31 டிசம்பர் 2020

நமக்கு ஏன் வயதாகிறது: புதிய ஆய்வு - முத்துசாமி கோலக்கிள்ளான்

23.12.2020

இந்த உலகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பைச் சந்திக்கத்தான் வேண்டும். நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதே சமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்குப் பதில் சொல்ல முடியும்.

Martin Hetzer

அதாவது ஒரு குழந்தை பிறந்த பின்பு நாட்கள், வருடங்கள் செல்ல செல்ல அதற்கு வயதாகிறது. வயதாக வயதாக உடல் மெலிந்து, நோய்கள் ஏற்பட்டு இறுதியில் இறந்து போகிறது.

ஆக பிறந்த ஒவ்வொருவரும் இறந்து போவதற்குக் காரணம் நமக்கு வயதாகிப் போவது அல்லது மூப்பு அடைவதுதான்! ஆமாம், நமக்கு ஏன் வயதாகிறது?

இந்தக் கேள்விக்கு உலக அறிவியலாளர்கள் யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நான் கண்டுபிடித்து விட்டேன் என்கிறார் அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய (Salk Institute for Biological Studies) விஞ்ஞானி மார்டின் ஹெட்சர் (Martin Hetzer).

நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக் கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP (extremely long-lived proteins – ELLP) எனும் ஒரு வகை புரதங்கள் இருக்கின்றன. 'ELLP' என்றால் மிக மிக நீண்ட ஆயுளை உடைய புரதங்கள் என்று பொருள்.

Longevity Cells Found: Scientists at the Salk Institute report they have found a component of brain cells that could explain how the aging process occurs. The scientists found that certain proteins, called " long-lived protein supporting" (extremely long-lived proteins – ELLP), found on the surface of the nucleus of neurons, is thought to have longevity in living creatures.

நியூக்ளியசிற்கு உள்ளேயும்; நியூக்ளியசில் இருந்து வெளியேவும் என்னென்ன பொருட்கள் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே இந்த ELLP புரதங்கள்தான். இதனால் இவற்றுக்குப் 'போக்குவரத்து வழித் தடப் புரதங்கள்' என்றும் மற்றொரு பெயரும் உண்டு.

முக்கியமாக நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே செல்லாமல் தடுப்பது இந்த ELLP புரதங்களே! உடலின் பிற புரதங்கள் சேதம் அடைந்தால் உடனே அவை புதிய புரதங்களால் நிரப்பப்படும்.

ஆனால் வேதியல் மாற்றங்கள் மற்றும் பிற பாதிப்புகளால் ELLP புரதங்கள் சேதம் அடையும் போது அவற்றுக்கு மாற்றாக, புதிய ELLP புரதங்கள் உற்பத்தி செய்யப் படுவது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் காரணமாக, பல நச்சுப் பொருட்கள் நியூக்ளியசிற்கு உள்ளே சென்று நியூரான்களின் உள்ளே இருக்கும் மரபுப் பொருளான DNA-வை பாதிக்கின்றன. இதனால் மரபணுக்களின் செயல்பாடுகள் மாற்றப்பட்டு உயிரணுக்கள் மூப்பு அடைகின்றன என்று கண்டு அறிந்து உள்ளனர் மார்டின் ஹெட்சர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

பொதுவாக உடலில் உள்ள புரதங்களின் வயது இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே. அதாவது மூன்று நாட்களுக்கு பின்னர் அவை செயல் இழந்து போகும். ஆனால் ELLP புரதங்களின் வயதோ மிக மிக அதிகம்.

எடுத்துக்காட்டாக எலிகளின் உடலில் உள்ள ELLP புரதங்களின் வயதும் எலியின் வயதும் ஒன்று என்கிறார் மார்டின் ஹெட்சர்.

இத்தகைய சிறப்புப் பண்பு உடைய ELLP புரதங்களையும், இவற்றுக்கும் மூப்பு அடைதலுக்கும் தொடர்பு உண்டு என்பதையும் உலகில் முதன்முதலில் கண்டு அறிந்த பெருமை ஆய்வாளர் மார்டின் ஹெட்சரையே சேரும்.

மூப்பு அடைதல் தொடர்பான இதற்கு முந்தைய ஆய்வுகளில், இயல்பான மரபணு செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களே மூப்பு அடைதலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் உயிரணுக்களின் நியூக்ளியசில் இருக்கும் ELLP புரதங்கள் பாதிப்பு அடைவதால், நியூக்ளியசிற்கு உள்ளே நச்சுப் பொருட்கள் சென்று உள் இருக்கும் DNA-வை சேதப் படுத்துவதாலேயே மரபணு செயல்பாடுகள் மாற்றம் அடைகின்றன.

இதை ஆய்வாளர் மார்டின் ஹெட்சர் கண்டறியும் வரை, மரபணு செயல்பாட்டு மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று உலகின் பிற ஆய்வாளர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

உடலின் முக்கிய பாகங்களான இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் குறைந்து போவதுதான் மூப்பு அடைதலின் முதல் மற்றும் அடிப்படை அறிகுறி.

இந்தப் பாகங்களின் உயிரணுக்களில் நிகழும் புரத சமன்பாடு (protein homeostasis) அல்லது உட்புற உறுதிநிலை (internal stability) பாதிக்கப் படுவதே அவற்றின் செயல்பாடு குறைவதற்கான முக்கிய காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆய்வாளர் மார்டின் ஹெட்சரின் ஆய்வு முடிவுகளில் (மூளை உயிரணுக்களான) நியூரான்களின் செயல்பாடுகள் குறைவதற்கு ELLP புரதங்கள் சேதம் அடைவதே காரணமாக இருக்கக் கூடும் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது.

நியூரான்கள் தவிர்த்த உடலில் உள்ள பிற உயிரணுக்களின் செயல்பாடுகள் குறையும் போது அவை, அவற்றின் சேதம் அடைந்த பழைய புரதங்களை அழித்து புதிய புரதங்களை உற்பத்தி செய்து விடுகின்றன.

இதனால் அவற்றின் செயல்பாடு மீண்டும் அதிகரித்து விடுகிறது. ஆனால் நியூரான்களிலுள்ள புரதங்கள் ஒரு முறை சேதம் அடைந்தால் அவற்றுக்கு மாற்றாக புதிய புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவது இல்லை என்பது துரதிஷ்டவசமானது.

மூப்பு அடைதல் தொடர்பான இந்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு நரம்புச் சிதைவு குறைபாடுகளான அல்ஷெய்மர்ஸ் மற்றும் பார்கின்சன்ஸ் ஏற்படுவதற்கான மூலக் காரணங்களை அறிந்து கொள்ளவும், இந்த நோய்கள் குறித்த மேல் அதிகப் புரிதலையும் பெற முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

'என்றும் பதினாறு' மார்கண்டேயனைப் பற்றி படித்து இருக்கிறோம். இந்த ஆய்வு முடிவுகளைப் பார்க்கும் போது, ஒருவேளை மார்கண்டேயரின் ELLP புரதங்கள் அவருடைய பதினாறாவது வயதுக்குப் பிறகு சேதம் அடையவே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Read more:
https://www.trussty.com/2012/05/longevity-cells-found.html#ixzz6iCbG50X6




 

30 டிசம்பர் 2020

காகத்தின் வாழ்வியல் இரகசியங்கள் - நாகேஷ் எஸ்.வி.

22.12.2020

காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். அலட்சியம் செய்து இருப்போம். ஆனால் ஆச்சரியப்படும் அளவு அசாத்திய குணங்கள்; பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு.

மனிதனைவிட வாழ்வில் உயர்ந்த நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. இயற்கையின் பூரண அறிவைப் பெற இன்று காகங்களைப் பற்றி சித்த நூல்களில் சொல்லப்பட்ட இரகசியங்களைத் தெரிந்து கொள்வோம்.

காகம் உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாகக் காகத்தைச் சொல்லலாம். தன் ஜோடியுடன் மட்டுமே இணை சேரும். பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டுத் தான் தன் கூட்டுக்குச் செல்லும் வழக்கம் உடையது காகம்.

உணவை ஒரு போதும் தனியாகச் சாப்பிட வேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்துப் பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.

காக்கைக்கையின் கூண்டுக்குள் இருக்கும் முட்டை தன் முட்டை இல்லை என்று காக்கைக்குத் தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவு அளித்து பராமரிக்கும்.  உலகில் மிகச் சிறந்த மாற்றந்தாய் காகம் தான்.

தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மை உண்டு. இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப் படுகிறது.

இது மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான். ஆனாலும் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவது இல்லையோ என்று தோன்றுகிறது.

காகத்திற்குத் தினமும் காலையில் கம்பு, சோளம், திணை வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு மறைந்த உடன் பிறப்புகளின் ஆசிர்வாதமாகும்.

உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்க; தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். கணுப்பிடி என்பது விடியல் காலையில் செய்யும் பிரார்த்தனை.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலம் போடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா… கா…. கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களைச் சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்தக் காக்கைகள் கா... கா... என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  

மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். இதனால் மறைந்த உடன் பிறப்புகளின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை வழிபடுவதால் சனி பகவானைத் திருப்தி படுத்தியதாகவும் ஒரு நம்பிக்கை.

தமிழர்களின் நம்பிக்கையின்படி காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம் மணிக் காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாதது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். இது ஒரு நம்பிக்கை.

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும்; நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும்; முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா… கா… என்று பல முறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. இதுவும் ஒரு நம்பிக்கை.

காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

எனவே காக்கை வழிபாடு செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம். காகத்திடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள்...

காலை எழுந்திரு

மாலையிலும் குளி

கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண்


வாழ்க வளமுடன் நலமுடன்.



 

மலாயா தமிழர்கள் வரலாறு: தர்ம ஆர்டர்

21.12.2020

தென்னிந்தியத் தொழிலாளர் நிதியின் அசல் பெயர் இந்திய இமிகிரேஷன் நிதி. 1908-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. 1960-களில் அந்தப் பெயர் இந்தியக் குடிநுழைவு நிதி என்று மாற்றம் கண்டது.

இதற்கு தர்ம ஆர்டர் எனும் இன்னும் ஒரு பெயரும் இருந்தது. அந்த நிதி உருவாக்கப் படுவதற்கு ஒரே ஓர் அடிப்படைக் காரணம் மட்டும் தான் மிக மிக முக்கியமான காரணம்.

மலாயாவில் தென்னிந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப் பட்டன. அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப் பட்டார்கள். அவற்றைச் சீர் செய்து சமன் செய்வதே அந்த நிதியின் பிரதான நோக்கம்.

இந்த நிதிக்கு ஒரு வாரியம் இருந்தது. அதன் பெயர் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம். இந்த வாரியம் தான் அந்த நிதியை நிர்வகித்து வந்தது. அந்த அமைப்பில் இடம் பெற்று இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதவள அமைச்சரால் நியமிக்கப் பட்டார்கள். சரி.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வாரியம் இயங்கி வந்தது. 1948-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை 27 ஆயிரத்து 399 தென்னிந்தியத் தொழிலாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அந்த வாரியம் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறது.

தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் பல ஆண்டுகளாகத் தென்னிந்தியத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மேற்கல்வி பயில நிதியுதவி செய்து வந்தது.

1962-ஆம் ஆண்டில் இருந்து 1992-ஆம் ஆண்டு வரையில் 699 ஏழை இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கி உள்ளது.

1960-ஆம் ஆண்டுகளில் அப்போதைய பினாங்கு மாநில ம.இ.கா. தலைவரும் வர்த்தகத் தொழில் அதிபருமான அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை அவர்கள் நிபோங் திபால் நகருக்கு அருகில் இருந்த கிரியான்; சுங்கை ஜாவி தோட்டங்களை வாங்கினார்.

அவற்றில் கிரியான் தோட்டத்தில் தன் சொந்த நன்கொடையாக 15 ஏக்கர் நிலத்தை முதியோர் பராமரிப்புகளுக்காக வழங்கி இருந்தார். இந்த நிலம் நிபோங் திபால் ஜாலான் புக்கிட் பஞ்சோரில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

அந்த நிலத்தில் தான் ஏழை இந்தியர்களுக்கான முதியோர் இல்லம் கட்டப்பட்டு இருந்தது. என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை வழங்கிய 15 ஏக்கர் நிலத்தில் 14 ஏக்கரில் செம்பனை மரங்கள் இருந்தன. செம்பனைப் பழங்களில் இருந்து கிடைத்த வருமானம் முதியோர் இல்லப் பராமரிப்புச் செலவுக்குப் பயன்பட்டது.

ஆகக் கடைசியாக அந்த இல்லத்தில் 16 முதியவர்கள் தங்கி இருந்தார்கள். சயாம் மரண இரயில்வேயில் தப்பித்து வந்த சிலரும் அந்த இல்லத்தில் தங்கி இருந்தார்கள். மேலும் 43 பேருக்குத் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியத்தில் இருந்து நிதியுதவி கிடைத்து வந்தது.

1999 மே மாதம் 13-ஆம் தேதி தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் கலைக்கப் பட்டது. தென்னிந்தியாவிற்குப் போக இந்தியர்கள் முன்வரவில்லை. அந்த நிதி சும்மாவே கிடக்கிறது என்கிற கருத்துகளை ம.இ.கா. முன்வைத்தது.

அதனால் அந்த வாரியம் கலைக்கப்பட வேண்டும். அதில் உள்ள பணத்தை எடுத்து வேறு வகையில் செலவு செய்யலாம் என்று ம.இ.கா. தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

அப்போது ம.இ.கா.வின் தலைவராக டத்தோ ஸ்ரீ (துன்) சாமிவேலு இருந்தார். திதி நட்சத்திரம் இராகு காலம் கேது காலம் பார்த்து ஒரு வழியாக அந்த வாரியத்தைக் கலைத்தார்கள். மன்னிக்கவும். மூடுவிழா செய்தார்கள்.

இந்தியச் சமுதாய நலன் கருதிச் செய்தார்களா இல்லை நாட்டு நலன் கருதிச் செய்தார்களா. தெரியவில்லை. தர்ம ஆர்டர்... தர்ம ஆஸ்பத்திரிக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.12.2020

 

29 டிசம்பர் 2020

சயாம் மரண இரயில் பாதையிலே - ராதா பச்சையப்பன்

21.12.2020

சயாம் மரண இரயில் பாதைக்குப் போய் திரும்பி வராதவர்களில் என் மாமாவும் தாத்தாவும் அடங்குவர்கள். இவர்கள் மாமனாரும் மருமகனும் ஆவார்கள். மாமியார்  திருமணம் ஆகி ஒரு வருடம் கூட  ஆகவில்லை. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் தாயும், மகளும் கர்ப்பவதிகள். இருவரின் பிரசவத்தின் போது தான் இருவருடைய கணவன் மார்களும் இறந்து போன சேதியும் வந்தது.  

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் தாயும், மகளும்...    எவ்வளவு வேதனையான விசயம் இது.

மகளுக்கு முதல் பிரசவம். ஆண் பிள்ளை. தாய்க்கு எட்டாவது பிரசவம். ஆண் பிள்ளை. ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள். நான்கு ஆண் பிள்ளைகள். இந்தக் குழந்தையும் சேர்த்து மொத்தம் எட்டுப் பிள்ளைகள்.

இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்து... அதில் ஒரு பெண்... கணவர் இன்றி கை குழந்தையோடு... பாட்டி மிகவும் சிரமப் பட்டுதான்... கணவரின் துனை இன்றி தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.

பாட்டி தமிழகத்தில் இருந்து வந்தவராம். மிகவும் கெட்டிகாரத் தனமாகவே பிள்ளைகளைப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்தார்.  

அதில் ஒரு மகன் அந்தக் கால ஆசிரியர். மகளுக்கும் மறுமணம் செய்து வைத்தார்.   எனக்கு விபரம் தெரிந்து பாட்டி சாரி பிளவுஸ் போட்டது இல்லை. அவர்கள் ஊரில் கணவர் இறந்து விட்டால் சாரி பிளவுஸ் போட மாட்டார்களாம்.

பாட்டி இறக்கும் போது 92 வயது. ஒரு பல் கூட விழவில்லை. தலைமுடியும் சரியாக  நரைக்கவில்லை. எஸ்டேட் வேலையோடு மரவள்ளிக் கிழங்கு தோட்டம் போட்டு பிள்ளைகளின் சாப்பாட்டுக்கும் குடும்பத்துக்கும் உபரி வருமானம் தேடிக் கொண்டார்.   

சகோதரர் திரு. குணநாதன் சயாமுக்குப் போனவர்களைக் கண்டு பேட்டி எடுத்து  கட்டுரையை நாளிதழில் போட்டார். அதில் என் மாமா தாத்தா பெயரும் இடம் பெற்று இருந்தது. அதைக் கண்டு என் மாமா மகனும் அவர் மகளும் பேட்டி கொடுத்த பெரியவரைப் போய் பார்த்து விபரங்களை கேட்டார்கள். அப்போது பெரியவர் யோசித்து யோசித்துப் பேசினாராம்.  

தாத்தா வசதியாக வாழ்ந்தவர். தமிழகத்தில் ஊரின் பெயர் புத்தூர். தாத்தாவுடன் தான் அந்தப் பெரியவரும் மலேசியாவிற்கு வந்தாராம். தாத்தா வீட்டோடு இருந்து வேலைகளைச் செய்தாகச் சொன்னார்.

சயாமுக்குப் போகும் போதும் அனைவரும் ஒன்றாகவே போனார்களாம். அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்ததாகச் சொன்னார். தாத்தா உடம்புக்கு மிகவும் முடியாத நிலையில்  இருந்தாராம். கஞ்சி கொண்டு வந்து கொடுத்து விட்டு, ’இங்கயே இரு  என்று கூறி விட்டு போய் வந்து பார்க்கும் போது தாத்தாவைக் காணவில்லையாம்.

 

எங்கு தேடியும் கிடைக்க வில்லை என்றார். மாமாவையும் பார்க்கவில்லை என்றார்.  தாத்தாவின் பெயர் சுப்பராயன். மாமாவின் பெயர் முனுசாமி என்று அந்தப் பெரியவர் மிகச் சரியாகச் சொன்னார்.

கோலா சிலாங்கூர், ஜெரம் கென்னி எஸ்டேட்டில் ஒன்றாக வசித்தவர்கள். அதை  இருபதாங்கட்டை என்றும் சொல்வது உண்டு. பெரியவருக்கும் வயது கடந்து விட்டது. ஞாபகமும் குறைந்து  விட்டது. கனத்த மனத்தோடும் கண்களில் கண்ணீரோடும்  விடை பெற்று வந்தோம்.  

அதற்கு முன் கோலா கிள்ளானில் ஒரு கோயிலில் சயாமுக்குப் போய் அங்கு இறந்தவர்களுக்கு ஆத்ம பூஜை செய்தார்கள். அதிலும் கலந்து கொண்டோம். மற்றும்  ஒருவர் எனது சின்னம்மாவின் கணவரும் சயாமுக்குப் போனவர். பத்து தீகா ஈபோர் எஸ்டேட்டில் வாழ்ந்தவர்கள்.

கணவர் வருவார் வருவார் என்று சின்னம்மா தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரொம்ப வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்தார். இறுதியில் கண் மூடினார். சயாம் இரயில் பாதை பலருடைய வாழ்கையையும் கனவுகளையும் அழித்து விட்டது!

Raja Sg Buluh: படித்தேன். மனம் வலிக்கிறது. ஜப்பான் அரசு ஏதோ ஒரு தொகை கொடுத்தாகப் பேசப் படுகிறது, நம்பப் படுகிறது. தகவல் அறிந்த வட்டாரம் சொல்கிறது. ஏன் இந்தோனேசிய செய்தி நிறுவனம்கூட (அந்தாரா) செய்தி போட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால் ஒரு தம்படியும் கண்ணில் காட்டாதது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கிறது. என்ன செய்வது சகோதரி.

இது சம்பந்தமாக, என் நண்பர் இன்னொரு பதிவை போட்டு இருக்கிறார். என் நண்பரின் தந்தையும் கம்பி சடக்கு போடப் போய் ஒரு காலை இழந்து மலாயாவுக்கு திரும்பியவர். அந்தப் பதிவு இதுதான்.

மாசிலன், பகாவ், பெல்டா:
உண்மைதான். இங்கு சிரம்பானில் இதற்கு ஓர் அமைப்பு இருந்தது. அதன் தலைவர் திரு. சசிதரன். நஷ்டயீடு பெற பலர் பதிந்தனர். பல மாநிலங்களில் இருந்தும் பதிந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் சீனர்களும் பதிந்தனர்.

சசிதரன் தமிழ் பிரிவுக்குத் தலைவர். அதேவேளையில் ‌இந்த அமைப்புக்குத் தேசிய தலைவர் ஓய்வுபெற்ற இராணுவத்தைச் சேர்ந்த ஒரு மலாய்க்காரர் இருந்தார். இந்த அமைப்பில் மலாய்க்காரர்கள்தான் அதிகம். குவாந்தானில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டோம்.‌

பதிவுக் கட்டணம், அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று சில பல காலக் கட்டங்களில் ஆளுக்கு 500 வெள்ளி வரை கொடுத்தோம். இறுதியில் அந்தத் தலைவன் தான் தின்னான்! தொடர்ந்து அவன் மேல் வழக்கும் போடப் பட்டது!

அதே வேளையில் ஐ.நா. வரை இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது. வழக்கறிஞர் கட்டணம் கட்ட முடியாமல் அப்படியே நின்று விட்டது!

மகாதீர் பிரதமராக இருந்த போது, ஜப்பானிய அரசு இதற்கான நஷ்டயீடு கோடிக் கணக்கான பணம் வழங்கியது. அந்தப் பணத்தைக் கொண்டு கப்பல் வாங்கப் பட்டதாகவும் கேள்வி பட்டோம்! எப்படி கதை போகிறது பார்த்தீர்களா?

Raja Sg Buluh: சயாம் மரணப் பாதை அமைக்கச் சென்ற என் தந்தை திரும்பவே இல்லை. நான் ஒரு முறை பட்டர்வர்த்தில் இருந்து பாங்காக் வரை இரயிலில் பயணம் செய்தேன்.

இந்தப் பாதையை அமைக்கப் போன என் தந்தையைப் பற்றி யோசித்தேன். மனம் வலித்தது. என் குடும்பத்தில் இருவரை இழந்தது மிக மிக வேதனையான காலச்சுவடு. பிழைக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம். நமக்கு என்று கேட்பார் இல்லை. நாதியற்று இன்றும் வாழ்கிறோம்.



 

எம்.ஜி.ஆர்: வறுமையின் காரணமாய் நடிக்க வந்தேன்

21.12.2020

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு அளித்த பேட்டி...

கே: நீங்கள் நடிக்க வந்தது ஏன்?

எம்.ஜி.ஆர் : வறுமைதான்.

கே: நீங்கள் நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?

எம்.ஜி.ஆர் : வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியைப் போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.

கே: ஆங்கிலப் படத்தில் நடிப்பீர்களா?

எம்.ஜி.ஆர் : இங்கிலீஷ் நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது.

கே: மலையாளம் தெரியுமா?

எம்.ஜி.ஆர் : தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன்.

கே: கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்குப் போவீர்களா?

எம்.ஜி.ஆர் : நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போய் இருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்து இருந்தேன்.

சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்குப்  போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது எல்லாம் கிடையாது.

வேண்டுவது தப்பு இல்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பது இல்லை.

கே: உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?

எம்.ஜி.ஆர் : என் வீட்டு பூஜை அறையில் இருப்பது எல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய், தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.

கே: நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு இருக்கிறீர்களா?

எம்.ஜி.ஆர் : என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.

கே: அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?

எம்.ஜி.ஆர் : கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடி இருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்த போது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.