21.12.2020
சயாம் மரண இரயில் பாதைக்குப் போய் திரும்பி வராதவர்களில் என் மாமாவும் தாத்தாவும் அடங்குவர்கள். இவர்கள் மாமனாரும் மருமகனும் ஆவார்கள். மாமியார் திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் தாயும், மகளும் கர்ப்பவதிகள். இருவரின் பிரசவத்தின் போது தான் இருவருடைய கணவன் மார்களும் இறந்து போன சேதியும் வந்தது.
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் தாயும், மகளும்... எவ்வளவு வேதனையான விசயம் இது.
மகளுக்கு முதல் பிரசவம். ஆண் பிள்ளை. தாய்க்கு எட்டாவது பிரசவம். ஆண் பிள்ளை. ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள். நான்கு ஆண் பிள்ளைகள். இந்தக் குழந்தையும் சேர்த்து மொத்தம் எட்டுப் பிள்ளைகள்.
இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடிந்து... அதில் ஒரு பெண்... கணவர் இன்றி கை குழந்தையோடு... பாட்டி மிகவும் சிரமப் பட்டுதான்... கணவரின் துனை இன்றி தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.
பாட்டி தமிழகத்தில் இருந்து வந்தவராம். மிகவும் கெட்டிகாரத் தனமாகவே பிள்ளைகளைப் படிக்க வைத்துத் திருமணமும் செய்து வைத்தார்.
அதில் ஒரு மகன் அந்தக் கால ஆசிரியர். மகளுக்கும் மறுமணம் செய்து வைத்தார். எனக்கு விபரம் தெரிந்து பாட்டி சாரி பிளவுஸ் போட்டது இல்லை. அவர்கள் ஊரில் கணவர் இறந்து விட்டால் சாரி பிளவுஸ் போட மாட்டார்களாம்.
பாட்டி இறக்கும் போது 92 வயது. ஒரு பல் கூட விழவில்லை. தலைமுடியும் சரியாக நரைக்கவில்லை. எஸ்டேட் வேலையோடு மரவள்ளிக் கிழங்கு தோட்டம் போட்டு பிள்ளைகளின் சாப்பாட்டுக்கும் குடும்பத்துக்கும் உபரி வருமானம் தேடிக் கொண்டார்.
சகோதரர் திரு. குணநாதன் சயாமுக்குப் போனவர்களைக் கண்டு பேட்டி எடுத்து கட்டுரையை நாளிதழில் போட்டார். அதில் என் மாமா தாத்தா பெயரும் இடம் பெற்று இருந்தது. அதைக் கண்டு என் மாமா மகனும் அவர் மகளும் பேட்டி கொடுத்த பெரியவரைப் போய் பார்த்து விபரங்களை கேட்டார்கள். அப்போது பெரியவர் யோசித்து யோசித்துப் பேசினாராம்.
தாத்தா வசதியாக வாழ்ந்தவர். தமிழகத்தில் ஊரின் பெயர் புத்தூர். தாத்தாவுடன் தான் அந்தப் பெரியவரும் மலேசியாவிற்கு வந்தாராம். தாத்தா வீட்டோடு இருந்து வேலைகளைச் செய்தாகச் சொன்னார்.
சயாமுக்குப் போகும் போதும் அனைவரும் ஒன்றாகவே போனார்களாம். அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்ததாகச் சொன்னார். தாத்தா உடம்புக்கு மிகவும் முடியாத நிலையில் இருந்தாராம். கஞ்சி கொண்டு வந்து கொடுத்து விட்டு, ’இங்கயே இரு என்று கூறி விட்டு போய் வந்து பார்க்கும் போது தாத்தாவைக் காணவில்லையாம்.
எங்கு தேடியும் கிடைக்க வில்லை என்றார். மாமாவையும் பார்க்கவில்லை என்றார். தாத்தாவின் பெயர் சுப்பராயன். மாமாவின் பெயர் முனுசாமி என்று அந்தப் பெரியவர் மிகச் சரியாகச் சொன்னார்.
கோலா சிலாங்கூர், ஜெரம் கென்னி எஸ்டேட்டில் ஒன்றாக வசித்தவர்கள். அதை இருபதாங்கட்டை என்றும் சொல்வது உண்டு. பெரியவருக்கும் வயது கடந்து விட்டது. ஞாபகமும் குறைந்து விட்டது. கனத்த மனத்தோடும் கண்களில் கண்ணீரோடும் விடை பெற்று வந்தோம்.
அதற்கு முன் கோலா கிள்ளானில் ஒரு கோயிலில் சயாமுக்குப் போய் அங்கு இறந்தவர்களுக்கு ஆத்ம பூஜை செய்தார்கள். அதிலும் கலந்து கொண்டோம். மற்றும் ஒருவர் எனது சின்னம்மாவின் கணவரும் சயாமுக்குப் போனவர். பத்து தீகா ஈபோர் எஸ்டேட்டில் வாழ்ந்தவர்கள்.
கணவர் வருவார் வருவார் என்று சின்னம்மா தன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரொம்ப வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்தார். இறுதியில் கண் மூடினார். சயாம் இரயில் பாதை பலருடைய வாழ்கையையும் கனவுகளையும் அழித்து விட்டது!
Raja Sg Buluh: படித்தேன். மனம் வலிக்கிறது. ஜப்பான் அரசு ஏதோ ஒரு தொகை கொடுத்தாகப் பேசப் படுகிறது, நம்பப் படுகிறது. தகவல் அறிந்த வட்டாரம் சொல்கிறது. ஏன் இந்தோனேசிய செய்தி நிறுவனம்கூட (அந்தாரா) செய்தி போட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால் ஒரு தம்படியும் கண்ணில் காட்டாதது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கிறது. என்ன செய்வது சகோதரி.
இது சம்பந்தமாக, என் நண்பர் இன்னொரு பதிவை போட்டு இருக்கிறார். என் நண்பரின் தந்தையும் கம்பி சடக்கு போடப் போய் ஒரு காலை இழந்து மலாயாவுக்கு திரும்பியவர். அந்தப் பதிவு இதுதான்.
மாசிலன், பகாவ், பெல்டா: உண்மைதான். இங்கு சிரம்பானில் இதற்கு ஓர் அமைப்பு இருந்தது. அதன் தலைவர் திரு. சசிதரன். நஷ்டயீடு பெற பலர் பதிந்தனர். பல மாநிலங்களில் இருந்தும் பதிந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் சீனர்களும் பதிந்தனர்.
சசிதரன் தமிழ் பிரிவுக்குத் தலைவர். அதேவேளையில் இந்த அமைப்புக்குத் தேசிய தலைவர் ஓய்வுபெற்ற இராணுவத்தைச் சேர்ந்த ஒரு மலாய்க்காரர் இருந்தார். இந்த அமைப்பில் மலாய்க்காரர்கள்தான் அதிகம். குவாந்தானில் நடந்த கூட்டத்திலும் கலந்து கொண்டோம்.
பதிவுக் கட்டணம், அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று சில பல காலக் கட்டங்களில் ஆளுக்கு 500 வெள்ளி வரை கொடுத்தோம். இறுதியில் அந்தத் தலைவன் தான் தின்னான்! தொடர்ந்து அவன் மேல் வழக்கும் போடப் பட்டது!
அதே வேளையில் ஐ.நா. வரை இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது. வழக்கறிஞர் கட்டணம் கட்ட முடியாமல் அப்படியே நின்று விட்டது!
மகாதீர் பிரதமராக இருந்த போது, ஜப்பானிய அரசு இதற்கான நஷ்டயீடு கோடிக் கணக்கான பணம் வழங்கியது. அந்தப் பணத்தைக் கொண்டு கப்பல் வாங்கப் பட்டதாகவும் கேள்வி பட்டோம்! எப்படி கதை போகிறது பார்த்தீர்களா?
Raja Sg Buluh: சயாம் மரணப் பாதை அமைக்கச் சென்ற என் தந்தை திரும்பவே இல்லை. நான் ஒரு முறை பட்டர்வர்த்தில் இருந்து பாங்காக் வரை இரயிலில் பயணம் செய்தேன்.
இந்தப் பாதையை அமைக்கப் போன என் தந்தையைப் பற்றி யோசித்தேன். மனம் வலித்தது. என் குடும்பத்தில் இருவரை இழந்தது மிக மிக வேதனையான காலச்சுவடு. பிழைக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம். நமக்கு என்று கேட்பார் இல்லை. நாதியற்று இன்றும் வாழ்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக