21.12.2020
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு அளித்த பேட்டி...
கே: நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
எம்.ஜி.ஆர் : வறுமைதான்.
கே: நீங்கள் நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா?
எம்.ஜி.ஆர் : வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியைப் போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
கே: ஆங்கிலப் படத்தில் நடிப்பீர்களா?
எம்.ஜி.ஆர் : இங்கிலீஷ் நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது.
கே: மலையாளம் தெரியுமா?
எம்.ஜி.ஆர் : தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன்.
கே: கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்குப் போவீர்களா?
எம்.ஜி.ஆர் : நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போய் இருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்து இருந்தேன்.
சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்குப் போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வது எல்லாம் கிடையாது.
வேண்டுவது தப்பு இல்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பது இல்லை.
கே: உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
எம்.ஜி.ஆர் : என் வீட்டு பூஜை அறையில் இருப்பது எல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய், தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
கே: நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டு இருக்கிறீர்களா?
எம்.ஜி.ஆர் : என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
கே: அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
எம்.ஜி.ஆர் : கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடி இருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்த போது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக