07.03.2021
பகிர்வு: குமரன் மாரிமுத்து
மலேசிய தமிழ் காப்பகத்தின் பொறுப்பாளர்களின் படங்களைப் போட்டு, அவர்களை இந்துமத எதிர்ப்பாளர்களாகவும்; அதிலும் அவர்களின் தனித் தமிழே ஓர் இந்து மத எதிர்ப்பு எனவும் பொய்யான அறிக்கை தயாரித்து பரப்பி இருக்கும் செயலானது மிக இழிவான கீழறுப்பும், குள்ள நரித் தனச் செயலும் ஆகும்.
பொங்கல் சமயம் சாரா என்ற நிலையையும், தைப்புத்தாண்டு என்பது போதுமான வரலாற்று ஆதாரமும், அறிவியல் தகைவும் இல்லாதது என்றும், சமயம் சார்ந்த தூய தமிழர்கள் சிலர் முன்னெடுத்த கருத்து மோதலை; காத்திருந்த கூட்டம் ஒன்று தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பொங்கல் கருத்தாடலுக்குள் புகுந்து தனித் தமிழுக்கு அதாவது தூய தமிழ் முன் எடுப்புக்கு, கீழறுப்பு செய்ய எழுந்துள்ள செயல், வன்மையாக கண்டிக்கத் தக்கது.
இவர்கள் செய்வது மிகக் கேவலமான தனிமனிதத் தாக்குதலும், தனிமனித வளர்ச்சி கீழறுப்புமாகும். இது அறிவுடையோர் செயலே அல்ல.
அறிவுடையோர் தங்கள் அடையாளத்தைத் தெளிவாக முன்னிறுத்தி அறிவு வாதத்தில் அதாவது கருத்துக்கு கருத்தை முன் வைத்து மட்டுமே பேசுவர். இப்படி கீழிறங்கி அடையாளத்தை மறைத்துக் கொண்டு தனிமனித தாக்குதலுக்கும், கீழறுப்புக்கும் போகவே மாட்டார்கள்.
இதில் இருந்தே இந்த பரப்புரையை செய்து இருப்பவர்கள் எவ்வளவு இழிவான கோழைகள் என்பது புலப்படும்.
மேலும் இவர்கள் சமயத்திற்கு புறம்பானவர்கள் அல்லது சமய நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பொய் பரப்புரை செய்து இருப்பவர்கள்; உண்மையில் மிக தீவிரமான சமயப் பற்றும், நாள் தவறாமல் முறையான இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்களும் ஆகும் என்பதை நான் மெய்ப்பட அறிவேன்.
இந்தb பொய் பரப்புரையாளர்கள் சமயம் என்ற பெயரில் தமிழ்ப் பற்றாளர்களை அவர்களின் தமிழ் முன் எடுப்புகளை இந்த நாட்டில் முடக்கிவிட திட்டம் தீட்டி இருப்பதாகவே நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பது போல், பொங்கல் கருத்தாடலை அப்படியே திசை திருப்பி தமிழ் காப்பகம் என்ற அமைப்பும், தமிழ் முன் எடுப்பும், இந்து மத எதிர்ப்பு என்பது போல், மலேசிய தமிழ் இந்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறது இந்தக் கூட்டம்.
மலேசிய இந்துத் தமிழர் என்பவர் தமிழைப் பேசி, தமிழை உயிராக மதித்து, தனித் தமிழை வளர்க்கத் துணை நிற்கும் தமிழர் கூட்டமே.
இவர்களின் பிள்ளைகள் தான் தமிழ்ப் பள்ளியில் பயிலும் குடும்பத்தார். தமிழ் காப்பகம் என்பதை எப்போதுமே தமிழ் மக்கள் ஆதரித்தே நிற்கிறோம். அதன் ஒரு கருத்தியலை மாற்றிக் கொள்ள கருத்து மோதல் நடந்தது அவ்வளவு தான்.
ஆனால் தமிழ் காப்பமே வேண்டாம் என்றும் அதை அழித்து விடும் நோக்கமும் கொண்டு இந்தச் சதிகாரக் கூட்டம் செயல்படுகிறது.
எந்த தமிழ்ப்பள்ளியின் தமிழ் அடையாளத்துக்கும் உதவாத இந்தக் கூட்டம். அதைக் கீழறுக்கக் காலம் பார்த்து இருந்து இப்போது இந்து சமயம் என்ற பெயரில் சில தீய சக்திகள், தூய தமிழ் பற்றாளர்களுக்கு இடையில் நடந்த (பொங்கல் கருத்து பகிர்வு முடிந்து விட்டது) 'பொங்கல் சமயம் சாரா' கருத்து மோதலை தனக்கு சாதகமாக திசை திருப்பி தமிழையும், தமிழ் பள்ளிகளையும் தமிழ் சமுதாயத்தையும் சதி வலைக்குள் சிக்க வைக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.
இதை மலேசிய தமிழ் இந்துக்கள் 'தமிழ் எங்கள் உயிர்' என்ற நிலையில் அனுமதிக்கவே முடியாது.
தனித்தமிழ் என்பது தூய சைவ நெஞ்சராகிய மறைமலை அடிகளார் தொடங்கி வைத்த தமிழ் சக்தி. அது தமிழை தகவமைக்கும் மாபெரும் சக்தி. எந்தப் பெயரிலும் தனித் தமிழுக்கு எதிராக சதி வேலை செய்வதை உண்மையான ஒவ்வொரு மலேசிய இந்துத் தமிழனும் ஒப்புக் கொள்ளவே மாட்டார். ஒப்புக் கொள்ளவும் கூடாது.
காரணம் தமிழை இழந்த சமயம் தமிழருக்கு இல்லை. அது சைவமோ, கௌமாரமோ, காணாதி பத்தியமோ சாக்தமோ, மாலியமோ எதுவாயினும் அது தமிழோடு இணைந்து தமிழர்க்கு வாய்த்து நிற்பதே உண்மை.
அயல் மொழியில் தமிழன் சமயம் வளர்ப்பதும், அயல் மரபு தழுவுவதும் ஒன்றே என்ற நிலைப்பாட்டை விட்டு, மலேசியத் தமிழர் விலகவே கூடாது. தனித் தமிழின் எதிரிகள் உறுதியாக தமிழ் முருகனுக்கும், முதல் தமிழ் சங்க தலைவனாய் அமர்ந்த சிவத்திற்கும், தமிழ் வளர்த்த மதுரையம்பதி நாயகி அம்மை மினாட்சிக்கும் பகைவர்களே.
தமிழுக்கு எதிராகச் சதி செய்யும் இந்தக் கூட்டம் உறுதியாக எமது இறைமைக்கும் எதிரான பகைவர்களை. இந்த தமிழ்ப் பகைவர்களை மலேசிய தமிழ் இந்துக்கள் ஒரு முகமாய் புறந்தள்ள வேண்டும்.
-ஞெளிரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக