15 மார்ச் 2021

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளை

14.03.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

கல்வி என்பது வெறும் விதிகளைக் கற்றுக் கொடுப்பது அல்ல. மாறாக மனித மூளையை சிந்திக்கத் தூண்டும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்றார் ஐன்ஸ்டீன்!

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆகச் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1955-ஆம் ஆண்டு தனது 76-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடலை தாமஸ் ஹார்வே என்ற மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்தார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளையை எடுத்து வைத்து கொண்டார்.

இதனை அறிந்த ஐன்ஸ்டீன் குடும்பத்தினர், தாமஸ் ஹார்வே மீது வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஐன்ஸ்டீன் மூளையை தான் வைத்துக் கொள்ள அவரது மகன் அனுமதி அளித்ததாக ஹார்வே கூறினார்!

இருந்த போதும் அவர் பணி நீக்கம் செய்யப் பட்டார். ஆனாலும் ஐன்ஸ்டீனின் மூளையை தானே வைத்து கொண்டார்.

இந்த நிலையில், ஐன்ஸ்டீன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகு அவரின் மூளையை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் ஹார்வேயிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஐன்ஸ்டீன் மூளையின் சில பகுதிகளைப் பரிசோதனைக்காக வழங்கினார்.

அதில் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டறிந்து உள்ளனர். சராசரி மனிதனைக் காட்டிலும் ஐன்ஸ்டீன் மூளை சிறியது என்றும், அதே சமயம் சராசரி மனிதனின் மூளையை விடவும் அடர்த்தியானது என்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்!

தற்போது ஐன்ஸ்டீன் மூளையின் 46 மெல்லிய அடுக்குகள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலடெல்பியாவின் முட்டர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதைப் பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஐன்ஸ்டீனின் மூளையை லென்ஸ் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

20 முதல் 50 மைக்ரான் அளவு கொண்ட இந்த மூளையின் துகள்களை லென்ஸ் மூலமாகத்தான் பார்க்க முடியும். 20-ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மூளை ஐன்ஸ்டீனுடையது!!

13 மார்ச் 2021

மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டுகிறது

13.03.2021

கரு. ராஜா சுங்கை பூலோ: உங்கள் கட்டுரையைப் படித்தேன். கூடிய விரைவில் இந்த கட்டுரைகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெரிய நூலாகப் போட்டு விடுங்கள். உங்களுக்குப் பிறகு இது போன்ற கட்டுரைகளை எழுத இங்கே எழுத்தாளர்கள் இல்லை.

ஆகவே, கூடிய விரைவில் புத்தகம் வெளியாக வேண்டும். நம் சந்ததிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதை எல்லாம் மூடி மறைக்க ஓர் இனம் கங்கணம் கட்டிக் கொண்டு பேயாய் திரிகின்றது. கட்டுரை அருமை. பாராட்டுக்கள்.

மகேந்திர மணி காப்பார்: உண்மை... வரவேற்கிறோம்🙏

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க ராஜா. மிகச் சிரமப்பட்டுக் கட்டுரைகள் தயாரிக்கப் படுகின்றன. பல நூல்களைப் படித்து பல இணைய ஊடகங்களில் இருந்து பதிவுகளைச் சேகரித்து; பல நாடுகளின் பழம் பொருள் காப்பகங்களில் இருந்து பதிவுகளை மீட்டு எடுத்து... சற்று சிரமமே. ஒவ்வொரு நாளும் 6 - 8 மணி நேரம் பிடிக்கும்.

என் மனதில் நீண்ட நாட்களாக ஓர் ஆதங்கம். அதையும் சொல்லி விட்டீர்கள். நமக்குப் பிறகு யார் எடுத்துச் செய்யப் போகிறார்கள் எனும் ஆதங்கம் தான்.

அதனால் ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகு முன்னர் பிரார்த்தனையின் போது இறைவனிடம் ஒரு வேண்டுதல் வைப்பேன். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நோய் நொடி இல்லாமல் நகர வேண்டும்.

இயன்ற வரையில் மலாயா தமிழர்களைப் பற்றிய தகவல்களை மீட்டு எடுத்து ஆவணமாக்கிவிட வேண்டும். அவற்றை நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சீதனமாகக் கொடுத்துவிட்டுப் போக வேண்டும். இதுதான் என் ஆசை.

காசு பணம் புகழ் பதவி எதுவும் வேண்டாம். இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்தால் போதும்... வயதும் உயர்கிறது. செய்து முடித்துவிட வேண்டும். கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி 🙏🌻

ஜெயகோபாலன்: நான் மிகவும் வரவேற்கிறேன் ஐயா 🙏

தேவி சர: தங்கள் எண்ணம் போல் எல்லாம் அமையும் ஐயா... தங்களுக்காக எங்கள் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும்..🙏🏻

டத்தோ தெய்வீகன்: வணக்கம் தலைவரே. பணிகளிலேயே மிகவும் சிரமமான பணி, எழுதுவது. அதுவும் ஒவ்வொரு நாளும் ஆய்வுகள் பல செய்து, தகவல்கள் சரியானதா என்று சரிபார்த்து, பின்னர் எழுத்துப்பிழை, சொற்பிழை, வாக்கியப் பிழை, கருத்துப் பிழை என்பதை எல்லாம் சரிபார்த்து, குறித்த நேரத்திற்குள் எழுதி முடிப்பது சாதாரண பணியல்ல.

ஓய்வு இல்லாமல் ஓடுகின்ற நதியைப் போல, உங்களின் எழுத்துப் பணி,  ஆண்டுகள் பலவாக, தொடர்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது. உங்களின் முத்தான எழுத்துக்கள், எதிர்கால சந்ததியின் அறிவுக்கு வித்தாகவும், நெஞ்சுக்கு சத்தாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடரட்டும் உங்கள் பயணம். கலையட்டும் சமுதாயத்தின் நீண்ட சயனம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
நன்றிங்க ஐயா தெய்வீகன் அவர்களே. தாங்கள் சொல்வது மிகச் சரி. நம் இனத்துக்கு எதையாவது செய்து நிரந்தரமாக்கி விட்டுச் செல்ல வேண்டும் எனும் ஒரு தூண்டுதலே மூல காரணம்.

நாம் மறைந்த பின்னர் நம் சந்ததியினர் நம் வரலாறு தெரியாமல் வாயில்லா பூச்சிகளாக... அப்பாவிகளாக இருந்துவிடக் கூடாது. அதற்காக இப்போதே செய்து விடுவோம் எனும் உத்வேகம் உயிர்ப்பு பெறும் போது அசதி சோர்வு எல்லாம் ஏற்படுவது இல்லை ஐயா.

கொரோனா கட்டுப்பாடு தளர்ந்ததும் நூல்களை வரிசையாக வெளியிட்டு விடுவோம். மிக மிகக் குறைந்த விலையில் அனைத்துத் தமிழர்களின் வீடுகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணமாக அமைதல் வேண்டும்.  தாங்களும் முன் நின்று உதவி செய்ய வேண்டும். நன்றிங்க.

வெங்கடேசன்:
மிகவும் சிறப்பான செயல் வெற்றி நிச்சயம். இறைவன் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் ஐயா🙏🙏

செல்லையா செல்லம்: உங்கள் பணி தொய்வின்றி நடைபெற இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி. வணக்கம்



 

12 மார்ச் 2021

காற்று: சத்யா பிரான்சிஸ்

12.03.2021

உலகில் பரவியிருக்கும் காற்று
புரிந்து கொள்ள முடியாத அதிசயம்
கையில்  தொட்டுணர முடியாத அற்புதம்!
புயல் காற்றின் குரல்வலையை நெறிக்க முனைந்த
மாயக் கரங்கள் தோற்று விழுந்தன!..

காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத காற்று | காரணம் ஆயிரம்: குளிர் அடிக்காத  காற்று - hindutamil.in

கடலில் மீன் சுவாசிக்கும்
பருந்தும் ஆகாயத்தில் சுகராகம் வாசிக்கும்
பசும் காடுகளே மனிதனின்
நச்சுக்காற்றைத் தியாக விசுவாசத்துடன் சுவாசித்து பரிசுத்தத்தைப் பரப்புகிறது!

உலக உயிர்களுக்கு
காற்று இறைவன்!
காற்றில்லாத கோளங்கள்
இறை சுவாசமில்லாத நரகம்..!

புதையுண்ட கல்வெட்டுகளில்
கற்காலத்தை அறிந்த ஆய்வாளன்
ஆண்டவன் வயதைக் கணக்கிடுவதில்
படு தோல்வி..

மனித அறிவுக்கும்
விஞ்ஞானத் தொழில் நுட்பத்திற்கும்
காற்று சவால் தருகிறது..
அறிவியல் மனிதன்
இயற்கைக் காற்றை உற்பத்தி செய்வானா?

(மலேசியம்)

ஈபோர் தோட்டத்து இளவேனில் காலம்: ராதா பச்சையப்பன்

01.01.2021

பத்து தீகா ஈபோர் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். பள்ளிப் படிப்பும் அங்கு தான். நான் வசித்த தோட்டம் வெள்ளைகாரர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தோட்டம்தான்.  

ஈபோர் தோட்டத்தில் ஐந்து வரிசைகள் கொண்ட வீடுகள். தோட்டத்தில் முன்னூறுக்கும் மேல் மக்கள் வசித்து வந்தார்கள். வெள்ளக்காரர்களின் எஸ்டேட் என்பதால் சற்று சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.

தோட்ட மக்கள் குடியிருந்த வீட்டுப் பகுதிகளில் தினமும் கூட்டிப் பெருக்கி;  குப்பைகளை முறையாகப் பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி வைப்பார்கள். அதற்கு என்று மூன்று பேர் வேலை செய்தார்கள்.

வீட்டுப் பகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மெசின் போட்டு புற்களை வெட்டி விடுவார்கள். தோட்டத்தில் தமிழ், ஆங்கிலம், மலாய் போதிக்கும் பள்ளியும் இருந்தது. எங்களுக்கு ஆங்கிலம் போதித்தவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆவார்.

தோட்ட வீடு ஓர் அளவு வசதியானதே. இரண்டு அறைகள்; அடுப்புகள் கொண்ட சமையல் பகுதி. வீட்டின் உள்ளே குளியல் அறை; கழிவறை; நீர்க் குழாய்கள் கொண்டவை. மின்சார விளக்கு வசதியும் உண்டு.

அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் விளக்கைப் போட்டு விடுவார்கள். அப்புறம் காலை ஏழு மணிக்கு அடைத்து விடுவார்கள். மாலை ஏழு மணிக்கு மறுபடியும் திறந்து; இரவு பத்து மணிக்கு அடைத்து விடுவார்கள். எஸ்டேட்டில் திருமணம், திருவிழா, இறப்பு போன்ற நாட்களில் விடிய விடிய விளக்கு எரியும்.

மாடுகள் வளர்க்க எஸ்டேட் நிர்வாகமே மாட்டுக் கொட்டகை கட்டிக் கொடுத்தது. ஒரு கொட்டகைக்கு ஐம்பது காசு வீதம், ஒருவர் எத்தனை கொட்டகை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அவர்கள் சம்பளத்தில் இருந்து வெட்டிக் கொள்வார்கள். ஆடு வளர்ப்புக்குத் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

மாதத்தில் மூன்று சினிமாப் படம் காட்டுவார்கள். அதற்கும் நிர்வாகமே  தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பணத்தை வெட்டி திரைப் படக்காரரிடம்  கொடுத்து விடுவார்கள்.

வீட்டின் பின்புறம் இடம் உள்ளவர்கள் காய்கறித் தோட்டம் போட்டுக் கொள்வதும் உண்டு. சிலர் ஒதுக்குப் புறமான இடங்களில் காய்கறித் தோட்டம் போடுவதும் உண்டு. கோழி, ஈத்தை வளர்ப்பதும் உண்டு.

மாலையில் காற்பந்து, பூப்பந்து, விளையாடத் தோட்ட நிர்வாகம் வசதி செய்து கொடுத்து இருந்தது. இதில் டேவான் என்று சொல்லப்பட்ட நாடகக் கொட்டகையும் இருந்தது.

தோட்டத்தில் வேலை செயபவர்களின் குழந்தைகளைக் கவனித்துக்  கொள்ள ஆயா கொட்டகையும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாமார்களும் இருந்தார்கள். பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகமே பால்டின் வாங்கிக் கொடுத்து உதவி செய்தது.

தோட்டத்தில் சிறிய பெரிய இரண்டு கோயில்கள் இருந்தன. பெரிய கோயிலில் எல்லாச் சாமிகளும் இருக்கும். ஒரு பூசாரியும் இருப்பார். பெரிய  கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப் படும்.

திருவிழா என்றால் தோட்டமே ஒரே கோலாகலமாக இருக்கும். மூன்று நாட்களுக்கு  முன்பே ஆத்தாங்கரையில் சாமி அழைத்து; மஞ்சள் கயிற்றைச் சில ஆண்களின் கைகளில் கட்டி விடுவார்கள்.

காப்பு கட்டியவர்கள் மூன்று நாளும் கோவிலிலேயே தங்கி விடுவார்கள். வீட்டிற்குப்  போக மாட்டார்கள். எல்லார் வீட்டிற்கும் உறவினர்கள் வருவார்கள்.

திருவிழா தினத்தன்று கோயில் காவல் தெய்வத்துக்கு ஆட்டுக் கடா வெட்டிச் சமைப்பார்கள். மற்ற தெய்வச் சிலைகளைத் திரை போட்டு மூடி விடுவார்கள்.

திருவிழா அன்று தோட்ட நிர்வாகத்தின் வெள்ளைகாரத் துரைமார்களும், சின்னதுரை, கிராணிமார்களும் வந்து கோயில் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் சின்ன வயது பெண்களும்; குமரிப் பெண்களும்; அழகு தேவதைகளாகக் கோயிலுக்கு வருவார்கள். தலையில் மல்லி பூவோடும், விதம் விதமான கலரில் பாவாடை சட்டை, தாவணி, சேலை கோலத்தில் அழகுக் கோலங்களில் காட்சி தருவார்கள்.

யார் யார் வீட்டில் எவ்வளவு  நகைகள் இருக்கிறது என்பதை அன்றைய தினத்தில்  பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரவில் தேர் ஊர்வலம் வரும்.

ஒரு வருடம் தேர் ஊர்வலம் வரும்போது; சற்று இறக்கமான இடத்தில் வரும் போது  தேரின் தலைப் பாகம் கழன்று தேருடன் வருபவர்களின் மீது விழுந்து விட்டது.

பாதிப்பு அடைந்தவர்களில் ஒருவர் நல்ல எழுத்தாளர்; தமிழ்ப் பற்றாளர்; நாடறிந்தவர். அவர்தான் மணிவெள்ளையனார். நாங்கள் ஒரே வரிசை வீட்டில் உள்ளவர்கள். இப்போது அவர் இல்லை.

தோட்டத்தில் தீபாவளி வந்தால் பலகாரம் செய்ய ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதும் உண்டு. கெட்டி உருண்டை பிடிப்பதில் இரண்டு மூன்று பேர்கள் சேர்ந்து உதவிக் கொள்வார்கள்.

தோட்டத்தில் இறப்பு என்றால் அன்று யாருக்கும் வேலை இல்லை. அன்று இரவு  இறப்பு வீட்டில் பலர் கண்விழித்து இருப்பார்கள். தப்பு அடிப்பவர் இறந்தவரின் வாழ்ந்த கதையைப் பாட்டாகப் படிப்பார். கேட்கும் போது அழுகை அழுகையாக வரும்.

தோட்ட மக்களே ஒன்றுகூடி தங்கள் வீட்டுக் காரியமாகவே நினைத்துச் செய்வார்கள். இன்று போல் அன்று பெட்டி எதுவும் இல்லை. அழகாகப் பாடை செய்வார்கள். இப்போது ’பேக்கேச்’ என்று சொல்லி எல்லாவற்றையும் பூசாரியோ அல்லது குருக்களோ எடுத்து வந்து விடுகிறார்கள்.

இறந்தவருக்கு எண்ணெய் வைப்பவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது. வீட்டில்  சுபகாரியம் செய்யக் கூடாது என்பார்கள். முன்பு காலத்தில் தோட்ட மக்களே எல்லாச் சாங்கியங்களையும் செய்தார்கள்.  

இப்போது சாங்கியம் செய்பவர்கள் பலர்; அல்லது உறவினர்கள் பலர்; எண்ணெய் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். கடைசியில் ஒரு சிலரே வைத்துக் கொள்கிறார்கள்.  

முன்பு ஊருக்கு ஒருவராக இருந்த பூசாரிகள்; இன்று வீட்டுக்கு ஒரு பூசாரியாக  இருக்கிறார்கள். அன்று துக்கச் சோறு என்று சொல்லி மாமன் மச்சான் ஆக்கிப்  போட்டார்கள். இன்று ’கேட்டிரிங்’ என்று சொல்லிச் சமைத்துப் போடுகிறார்கள். காலம் செய்யும் கோலம்.

அன்று  தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்; தோட்டப் பள்ளியில் படித்தவர்கள் பலர்; இன்று ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பேச்சாளர்களாக, மருத்துவர்களாக, வக்கீல்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக நாடு முழுமைக்கும் பரவி உள்ளார்கள். அந்த வகையில் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் இப்போது நாடு போற்றும் அளவிற்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

மறைந்த மணிவெள்ளையனாரின் தம்பி துரைராஜ் தனியார் மருத்துவமனையில்  மருத்துவராக இன்றும் பணிபுரிகிறார்.

அண்மையில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை செய்த நான்கு மாணவ மணிகளும்; பத்து தீகா ஈபோர் தோட்டத் தமிழ் பள்ளியில் படித்தவர்கள் தான்.

2020 டிசம்பர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில் (WYIE) ITEX2020 Kuala Lumpur) ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அன்றைய காலத்தில் ரப்பர் மரக் காட்டில் பூத்தக் காளானுக்கும்; ஆயில்பாம் காட்டில் முளைத்த கீரைக்கும்; குளம், குட்டை, அல்லூரில் கிடைத்த மீனுக்கும் இருந்த ருசி இருக்கிறதே அது தனி ருசிதான்.  

அது ஓர் இளவேனில் காலம். மீண்டும் வராது. தோட்ட வாழ்க்கையே தனிதான். நானும் தோட்டத்தில் வாழ்ந்தவள் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன்.  

என்றும் உங்கள் சகோதரி ராதா பச்சையப்பன்.




கு.ச. இராமசாமி
(மலேசிய நண்பர் ஞாயிறு மலர் ஆசிரியர்): சகோதரியின் தோட்டக்கதை பழைய நினைவுகளைப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்தவன்தான்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் சகோதரி... அற்புதமான பதிவு. தோட்டப் புறத்தின் எதார்த்தமான சமூக வாழ்வியல் தன்மைகளை அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்குரிய பதிவு.

அத்துடன் நான் படித்துக் கொடுத்த மாணவி இப்படி இவ்வளவு அழகாகத் தமிழ் எழுதுகிறாரே என்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் ஆசிரியருக்கு இதைவிட ஒரு பெரிய சன்மானம் எதுவும் இல்லை. மிக்க நன்றிம்மா ராதா.

ஆங்கில மொழி ஆசிரியராகத் தான் ஈபோர் தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். ஆனால் தமிழ் மொழியோடு இணைந்து வாழ்ந்தேன். பலருக்கும் தெரியும். மறுபடியும் அந்தப் பள்ளியைப் போய்ப் பார்க்க வேண்டும். நெஞ்சுக்குள் மாமழை பொழிய வேண்டும்.





07 மார்ச் 2021

மலேசியத் தமிழ் காப்பகம் பற்றிய பொய்யுரைகள்

07.03.2021

பகிர்வு: குமரன் மாரிமுத்து

மலேசிய தமிழ் காப்பகத்தின் பொறுப்பாளர்களின் படங்களைப் போட்டு, அவர்களை இந்துமத எதிர்ப்பாளர்களாகவும்; அதிலும் அவர்களின் தனித் தமிழே ஓர் இந்து மத எதிர்ப்பு எனவும் பொய்யான அறிக்கை தயாரித்து பரப்பி இருக்கும் செயலானது மிக இழிவான கீழறுப்பும், குள்ள நரித் தனச் செயலும் ஆகும்.

பொங்கல் சமயம் சாரா  என்ற நிலையையும், தைப்புத்தாண்டு என்பது போதுமான வரலாற்று ஆதாரமும், அறிவியல் தகைவும் இல்லாதது என்றும், சமயம் சார்ந்த தூய தமிழர்கள் சிலர் முன்னெடுத்த கருத்து மோதலை; காத்திருந்த கூட்டம் ஒன்று தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொங்கல் கருத்தாடலுக்குள் புகுந்து தனித் தமிழுக்கு அதாவது தூய தமிழ் முன் எடுப்புக்கு, கீழறுப்பு செய்ய எழுந்துள்ள செயல், வன்மையாக கண்டிக்கத் தக்கது.

இவர்கள் செய்வது மிகக் கேவலமான தனிமனிதத் தாக்குதலும், தனிமனித வளர்ச்சி கீழறுப்புமாகும். இது அறிவுடையோர் செயலே அல்ல.

அறிவுடையோர் தங்கள் அடையாளத்தைத் தெளிவாக முன்னிறுத்தி அறிவு வாதத்தில் அதாவது கருத்துக்கு கருத்தை முன் வைத்து மட்டுமே பேசுவர். இப்படி  கீழிறங்கி அடையாளத்தை மறைத்துக் கொண்டு தனிமனித தாக்குதலுக்கும், கீழறுப்புக்கும் போகவே மாட்டார்கள்.

இதில் இருந்தே இந்த பரப்புரையை செய்து இருப்பவர்கள் எவ்வளவு இழிவான கோழைகள் என்பது புலப்படும்.

மேலும் இவர்கள் சமயத்திற்கு புறம்பானவர்கள் அல்லது சமய நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பொய் பரப்புரை செய்து இருப்பவர்கள்; உண்மையில் மிக தீவிரமான சமயப் பற்றும், நாள் தவறாமல் முறையான இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்களும் ஆகும் என்பதை நான் மெய்ப்பட அறிவேன்.

இந்தb பொய் பரப்புரையாளர்கள் சமயம் என்ற பெயரில் தமிழ்ப் பற்றாளர்களை அவர்களின் தமிழ் முன் எடுப்புகளை இந்த நாட்டில் முடக்கிவிட திட்டம் தீட்டி இருப்பதாகவே நம்மை சந்தேகிக்க வைக்கிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பது போல், பொங்கல் கருத்தாடலை அப்படியே திசை திருப்பி தமிழ் காப்பகம் என்ற அமைப்பும், தமிழ் முன் எடுப்பும், இந்து மத எதிர்ப்பு என்பது போல், மலேசிய தமிழ் இந்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறது இந்தக் கூட்டம்.

மலேசிய இந்துத் தமிழர் என்பவர் தமிழைப் பேசி, தமிழை உயிராக மதித்து, தனித் தமிழை வளர்க்கத் துணை நிற்கும் தமிழர் கூட்டமே.

இவர்களின் பிள்ளைகள் தான் தமிழ்ப் பள்ளியில் பயிலும் குடும்பத்தார். தமிழ் காப்பகம் என்பதை எப்போதுமே தமிழ் மக்கள் ஆதரித்தே நிற்கிறோம். அதன் ஒரு கருத்தியலை மாற்றிக் கொள்ள கருத்து மோதல் நடந்தது அவ்வளவு தான்.

ஆனால் தமிழ் காப்பமே வேண்டாம் என்றும் அதை அழித்து விடும் நோக்கமும் கொண்டு இந்தச் சதிகாரக் கூட்டம் செயல்படுகிறது.

எந்த தமிழ்ப்பள்ளியின் தமிழ் அடையாளத்துக்கும் உதவாத இந்தக் கூட்டம். அதைக் கீழறுக்கக் காலம் பார்த்து இருந்து இப்போது இந்து சமயம் என்ற பெயரில் சில தீய சக்திகள், தூய தமிழ் பற்றாளர்களுக்கு இடையில் நடந்த (பொங்கல் கருத்து பகிர்வு முடிந்து விட்டது) 'பொங்கல் சமயம் சாரா' கருத்து மோதலை தனக்கு சாதகமாக திசை திருப்பி தமிழையும், தமிழ் பள்ளிகளையும் தமிழ் சமுதாயத்தையும் சதி வலைக்குள் சிக்க வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.

இதை மலேசிய தமிழ் இந்துக்கள் 'தமிழ் எங்கள் உயிர்' என்ற நிலையில்  அனுமதிக்கவே முடியாது.

தனித்தமிழ் என்பது தூய சைவ நெஞ்சராகிய மறைமலை அடிகளார் தொடங்கி வைத்த தமிழ் சக்தி. அது தமிழை தகவமைக்கும் மாபெரும் சக்தி. எந்தப் பெயரிலும் தனித் தமிழுக்கு எதிராக சதி வேலை செய்வதை உண்மையான ஒவ்வொரு மலேசிய இந்துத் தமிழனும் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒப்புக் கொள்ளவும் கூடாது.

காரணம் தமிழை இழந்த சமயம் தமிழருக்கு இல்லை. அது சைவமோ, கௌமாரமோ, காணாதி பத்தியமோ சாக்தமோ, மாலியமோ எதுவாயினும் அது தமிழோடு இணைந்து தமிழர்க்கு வாய்த்து நிற்பதே உண்மை.

அயல் மொழியில் தமிழன் சமயம் வளர்ப்பதும், அயல் மரபு தழுவுவதும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை விட்டு, மலேசியத் தமிழர் விலகவே கூடாது. தனித் தமிழின் எதிரிகள் உறுதியாக தமிழ் முருகனுக்கும், முதல் தமிழ் சங்க தலைவனாய் அமர்ந்த சிவத்திற்கும், தமிழ் வளர்த்த மதுரையம்பதி நாயகி அம்மை மினாட்சிக்கும் பகைவர்களே.

தமிழுக்கு எதிராகச் சதி செய்யும் இந்தக் கூட்டம் உறுதியாக எமது இறைமைக்கும் எதிரான பகைவர்களை. இந்த தமிழ்ப் பகைவர்களை மலேசிய தமிழ் இந்துக்கள் ஒரு முகமாய் புறந்தள்ள வேண்டும்.

-ஞெளிரன்