09 ஜனவரி 2021

பட்டாம்பூச்சி தத்துவம்

08.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

’குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை’ என்று சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் சொன்னான். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  

’இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா’, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தி துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.

’பரவாயில்லை வா... நாம் இந்த தோட்டத்தில் அழகை ரசிக்கலாம்’ என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று தோட்டத்தின் அழகை கண்குளிரக் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்தில் முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கையிலே வந்து அமர்ந்தது.

குரு சிரித்தபடி சொன்னார்: ’இது தான் வாழ்க்கை!’

மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்.



 

08 ஜனவரி 2021

சிங்கப்பூர்த் தமிழர்கள் பற்றி பாலபாஸ்கரன்

08.01.2021

முன்னாள் மலேசிய வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சி தயாரிப்பாளர்


1. ஆங்கிலத் தமிழர்கள்.. ஆங்கிலம் படித்துவிட்டு அரசாங்க வேலையில் இருப்பவர்கள். தமிழ் தெரியாது. ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். நிறைய பேருக்கு அப்படி ஒன்றும் பெரிய படிப்பு இருக்காது. அதிகப் பட்சமாக O Level, A Level படித்து இருப்பார்கள். அவ்வளவுதான்.

2. தமிழ்த் தமிழர்கள்.. தமிழ் மட்டுமே பேசுபவர்கள். தமிழ் மட்டுமே படித்தவர்கள். குறைந்த வருமானம் கொண்டவர்கள். சிங்கப்பூர்த் தமிழரில் பெரும்பான்மையோர் இவர்களே.

பாலபாஸ்கரன்

3. பயணத் தமிழர்கள்.. கோ. சாரங்கபாணி ஒரு முறை தமிழ் முரசு தலையங்கத்தில் இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார். இவர்களுக்குக் குடும்பம் ஊரில் இருக்கும். கடுதாசி மூலம்தான் குடும்பமே நடக்கும். கடுதாசி வாழ்க்கை எனலாம்.

குழந்தை பிறப்பு, நல்லது கெட்டது எல்லாம் பல நாள் கழித்துக் கடிதத்தில்தான் வரும். ஊருக்குப் போகிறவரிடம் சாமான்கள் கொடுத்து வீட்டில் தரச் சொல்வது. ஊரில் இருந்து ஆள் வந்தால் அவரைப் பார்த்து மணிக் கணக்காக ஊர் விசயங்களை விசாரிப்பது.

இவர்களைக் காலி ஆட்கள் என்றுகூடச் சொல்வார்கள். உள்ளூர்க்காரர்கள் இவர்களை ஊர்க் குடுமிகள் என்று கேலி செய்வதும் உண்டு. பதிலுக்கு நாட்டான் என்று உள்ளூர்க்காரர்களைக் கேலி செய்வர் பயணத் தமிழர். (மலேசியம்) 07.01.2021.

ந.பாலபாஸ்கரன் வரலாறு

ந. பாலபாஸ்கரன் தமிழ்நாடு புதுச்சேரியில் பிறந்தவர். சிறுவயதிலேயே பினாங்கு வந்தார். கூலிம் நகரில் உள்ல சுல்தான் பட்லிஷா பள்ளியில் மூன்றாம் படிவம் வரை உயர்நிலைப் படிப்பு. பின்னர் புக்கிட் மெர்தாஜாம் ஹை ஸ்கூல் பள்ளியில் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு.

1963-ஆம் ஆண்டில் அப்போதைய ரேடியோ மலாயாவில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் எம்.ஏ கல்வி.

பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1982-ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடி பெயர்ந்தார். சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் சில ஆண்டுகள் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

2000-ஆம் ஆண்டில் பதவி ஓய்வு பெற்றார். 2017-ஆம் ஆண்டுக்கான கரிகாலச் சோழன் விருது இவருக்கு வழங்கப் பட்டது.  






கண்ணதாசனும் ஆங்கிலப் புலமையும் - ஜெயஸ்ரீ கண்ணன்

 08.01.2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர் திரு.வி.பி. ராமன் என்ற வழக்கறிஞர். மிகச் சிறந்த திறமைசாலி. தன்னுடைய சில வழக்குகள் விசயமாக அவரைச் சந்திக்க செல்வார் கவியரசு கண்ணதாசன்.

வழக்கறிஞரின் மனைவி நன்கு படித்தவர். ஆங்கில அறிவு உள்ளவர். ஒரு முறை கவிஞர் வழக்கறிஞரைச் சந்திக்க சென்ற போது கதவு மூடி இருந்தது.

யாரோ வெளியில் நிற்பதை அறிந்து "ஹூ இஸ் தட்" (Who is that) என்று ஆங்கிலத்தில் கேட்டார் வக்கீலின் மனைவி .

"என் அவுட் ஸ்டாண்டிங் பொயிட் ஈஸ் ஸ்டாண்டிங் அவுட் (An outstanding poet is Standing Out) என்று பதில் கொடுத்தார் கவிஞர் கண்ணதாசன்.

வெளியில் வந்த வக்கீல் மனைவி, "பரவாயில்லையே... தமிழில் தான் கவிதை எழுதுவீர்கள் என்று நினைத்தேன். ஆங்கிலத்திலும் புலமை உள்ளதே" என்று வியந்தார்.

அப்போது அவர் தான் படித்த ஆங்கில கவிதையின் இரண்டு வரிகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கவியரசரிடம் அதைக் கூறினார்.

அந்தக் கவிதையில், போரில் இருந்து திரும்பிய இராணுவ வீரன் போர்க் களத்தையே நினைத்து... நினைத்து... தூங்காமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்.

தன் கணவனைப் படுக்கக் சொல்லிவிட்டு இந்த வரிகளைக் கூறினாராம் இராணுவ வீரனின் மனைவி...

"சிலீப் யுவர் ஐஸ்.... ரெஸ்ட் யுவர் ஹார்ட்"
(Sleep your eyes, Rest your heart)

என்பதே அந்த வரிகள்.

கவிஞரின் மனதில் அந்த வரிகள் மிக ஆழமாகப் பதிந்தன. அந்த நேரத்தில் ஒரு படத்திற்குப் பாடல் ஒன்று எழுத வேண்டி வந்தது.

அவரது மனதில் பதிந்த அந்த வரிகள் அன்றைய படத்தின் சூழலுக்குத் தக்கவாறு இருந்ததால் அப்படியே பாடலாக வெளிப்பட்டன. அந்தப் பாடல் தான் ஆலயமணி படத்தில்  ஜானகி பாடும்...

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே...
 


அனைவரது நெஞ்சிலும் கண்ணதாசன் புகழ் என்றும் அழியாது.



 

07 ஜனவரி 2021

சிங்கப்பூரில் சிலை கண்ட நாராயணன் பிள்ளை - செ. நவீன்

07.01.2021

காலம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தடத்தைப் பதித்துச் செல்கின்றது. அந்தப் பதிவானது அசாதாரணமான அனுபவங்களை ஏந்தி நிற்கும் போது, இயற்கையும் அதற்கான அழகையும் மதிப்பையும் உருவப் படுத்தி விடுகின்றது.

வரலாறு என்பது தனியே ஆண்டுகளின் தொகுப்பு அல்ல. சம்பவங்களின் தொகுப்புகளின் தொகுப்பு அல்ல. அதிகாரத்தில் உள்ள தரப்புகளின் தொகுப்பும் அல்ல. மாறாக அது அவற்றின் ஊடாக நகர்ந்து செல்லும் மக்களுடைய வாழ்க்கையின் தொகுப்பாகும்.

இன்று செய்ததை நாளை மறந்து, அடுத்தப் பரபரப்புக்காக இயங்கத் தொடங்கிவிடும் காலக் கட்டத்தில் வாழ்கிறோம். ஆகவே வருங்கால சந்ததியினருக்கு நம் முன்னோர்களின் பெருமையைக் காலத்திற்கு ஏற்றவாறு பதிய வேண்டி உள்ளது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு தனி நபரின் பங்களிப்பானது எண்ணில் அடங்காத வண்ணம் பிரமிக்கத் தக்க நிலையில் இருக்குமாயின்; அவரை நினைவு கூறும் வகையில், பொது இடங்கள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிலையங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவார்கள்.

வரலாற்றில் நிலைத்து இருக்கும் படியாக, ஒரு சில இடங்களில் அந்தத் தனி நபரின் உருவச் சிலையை அமைத்தும் நினைவு கூர்வார்கள்.

அந்த வகையில், சிங்கப்பூர் ஆற்றோரம் சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் (Sir Stamford Raffles) சிலைக்கு அருகாமையில், 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய டான் கோட் செங், முன்ஷி அப்துல்லா சிலைகள்; சிங்கப்பூரில் கால் பதித்த முதல் தமிழரான திரு. நாராயணன் பிள்ளையின் (Narayana Pillai) சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன.

சிங்கப்பூரின் இருநூறு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை நினைவுக் கூரும் வகையில் இந்த நால்வரின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமனின் சிலையும் முன்னோடியாக அமைந்து உள்ளது.

இந்தத் தீவில் உள்ள முக்கிய முன்னோடித் தலைவர்களில் ஒருவரான நாராயணன் பிள்ளை, சர் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் உடன் பினாங்கில் இருந்து 1819-ஆம் ஆண்டு சிங்கப்பூரை வந்து அடைந்தார்.

அங்கு வாழ்ந்த இந்தியச் சமூகத்தின் முதன்மைத் தலைவராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. சிங்கப்பூரை வந்து அடைந்த நாராயணன் பிள்ளை, தமது வாழ்க்கையை ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டிய நிலை. நிதித் துறையின் முதன்மைத் தலைவராகப் பதவி வகித்தார்.

துரதிருஷ்டவசமாக அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். இவரது இடத்தில் வேறு ஒருவர் இருந்து இருந்தால் மீண்டும் பினாங்கிற்கே சென்று விடலாம் என்ற எண்ணம் எழுந்து இருக்கும்.

நாராயணன் பிள்ளை அவர்கள் தனது அசாதாரண தைரியத்தால் சிங்கப்பூரிலேயே தங்கி முதல் செங்கல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு அடுத்த நிலையில், முதல்நிலைக் கட்டிட ஒப்பந்தக்காரராகவும் ஆனார்.

தனது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணத்தில், சிங்கப்பூரில் மிகப் பெரிய பருத்தி பொருட்களுக்கான சந்தையை அமைத்தார்.

பெரும்பாலான பிரிட்டன் வணிகர்கள் அவருடன் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். அதிகமாகக் கடன் கொடுத்து துணிகளைச் சந்தையில் விற்பதற்கு உதவியும் செய்தார்கள்.

தொடர்ந்தால் போல துன்பம் அவரையும் விட்டு வைக்கவில்லை. அவருடைய மொத்தச் சந்தையும் தீயில் கருகியது. இதனால் பிரிட்டன் வியாபாரிகளுக்குப் பல்லாயிரக் கணக்கான டாலர் கடன் செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.            

இறுதியில் நகரத்தின் மையப் பகுதியில் ராபிள்ஸ், திரு. நாராயண பிள்ளைக்கு நிலம் ஒன்றினை வழங்கினார். அவரது வியாபாரத்தைப் புதுத் தோற்றத்துடன் ஆரம்பிக்க உதவிச் செய்தார்.

இத்தனை இன்னல்களுக்கும் இடையே, ஓர் இந்து ஆலயத்தைக் கட்டி எழுப்ப அவருக்கு ஆசை இருந்தது. அதனை நினைவுக் கூரும் வண்ணமாக தற்போது எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் அமைகிறது. மேலும் இந்தக் கோயில், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாகவும் விளங்குகிறது.

அரசாங்கத்தின் உந்துதலால் பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு உயர்ந்தார். நாராயண பிள்ளை தனது வாழ்க்கையில் பல்வேறான இன்னல்களைச் சந்தித்து வந்தாலும், அவருடைய மன தைரியமும் நம்பிக்கையும் அவரை இறுதியில் வெற்றி அடையச் செய்துள்ளன.

சிங்கப்பூரில் பிற்காலத்தில் இலட்சக் கணக்கான தமிழர்கள் குடியேறி இன்று நிரந்தரமாக அங்கு தங்கி இருப்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

சிங்கப்பூரின் ஆரம்ப கால வளர்ச்சியிலும் தனது கடும் உழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிய காரணத்திற்காகவே நாராயண பிள்ளைக்குச் சிங்கையின் மையப் பகுதியில் சிலை நிறுவி அவரைச் சிங்கை அரசாங்கமும் கௌரவித்து உள்ளது.

 -செ.நவீன்

சான்று:

https://selliyal.com/archives/178567




சும்மா என்றால் என்ன? - மலாக்கா முனியாண்டி

07.01.2021

உலகில் 6800 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக கூறப் படுகின்றது. இவை அனைத்தையும் விட தமிழ் மொழி சிறப்புமிக்கது என்பது சும்மா சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

உலகின் மூத்த குடி எனப் பெயர் பெற்ற தமிழினம் பேசும் மொழி. மொழியால் இனம் பெருமை பெற்றது எனில் அது தமிழினமாகத் தான் இருக்க வேண்டும்.

உலகில் தோன்றி பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போய் விட்டன. ஆனால் தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து நிற்கின்றது. தன்னையும் தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

நிச்சயம் நீங்கள் அசந்து போவீர்கள் – அது தான் தமிழ் மொழியின் சிறப்பு. ஏன் இந்த பீடிகை... தொடர்ந்து படியுங்கள் புரியும்.

*சும்மா*... சொல்லுவோம் தமிழின் சிறப்பை...
 
அது சரி... சும்மா என்றால் என்ன?

அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான் இந்த சும்மா.

பேச்சு வழக்குச் சொல்லாக இருந்தாலும் தமிழ் மொழியில் உள்வாங்கப் பட்டுள்ள ஒரு சொல் இது.

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 பொருள்கள் உண்டு. வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்தச் சும்மா எனும் சொல் எடுத்துக்காட்டும்...

1. அமைதியாக - சும்மா (அமைதியாக) இருங்கள் – Quiet

2. களைப்பாறிக் கொண்டு - கொஞ்ச நேரம் சும்மா இருக்கின்றேன் - Leisurely

3. உண்மையில் - சும்மா சொல்லக் கூடாது அருமை - in fact

4. சும்மா (இலவசமாக) கிடைக்காது - Free of cost

5. பொய் - சும்மா கதை அளக்காதே - Lie

6. உபயோகமற்று - சும்மா தான் இருக்கின்றது எடுத்துக் கொள் - Without use

7. அடிக்கடி - சும்மா சும்மா சீண்டுகின்றான் இவன் - Very often

8. எப்போதும் - இவன் இப்படித்தான் சும்மா சொல்லுவான் - Always

9. தற்செயலாக - ஒன்றுமில்லை சும்மா சொல்கின்றேன் - Just

10. காலி - இந்த பெட்டி சும்மா தான் இருக்கின்றது - Empty

11. மறுபடியும் - சொன்னதையே சும்மா சொல்லாதே - Repeat

12. ஒன்றுமில்லாமல் - சும்மா (வெறும்கையோடு) போகக் கூடாது - Bare

13. சோம்பேறித் தனமாக - சும்மா தான் இருக்கின்றோம் - Lazily

14. நான் வெட்டியாக (சும்மா) ஏதாவது உளறுவேன் - idle

15. விளையாட்டிற்கு - எல்லாமே  சும்மா தான் சொன்னேன் - Just for fun

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்தச் சும்மா என்கிற ஒரு சொல். நாம்  பயன்படுத்தும் இடத்தின் படியும்…. தொடரும் சொற்களின் படியும்...  பதினைந்து விதமான பொருள்களைக் கொடுக்கிறது என்றால் அது சும்மா இல்லை.

சும்மாவாவது சிந்தித்தீர்களா இதனை.. உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்ற தன்மை...

ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்.

இந்தச் சும்மா என்கிற வார்த்தையும் அதன் அர்த்தமும் உங்களுக்குச் சும்மா பிடித்து இருந்தால் சும்மா ஒரு பதிவு பண்ணுங்கள்... சும்மா பற்றி உங்கள் நண்பர்கள் குடுப்பத்தார் உறவினர்கள் தெரிந்து கொள்ளட்டும்.