01.01.2021
பத்து தீகா ஈபோர் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவள். பள்ளிப் படிப்பும் அங்கு தான். நான் வசித்த தோட்டம் வெள்ளைகாரர்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தோட்டம்தான்.
ஈபோர் தோட்டத்தில் ஐந்து வரிசைகள் கொண்ட வீடுகள். தோட்டத்தில் முன்னூறுக்கும் மேல் மக்கள் வசித்து வந்தார்கள். வெள்ளக்காரர்களின் எஸ்டேட் என்பதால் சற்று சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும்.
தோட்ட மக்கள் குடியிருந்த வீட்டுப் பகுதிகளில் தினமும் கூட்டிப் பெருக்கி; குப்பைகளை முறையாகப் பெரிய குப்பைத் தொட்டியில் கொட்டி வைப்பார்கள். அதற்கு என்று மூன்று பேர் வேலை செய்தார்கள்.
வீட்டுப் பகுதியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மெசின் போட்டு புற்களை வெட்டி விடுவார்கள். தோட்டத்தில் தமிழ், ஆங்கிலம், மலாய் போதிக்கும் பள்ளியும் இருந்தது. எங்களுக்கு ஆங்கிலம் போதித்தவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் ஆவார்.
தோட்ட வீடு ஓர் அளவு வசதியானதே. இரண்டு அறைகள்; அடுப்புகள் கொண்ட சமையல் பகுதி. வீட்டின் உள்ளே குளியல் அறை; கழிவறை; நீர்க் குழாய்கள் கொண்டவை. மின்சார விளக்கு வசதியும் உண்டு.
அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் விளக்கைப் போட்டு விடுவார்கள். அப்புறம் காலை ஏழு மணிக்கு அடைத்து விடுவார்கள். மாலை ஏழு மணிக்கு மறுபடியும் திறந்து; இரவு பத்து மணிக்கு அடைத்து விடுவார்கள். எஸ்டேட்டில் திருமணம், திருவிழா, இறப்பு போன்ற நாட்களில் விடிய விடிய விளக்கு எரியும்.
மாடுகள் வளர்க்க எஸ்டேட் நிர்வாகமே மாட்டுக் கொட்டகை கட்டிக் கொடுத்தது. ஒரு கொட்டகைக்கு ஐம்பது காசு வீதம், ஒருவர் எத்தனை கொட்டகை வேண்டும் என்றாலும் எடுத்து கொள்ளலாம். அதற்கான பணத்தை அவர்கள் சம்பளத்தில் இருந்து வெட்டிக் கொள்வார்கள். ஆடு வளர்ப்புக்குத் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.
மாதத்தில் மூன்று சினிமாப் படம் காட்டுவார்கள். அதற்கும் நிர்வாகமே தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பணத்தை வெட்டி திரைப் படக்காரரிடம் கொடுத்து விடுவார்கள்.
வீட்டின் பின்புறம் இடம் உள்ளவர்கள் காய்கறித் தோட்டம் போட்டுக் கொள்வதும் உண்டு. சிலர் ஒதுக்குப் புறமான இடங்களில் காய்கறித் தோட்டம் போடுவதும் உண்டு. கோழி, ஈத்தை வளர்ப்பதும் உண்டு.
மாலையில் காற்பந்து, பூப்பந்து, விளையாடத் தோட்ட நிர்வாகம் வசதி செய்து கொடுத்து இருந்தது. இதில் டேவான் என்று சொல்லப்பட்ட நாடகக் கொட்டகையும் இருந்தது.
தோட்டத்தில் வேலை செயபவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள ஆயா கொட்டகையும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆயாமார்களும் இருந்தார்கள். பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகமே பால்டின் வாங்கிக் கொடுத்து உதவி செய்தது.
தோட்டத்தில் சிறிய பெரிய இரண்டு கோயில்கள் இருந்தன. பெரிய கோயிலில் எல்லாச் சாமிகளும் இருக்கும். ஒரு பூசாரியும் இருப்பார். பெரிய கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா கொண்டாடப் படும்.
திருவிழா என்றால் தோட்டமே ஒரே கோலாகலமாக இருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பே ஆத்தாங்கரையில் சாமி அழைத்து; மஞ்சள் கயிற்றைச் சில ஆண்களின் கைகளில் கட்டி விடுவார்கள்.
காப்பு கட்டியவர்கள் மூன்று நாளும் கோவிலிலேயே தங்கி விடுவார்கள். வீட்டிற்குப் போக மாட்டார்கள். எல்லார் வீட்டிற்கும் உறவினர்கள் வருவார்கள்.
