20 ஜனவரி 2021

தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர முயற்சியும் பயிற்சியும் (23)

19.01.2021

பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ


ஆசிரியர் கையை அறுத்துக் கொண்டார்; விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்; மாணவரின் மாண்பை கெடுக்கும் வண்ணம் ஆபாசமாக நடந்து கொண்டார்; இப்படி பலவாறாகச் செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கின்றன.

இவை ஆசிரியரின் தரம் பற்றி நமக்குள் சில கேள்விகளையும் எழுப்புகின்றன.


முனைவர் குமரன் வேலு

பொதுவாகவே ஆசிரியர்கள் நிரம்ப நல்லவர்கள். மனசாட்சி உள்ளவர்கள். ஆனால் எல்லோரும் அப்படி இருந்து விடுவது இல்லை. ஒரு சிலர் நெல்லுக்குள் கிடக்கும் கல்லைப் போல் இருப்பதும் உண்டு.

ஒரு பள்ளியின் வெற்றிக்கு ஐந்து விடயங்கள் தரமாக இருக்க வேண்டும்.

1. தலைமைத்துவம்
2. ஆசிரியர்
3. மாணவர் தன்னாளுமை
4. பெற்றொர்களும் சமூகமும்
5. உட்கட்டமைப்பு வசதிகள் (தொழில்நுட்ப கருவிகளும் வளமும் உட்பட)     


#ஆசிரியர் தரம்

கல்வியமைச்சு ஆசிரியரைத் தரம் உயர்த்த பல்வேறு வழிகளைக் கையாளுகிறது.

ஆசிரியரின் கல்வித் தகுதி, ஆசிரியரின் மனப்போக்கு (attitude), ஆசிரியப் பணியில் உளமார்ந்த விருப்பம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்ப் பணிக்கு பயிற்சி ஆசிரியரைத் தேர்வு செய்கிறது.

சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும் எனும் கோட்பாடுக்கு ஏற்ப SPM தேர்வில் குறைந்தது 5 பாடங்களில் ’ஏ’ கிரேட் பெற்றவர்கள் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராக விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி ஆன பின்பே அவர்கள் ஆசிரியராக முடியும்.

முன்பு எல்லாம் SPM தேர்வில் இரண்டாம் நிலை கிரேட் அல்லது மூன்றாம் நிலை கிரேட் உள்ளவர்களும் ஒரு சான்றிதழ் / பட்டயப் படிப்பை மூன்றாண்டுகள் முடித்து ஆசிரியர் ஆகி விடலாம். இப்போது அது சாத்தியமில்லை.

ஆயினும் சான்றிதழ் / பட்டயப் படிப்பு படித்தவர்கள், நேரம் காலம் பார்க்காமல்  மிகுந்த கடப்பாடும் ஆர்வமும் கொண்டு பணி புரிவதாகவும்; பட்டதாரி படிப்பை முடித்து வருகிறவர்கள் நேரத்தோடு வீடு போய்ச் சேர்ந்து விடுவதில் குறியாய் இருப்பதாகவும் நமக்கு முறையீடுகளும் வருகின்றன.

அது ஒருபுறம் இருக்க, ஆசிரியரும் மனிதர்கள் என்பதால் அவர்களை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் எனும் அறிவியலையும் கலையையும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

நிருவாகக் கோட்பாடு 1 (Theory X)


எல்லா மனிதர்களும் வாய்ப்பு கிடைக்கும் போது பணியை ஒழுங்காகச் செய்யாமல் அல்லது முழுமையாக முடிக்காமல், அக்கறை இல்லாமல் ஏய்ப்பு செய்வார்கள் என்கிறது இந்தக் கோட்பாடு.

அதனால் ஆசிரியரைத் தொடர்ந்து கண்காணித்து; தவறு செய்யும்போது தண்டித்து (penalties); கூடுதல் திறமையைக் காட்டும்போது; பாராட்டிப் பரிசளித்து (rewards) ஊக்குவிக்க வேண்டும் என்கிறது அந்தக் கோட்பாடு. தொடர் கண்காணிப்பு என்பதுதான் இங்கே மையக்கரு.

அதனால்தான் ஆசிரியருக்குப் பணியில் சிறந்தோர் வெகுமதியும் (APC) வழங்கப் படுகிறது.

வேலையை ஒழுங்காகச் செய்யாதவர் மீது 3ஏ விதியின் (Peraturan 3A) கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுவதும் உண்டு.

சில ஆசிரியர்களுக்கு 3A விதியென்று ஒன்று இருப்பதே தெரியாது. இந்த விதி அரசாங்க ஊழியர் அனைவருக்கும் பொருந்தும்.

Peraturan 3A
Kewajipan mematuhi Peraturan Peraturan yang ditetapkan dan mana mana pegawai yang melanggarnya boleh menyebabkan diambil tindakan tatatertib


வேலைக்கு வராமல் சாக்குபோக்குச் சொல்வது; முறையாக விடுமுறை எடுக்காமல் வெளியூர் அல்லது உள்ளுரில் இருப்பது; மருத்துவ சான்றிதழில் தில்லுமுல்லு செய்வது; வரவுக்கு மீறிய கடன் பெற்று இருப்பது; அறிவிக்காமல் / அனுமதி இல்லாமல் பகுதி நேரத் தொழிலில் ஈடுபடுவது; வேலையில் சிரத்தை இல்லாமல் இருப்பது; இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது; நொடித்துப் போவது (bankrupt); அரசியலில் ஈடுபட்டு செய்தொழிலில் கவனம் குறைவது; என ஆசிரியருக்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

பள்ளித் தொடங்கும் முன் நடக்கும் கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் இந்த விதி 3A குறித்து ஆசிரியர்களுக்கு நினைவுப் படுத்துவது நல்லது.

இந்த விதியின் கீழ் பாதிக்கப் பட்டோர் இருக்கின்றார்கள்.

பதவி இறக்கம் (கிரேட் இறக்கம்); சம்பளக் குறைப்பு; பதவி உயர்வுக்குத் தடை; உபகாரச் சம்பளம் கிடைப்பதற்குத் தடை; பணி நீக்கம் (exit policy); பணி ஓய்வு சம்பளம் இழப்பு; எனப் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலும் தலைமையாசிரியர்கள் கருணை மிகுந்தவர்கள். கண்டிப்பு மிகுந்த தலைமை ஆசிரியர்கள் சரியானக் காரணமின்றி வேலைக்கு வராத சூழலில் ஆசிரியரின் சம்பளத்தை வெட்ட உத்தரவு இடுவார்கள். விதிப்படி அவர்கள் செய்வது சரிதான்.

எனவே, ஆசிரியர்கள் மிகுந்த கவனத்தோடு தங்களின் எதிர்காலத்தை எண்ணிச் செயல்பட வேண்டும்.

மேற்கூறிய விதிகளும் தண்டனைகளும் ஆசிரியரின் தரத்தை உயர்த்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள முயற்சிகள்.

நிருவாகக் கோட்பாடு 2 (Theory Y)

மனிதர்கள் பொதுவாகக் கடமை உணர்வு உள்ளவர்கள். உள்ளார்ந்து நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைப்பார்கள்.

அவர்களுக்குத் தேவை காலத்திற்கு ஏற்ற திறன் பயிற்சியும் ஊக்கமூட்டலும் என்கிறது இந்தக் கோட்பாடு. தொடர்ப் பயிற்சியும் அதை நடைமுறைப் படுத்த சுதந்திரமும் ஊக்கமும் வழங்கப் பட்டால் பெரும்பாலானவர்கள் சிறந்த பணித் திறனைக் காட்டுவார்கள் என்கிறது இந்தக் கோட்பாடு.

இதன் அடிப்படையில்தான் ஆசிரியருக்குப் பல்வேறு பயிற்சிகள் பள்ளி அளவிலும் (PLC), மாவட்ட, மாநில, தேசிய அளவிலும் நடத்தப் பெறுகின்றன.

இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி தொழில் திறனை வளர்த்துக் கொண்டு நிபுணர்களாக மாறிவிடும் ஆசிரியரும் உண்டு. அதனால் வரும் பதவி உயர்வும் அவர்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

யாரையும் காக்கா பிடிக்காமல் செயல்திறன்; சிறந்த தொடர்பாடல்; மரியாதை; கடப்பாடு கொண்டவர்கள் மேல் பதவிக்குச் செல்கின்றனர். ஆனால் நம்முடைய மனித இயல்பின்படி, சிலருக்கு இந்த வாய்ப்புகள் கிட்டுவது இல்லை. அதைப்பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதும் இல்லை.

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்றும் கருமமே கண்ணாயினார் என்றும் எத்தனையோ ஆசிரியத் திலகங்கள் எந்த அங்கீரமும் எதிர்ப்பார்க்காமல் தங்களின் தொழிலைச் செய்வதும் உண்டு.

அவர்களுக்குப் பயனீட்டாளரான மாணவர்களே அங்கீகாரம். அவர்களின் தூய்மை, நேர்மை, தொழில் பக்தி; அவர்களின் இறுதி நாளில் சேர்கின்ற மாணவக் கூட்டம் காட்டிக் கொடுத்துவிடும்.

-குமரன் வேலு
19.01.2021




 

பெண்கள் அழகு தேவதைகள்

20.01.2021

பூவுக்குள் கருவாகி
நிலவினில் முகம் வாங்கி
சிற்பிக்குள் முத்தைப் பதித்து
நிலவுக்கு போட்டியாக
இம்மண்ணில் பிறந்தவளோ
இந்த அழகு தேவதைகள்

உலகின் எல்லாப் பெண்களுமே அழகு தேவதைகள் தான். அந்த அழகு தெய்வங்கள் உலவும் இந்த உலகில்தான் ஆண்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதை ஆண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நிலவிங்கு நிலவென்று முகம் மூடவே உன் இமைகண்டு விழிமூட மருக்கின்ற்தே! கடல் அலையும் பின் வாங்குகிறது... உன் காலடி பட்ட தடத்தை அழிக்க மனம் இல்லாமல்...

கதவில்லா ஜன்னலும் கவிதை சொல்லுமே... உன் நிழலின் அழகை வீதியில் கண்டதும் கண்டு கொண்டேன் உன் அழகை... இவை எல்லாம் இணையத்தில் சுட்ட கவிதைத் துணுக்குகள்...



 

ஜனவரி 20 அமெரிக்க அதிபர்கள் பதவி ஏற்கும் நாள்

20.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு அதிபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். ஒருவர் இரண்டு முறை அதிபராக இருக்கலாம். அப்படி அதிபராகும் நபர்கள் ஜனவரி 20-ஆம் தேதி அதிபராகப் பதவி ஏற்கிறார்கள்.

இந்த நடைமுறை 1937-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அவ்வாறு ஜனவரி 20-இல் முதன் முதலாக ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்றவர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

அவர் முதல் டொனால்ட் டிரம்ப் உட்பட அனைத்து அமெரிக்க அதிபர்களும் ஜனவரி 20-ஆம் தேதிதான் பதவி ஏற்று உள்ளார்கள். அமெரிக்க அதிபராகப் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜோ பைடனும் இன்று  பதவி ஏற்க உள்ளார்.


19 ஜனவரி 2021

இயற்கையை ரசிப்போம்... இயற்கையை நேசிப்போம்

18.01.2021

இயற்கையை நேசிப்பது மட்டும் அல்ல. அதைப் பாதுகாப்பதும் அவசியம். மறந்துவிட வேண்டாம். அது நம் கடமை மட்டும் அல்ல. அது மனிதநேயம். அதில் மனிதமும் இணைகின்றது.

காடுகள், மேடுகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், கடல்கள், மலைகள், மண் வளங்கள், மேகத் துகள்கள், நுண்ணியிரிகள்; ஏன் ஒவ்வொரு மழைத் துளியும்கூட இயற்கையின் நன்கொடைகள்தான்.

இவற்றில் ஒன்றை இழந்தும் கூட மனிதர்களால் வாழவே முடியாது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு எவரோடு, எதனோடு வாழப் போகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதைப் போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்து வையுங்கள். இயற்கை வளங்களைப் பற்றி விழிப்பு உணர்வை ஏற்படுத்துங்கள். இயற்கையைப் பாதுகாக்க இயன்றதைச் செய்யுங்கள்.

உயிர்கள் படைக்கப்பட்ட போதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டு உள்ளன. இயற்கை வளங்களுடன் அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாகவே நடைபெற்று வந்தது.

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்குகள் உருவாகின. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது.

அதன் விளைவு: மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. அதனால் உயிரினங்கள் எல்லாமே பாதிப்பு அடைந்து வருகின்றன.

நீர், நிலம், ஆகாயம், காற்று என நான்கு பூதங்களும் மாசு அடைந்து விட்டன. இந்தப் பூமி வாழ முடியாத இடமாக மாறி விடுமோ என்கிற ஒரு நிலையும் உருவாகி வருகிறது.

வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்து போன நிலையில்... எதிர்காலத் தலைமுறைகளுக்கு எதைச் சீதனமாகக் கொடுத்துச் செல்லப் போகிறோம். தெரியவில்லை.





பார்த்தேன் படித்தேன் பாரமானேன் - ஆதி சேகர், கோலக்கிள்ளான்

16.01.2021

மலேசியம் புலனம்
வழி 130 பேர்களை இணைத்து
பல பகிர்வுகளை
கடந்து நல் நெருக்கத்தை அன்பர்களிடம் ஏற்படுத்தி.....
தைரியமாக கருத்துக்களையும்...

சுதந்திரமாகத் தமிழில் தட்டச்சு செய்து
தமிழ் தட்டச்சு வேக
திறமைக்கும்...
தமிழ் மொழியின்
ஆளுமைக்கும்...

சத்தமில்லாமல்
வேலை செய்து...
வேவுபார்த்து...

தரம் கொண்ட பகிர்வுக்கு
ஊக்கம் தந்து...
நிறைகுடம் இல்லாத...

பகிர்வுக்கு நாசுக்காக
தண்ணீரை நிரைப்பி
மீண்டும் புலனத்தில்
என்னை போல்
பகிரும் அன்பர்களுக்கு

கருத்துக்கும்...
பகிர்வுகளுக்கும்...
பாராட்டி...

தமிழ்மொழியோடு எங்களைக் கைகொடுத்து

தூக்கி 130 பேர்களில் நன்கு தமிழ் புலமை கொண்டவர்கள்

நிறைய பேர்கள் இருப்பினும்...

என்னைப் போல் உள்ளவர்களையும்
அடையாளம் கண்டு
தமிழ் எழுத்துறைக்கு
இந்த புலனம் வழியாக
வலி இல்லாம் இழுத்து...

இன்னும் ஒருபடி
மேல் சென்று...
திருத்தி வளைதளத்தில் பதிவு செய்து...

எங்கள் பெயர்களையும்
தண்ணீரில் புதியதாக இருக்கும் தாமரை மலர்கள் போல்...
எங்களையும்

சத்தம் இல்லாமல்
தாய் தமிழ் மொழிக்கு பட்டறையை கட்டும்

ஒருங்கிணைப்பாளர்... என்ற கட்டமைப்போடு
சத்தம் இல்லாமல் கை அடக்கத்திலேயே
சிறந்த...
ஆளுமை மிக்க...
நிர்வாகிகள் கொண்டு
கலந்து பேசி...
தமிழுக்கு...
தமிழ் மொழியோடு
எங்களை வழி நடத்தும்
130 பேர்கள் கொண்ட அன்பர்களில்...

வெறும் 13 பேர்களே
பொங்கள் வாழ்த்து கூறியது என்று
ஆய்வில் குறிப்பிட்டது...
மனம்...
கனக்கிறது... 😢

அன்பர்களே....!
முத்து ஐயாவோடு...
மதிப்புக்குரிய புலனம்
நிர்வாகிகள் கொண்டு
நீங்களும் சேர்ந்து
செதுக்கினால்....
மலேசியம் புலனம்
என்ற தமிழ் புலனம்...
நீங்கள் எல்லோராலும்

செதுக்கிய பல சிலைகள்...
கொண்ட ஓர் ஆலயம்...!

தமிழில்
தட்டச்சில் தனித் தன்மை
வளர்த்து உங்களிடமும்
அன்றாடம் பேசும்.

ஊக்கம் தாருங்கள்...
எங்களுக்குள் தமிழ்
வளர்கிறது என்றால்
நீங்கள் எல்லோரும் சேர்ந்து ...
ஊற்றும் தாய் தமிழ் என்ற தண்ணீரே...

தவறு இருப்பின்
பொருத்தளுக....!
🌹🙏🌹

இரா. ஆதிசேகர்.
கோலக்கிள்ளான்.