30 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள் வரலாறு: தர்ம ஆர்டர்

21.12.2020

தென்னிந்தியத் தொழிலாளர் நிதியின் அசல் பெயர் இந்திய இமிகிரேஷன் நிதி. 1908-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. 1960-களில் அந்தப் பெயர் இந்தியக் குடிநுழைவு நிதி என்று மாற்றம் கண்டது.

இதற்கு தர்ம ஆர்டர் எனும் இன்னும் ஒரு பெயரும் இருந்தது. அந்த நிதி உருவாக்கப் படுவதற்கு ஒரே ஓர் அடிப்படைக் காரணம் மட்டும் தான் மிக மிக முக்கியமான காரணம்.

மலாயாவில் தென்னிந்தியத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப் பட்டன. அவர்கள் தவறான முறையில் வழி நடத்தப் பட்டார்கள். அவற்றைச் சீர் செய்து சமன் செய்வதே அந்த நிதியின் பிரதான நோக்கம்.

இந்த நிதிக்கு ஒரு வாரியம் இருந்தது. அதன் பெயர் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம். இந்த வாரியம் தான் அந்த நிதியை நிர்வகித்து வந்தது. அந்த அமைப்பில் இடம் பெற்று இருந்த உறுப்பினர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதவள அமைச்சரால் நியமிக்கப் பட்டார்கள். சரி.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வாரியம் இயங்கி வந்தது. 1948-ஆம் ஆண்டில் இருந்து 1991-ஆம் ஆண்டு வரை 27 ஆயிரத்து 399 தென்னிந்தியத் தொழிலாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் அந்த வாரியம் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறது.

தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் பல ஆண்டுகளாகத் தென்னிந்தியத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மேற்கல்வி பயில நிதியுதவி செய்து வந்தது.

1962-ஆம் ஆண்டில் இருந்து 1992-ஆம் ஆண்டு வரையில் 699 ஏழை இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கி உள்ளது.

1960-ஆம் ஆண்டுகளில் அப்போதைய பினாங்கு மாநில ம.இ.கா. தலைவரும் வர்த்தகத் தொழில் அதிபருமான அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை அவர்கள் நிபோங் திபால் நகருக்கு அருகில் இருந்த கிரியான்; சுங்கை ஜாவி தோட்டங்களை வாங்கினார்.

அவற்றில் கிரியான் தோட்டத்தில் தன் சொந்த நன்கொடையாக 15 ஏக்கர் நிலத்தை முதியோர் பராமரிப்புகளுக்காக வழங்கி இருந்தார். இந்த நிலம் நிபோங் திபால் ஜாலான் புக்கிட் பஞ்சோரில் இருந்தது. இன்னும் இருக்கிறது.

அந்த நிலத்தில் தான் ஏழை இந்தியர்களுக்கான முதியோர் இல்லம் கட்டப்பட்டு இருந்தது. என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை வழங்கிய 15 ஏக்கர் நிலத்தில் 14 ஏக்கரில் செம்பனை மரங்கள் இருந்தன. செம்பனைப் பழங்களில் இருந்து கிடைத்த வருமானம் முதியோர் இல்லப் பராமரிப்புச் செலவுக்குப் பயன்பட்டது.

ஆகக் கடைசியாக அந்த இல்லத்தில் 16 முதியவர்கள் தங்கி இருந்தார்கள். சயாம் மரண இரயில்வேயில் தப்பித்து வந்த சிலரும் அந்த இல்லத்தில் தங்கி இருந்தார்கள். மேலும் 43 பேருக்குத் தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியத்தில் இருந்து நிதியுதவி கிடைத்து வந்தது.

1999 மே மாதம் 13-ஆம் தேதி தென்னிந்தியத் தொழிலாளர் நிதி வாரியம் கலைக்கப் பட்டது. தென்னிந்தியாவிற்குப் போக இந்தியர்கள் முன்வரவில்லை. அந்த நிதி சும்மாவே கிடக்கிறது என்கிற கருத்துகளை ம.இ.கா. முன்வைத்தது.

அதனால் அந்த வாரியம் கலைக்கப்பட வேண்டும். அதில் உள்ள பணத்தை எடுத்து வேறு வகையில் செலவு செய்யலாம் என்று ம.இ.கா. தலைவர்கள் முடிவு செய்தார்கள்.

அப்போது ம.இ.கா.வின் தலைவராக டத்தோ ஸ்ரீ (துன்) சாமிவேலு இருந்தார். திதி நட்சத்திரம் இராகு காலம் கேது காலம் பார்த்து ஒரு வழியாக அந்த வாரியத்தைக் கலைத்தார்கள். மன்னிக்கவும். மூடுவிழா செய்தார்கள்.

இந்தியச் சமுதாய நலன் கருதிச் செய்தார்களா இல்லை நாட்டு நலன் கருதிச் செய்தார்களா. தெரியவில்லை. தர்ம ஆர்டர்... தர்ம ஆஸ்பத்திரிக்கையில் படுத்து கண்களை மூடிக் கொண்டது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.12.2020

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக