னாலே மதிப்பும் மரியாதையும் உண்டாகும் அளவுக்கு உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் விரும்புகின்றனர். மதிப்பு மிகுந்த தலைமையாசிரியர், ஆசிரியரும் இதனுள் அடங்குவர்.
அதனால் பள்ளிகள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் புகழ் பெற்றிடும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பள்ளிக்கு வரும் பெற்றோரைக் கலகலப்பாக வரவேற்கும் பண்பும் பெருக வேண்டும்.
இடரின்மை ( ஆபத்தில்லாமை)
5. பெற்றோர்கள் பிள்ளைகளின் உயிர், உடல், உடமை இம்மூன்றின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எனவே, பள்ளிக்கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்க்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது.
பள்ளிக்கு வரும் வேளை, பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போகும் வேளை, பள்ளியில் இருக்கும் வேளையில் மாணவரின் உடலுக்கும் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பள்ளியைப் பெற்றோர் விரும்புவர்.
பாதுகாப்பான போக்குவரத்து வசதி, பள்ளியில் வழங்கப்படும் கவனிப்பு, அக்கறை, பிள்ளைகள் தோல்வி அடையாமல் காக்கும் முயற்சிகளைப் பெற்றோர் போற்றுவர். பிள்ளைகளுக்கு உணவு, அன்பு, கவனிப்பு தரும் பள்ளிகளைத் தேடி ஏழைப் பாட்டாளிகள் வருவதும் உண்டு.
இவற்றைப் பற்றி பெற்றோருக்கு தெரியப் படுத்த வேண்டும். பள்ளி வழங்கும் அனைத்து வாய்புகளையும் பெற்றோர் அறிந்திருக்க வேண்டும்.
சூழல் நட்புறவு
6. பள்ளி வழங்கும் விசாலமான கட்டிடங்கள், படிக்கும் அறைகள், ஒரு மாணவருக்கு ஒரு மேசை, ஒரு நாற்காலி, வகுப்பின் உள்ளே பல்வேறு வசதிகள், நெருக்கடி , நெரிசல் இல்லாத சூழல், பெற்றோர் வந்தால் வசதியான கார் நிறுத்துமிடம், தூய்மை, சுத்தமான சுற்றுச் சூழல், துர்நாற்றம் இல்லாத கழிப்பறை, செப்டிக் தாங்கிகள், இப்படிப் பள்ளியின் சூழலை நோக்கும் பெற்றோரும் உண்டு.
# ஒரு பள்ளியைத் தேர்தெடுக்கும் பெற்றோர் முழுக்க முழுக்கத் தமிழ்ப்பற்றின் காரணமாக மட்டும் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. 51% விழுக்காடு இந்திய மாணவர்கள் மலாய்ப் பள்ளியிலும் சீனப் பள்ளியிலும் படிப்பதே இதற்கு போதுமான சான்று.
அவர்கள் வெவ்வேறு ஈர்ப்புகளையும் கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அறிந்து அதை வழங்கினால் தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு முழக்கம் வெற்றி பெரும். இல்லையேல் எந்த பயனும் இல்லாது வெற்று முழக்கமாகி விடும்.
அடுத்து, தமிழ்ப் பள்ளியை விரும்பாத, ஆனால் அவர்களைத் தமிழ்ப் பள்ளிப் பக்கம் தொடர்ந்து கவர்ந்து இழுக்க வேண்டிய அளவுக்கு முக்கியமான பெற்றோரைப் பார்ப்போம்.
#அ. ஆங்கிலத்தில் அறிவியல் கணிதம் (DLP & PPSMI) என்றால் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் தற்காலிக வாடிக்கையாளர்கள் இந்த வகையினர்.
2003-இல் 90 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். (PPSMI அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு)
2009-இல் 115,000 மாணவர்கள். ஏறக்குறைய 25,000 பேர் அதிகரித்தனர். அதன் பிறகு மாணவர் எண்ணிக்கை இறங்கு முகம் கண்டது.
2010- இல், PPSMI இல்லை என்றதும் மறுபடியும் மலாய்ப் பள்ளிக்கு மூட்டைக் கட்டிய பெற்றோர்கள் இவ்வகையினர்.
இவர்களை எவ்வாறு தமிழ்ப்பள்ளிப் பக்கம் கவர்வது?
இவர்கள் ஆங்கில மோகிகள். அதாவது ஆங்கிலத்தில் படித்தால் அறிவு என்றும் அதுவே எதிர்காலம் என்று நம்புகின்ற பெற்றோர்.
ஆங்கில மொழியின் & மலாய் மொழியின் தரத்தை, தேசியப் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வழங்கினால் தமிழ்ப்பள்ளிப் பக்கம் இவர்கள் ஓடிவருவர் என்று தாராளமாக நம்பலாம்.
அதனால், தமிழ்ப் பள்ளிகளில் பாலர்ப் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். தடைகள் வரும். அதை தகர்க்கும் வழியும் உண்டு.
ஆங்கில, மலாய்மொழி அடைவை உயர்த்த தமிழ்ப் பள்ளிகள் கொண்டுள்ள சிறப்பு திட்டங்கள் விளம்பரப் படுத்தப்பட வேண்டும். வெற்றியைக் காட்ட வேண்டும். இதுவே மதிப்பு கூட்டப்பட்ட திட்டங்கள் பொதுமக்கள் அறிய வேண்டும்.
எ.கா. பாட நேரத்திற்கு பிந்திய மாலை வகுப்பு - அறிவியல் ஆங்கிலம், தொடர்பு கொள்ள மலாய் மொழி, கூடுதல் கணிதம், என்று முறைப் படுத்தப்பட்ட திட்டங்கள் நிறைவேற வேண்டும். கண்டிப்பாகப் பெற்றோர் கவரப் படுவர்.
பெற்றோர் ஆசிரிய சங்கம், வாரியங்கள், முன்னால் மாணவர் இயக்கம், தமிழாசிரியர் இயக்கம், தமிழ்ச்சங்கம் இவை முயன்று செய்ய வேண்டியப் பணிகள் இவை.
#ஆ. தமிழ்ப்பள்ளி வெறுப்பாளர்கள்
இவர்களில் தமிழரும் உண்டு; தமிழர் அல்லாதாரும் உண்டு.
தமிழராக இருந்தால், இவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்கள் என்றே கூறலாம். மேட்டுக்குடி என்று தங்களைக் கருதிக் கொள்ளும் கூட்டம். தமிழ்ப் பள்ளிகள் ஏழைகளின் கல்விக் கூடம் என்ற சிந்தனை உடையவர்கள். தாங்கள் பணத்தால், வசதியால் உயர் சாதியினர் என்றும் நினைப்பது உண்டு.
தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சாதாரண தமிழ்ப்பள்ளிப் பக்கம் தலைவைக்க மாட்டார்கள்.
இவர்கள் மதிப்பு (image) விரும்பிகள். தமிழ்ப் பள்ளிகள் உலகப் புகழ்ப் பெற்றால் மட்டுமே அதன் தரத்தை நம்புவார்கள்.
நாம் வழங்கும் தொடர் விளம்பரம், சான்றுகளுடன் கூடிய வளர்ச்சி, எதிர்காலத்தில் சிலரைத் தமிழ்ப்பள்ளி பக்கம் கொண்டு வரக்கூடும்.
இவர்களுக்காகவே சில சிறப்பு தமிழ்ப் பள்ளிகள் (elite) உருவாக வேண்டும். இங்கு அதி மேதாவித் தனமான (gifted children) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இருந்தால் சிலர் இங்கு பிள்ளைகளை அனுப்பக்கூடும்.
இ. மூன்றாவது பிரிவு மிகப்பெரிய கூட்டம். இவர்கள் தமிழர் அல்லாத மற்ற இனத்தினராக இருக்கும் கூட்டம். சீனர், மலாய்க்காரர்கள், சீக்கியர்கள், வட இந்திய வம்சாவளியினர், தெலுங்ககர், மலையாளிகள் போன்றவர்கள்
இவர்கள் தமிழ்ப்பள்ளியைப் பற்றி ஒன்றும் அறியாதவராக இருக்கக் கூடும்.
எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளியின் வாடிக்கையாளராக இவர்கள் மாறும் சூழல் உருவாகும் என்பதற்கு எந்த முகாந்திரமும் இப்போது இல்லை. ஆயினும் இவர்களில் ஒரு கணிசமானவர்கள் தமிழ்ப் பள்ளியில் படித்தால், தமிழ்ப் பள்ளிகளின் நிலைத் தன்மைக்கு உதவியாக இருக்கும்.
இவர்களின் தேவை என்ன? எதிர்ப்பார்ப்பு என்ன?
இவர்கள் விரும்புவது தரம். போட்டியிட்டு வாழ்வதற்கு ஆதாரமான கல்வி அனைத்தும் தரமாக கிடைக்க வேண்டும் என்பது இவர்கள் எதிர்ப்பார்ப்பு. அதனால் தான் 100,000 மலாய் மாணவர்கள் சீனப் பள்ளியில் படிக்கின்றனர்.
தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு முழக்கம். தமிழ் அறிந்தவர்களை; தமிழ்ப்பள்ளிக்கு இப்போது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிற பெற்றோரை; மட்டுமே சுற்றி வந்து கொண்டிராமல், அனுப்பாத அந்த மூன்று வகை பெற்றோரின் எதிர்ப்பார்புகளுக்குப் பதில் சொன்னால், மாணவர் எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
51% தேசியப் பள்ளியில் பயிலும் இந்திய மாணவரைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் இழுக்கவில்லை என்றால், மாணவர் எண்ணிக்கை உயராது என்பதே வருத்தத்திற்கு உரிய செய்தி.
- குமரன் வேலு