திருவிழா தினத்தன்று கோயில் காவல் தெய்வத்துக்கு ஆட்டுக் கடா வெட்டிச் சமைப்பார்கள். மற்ற தெய்வச் சிலைகளைத் திரை போட்டு மூடி விடுவார்கள்.
திருவிழா அன்று தோட்ட நிர்வாகத்தின் வெள்ளைகாரத் துரைமார்களும், சின்னதுரை, கிராணிமார்களும் வந்து கோயில் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் சின்ன வயது பெண்களும்; குமரிப் பெண்களும்; அழகு தேவதைகளாகக் கோயிலுக்கு வருவார்கள். தலையில் மல்லி பூவோடும், விதம் விதமான கலரில் பாவாடை சட்டை, தாவணி, சேலை கோலத்தில் அழகுக் கோலங்களில் காட்சி தருவார்கள்.
யார் யார் வீட்டில் எவ்வளவு நகைகள் இருக்கிறது என்பதை அன்றைய தினத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரவில் தேர் ஊர்வலம் வரும்.
ஒரு வருடம் தேர் ஊர்வலம் வரும்போது; சற்று இறக்கமான இடத்தில் வரும் போது தேரின் தலைப் பாகம் கழன்று தேருடன் வருபவர்களின் மீது விழுந்து விட்டது.
பாதிப்பு அடைந்தவர்களில் ஒருவர் நல்ல எழுத்தாளர்; தமிழ்ப் பற்றாளர்; நாடறிந்தவர். அவர்தான் மணிவெள்ளையனார். நாங்கள் ஒரே வரிசை வீட்டில் உள்ளவர்கள். இப்போது அவர் இல்லை.
தோட்டத்தில் தீபாவளி வந்தால் பலகாரம் செய்ய ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதும் உண்டு. கெட்டி உருண்டை பிடிப்பதில் இரண்டு மூன்று பேர்கள் சேர்ந்து உதவிக் கொள்வார்கள்.
தோட்டத்தில் இறப்பு என்றால் அன்று யாருக்கும் வேலை இல்லை. அன்று இரவு இறப்பு வீட்டில் பலர் கண்விழித்து இருப்பார்கள். தப்பு அடிப்பவர் இறந்தவரின் வாழ்ந்த கதையைப் பாட்டாகப் படிப்பார். கேட்கும் போது அழுகை அழுகையாக வரும்.
தோட்ட மக்களே ஒன்றுகூடி தங்கள் வீட்டுக் காரியமாகவே நினைத்துச் செய்வார்கள். இன்று போல் அன்று பெட்டி எதுவும் இல்லை. அழகாகப் பாடை செய்வார்கள். இப்போது ’பேக்கேச்’ என்று சொல்லி எல்லாவற்றையும் பூசாரியோ அல்லது குருக்களோ எடுத்து வந்து விடுகிறார்கள்.
இறந்தவருக்கு எண்ணெய் வைப்பவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது. வீட்டில் சுபகாரியம் செய்யக் கூடாது என்பார்கள். முன்பு காலத்தில் தோட்ட மக்களே எல்லாச் சாங்கியங்களையும் செய்தார்கள்.
இப்போது சாங்கியம் செய்பவர்கள் பலர்; அல்லது உறவினர்கள் பலர்; எண்ணெய் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். கடைசியில் ஒரு சிலரே வைத்துக் கொள்கிறார்கள்.
முன்பு ஊருக்கு ஒருவராக இருந்த பூசாரிகள்; இன்று வீட்டுக்கு ஒரு பூசாரியாக இருக்கிறார்கள். அன்று துக்கச் சோறு என்று சொல்லி மாமன் மச்சான் ஆக்கிப் போட்டார்கள். இன்று ’கேட்டிரிங்’ என்று சொல்லிச் சமைத்துப் போடுகிறார்கள். காலம் செய்யும் கோலம்.
அன்று தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்; தோட்டப் பள்ளியில் படித்தவர்கள் பலர்; இன்று ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, பேச்சாளர்களாக, மருத்துவர்களாக, வக்கீல்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக நாடு முழுமைக்கும் பரவி உள்ளார்கள். அந்த வகையில் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் இப்போது நாடு போற்றும் அளவிற்கு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
மறைந்த மணிவெள்ளையனாரின் தம்பி துரைராஜ் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இன்றும் பணிபுரிகிறார்.
அண்மையில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை செய்த நான்கு மாணவ மணிகளும்; பத்து தீகா ஈபோர் தோட்டத் தமிழ் பள்ளியில் படித்தவர்கள் தான்.
2020 டிசம்பர் மாதம் தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெற்ற உலக இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில் (WYIE) ITEX2020 Kuala Lumpur) ஈபோர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
அன்றைய காலத்தில் ரப்பர் மரக் காட்டில் பூத்தக் காளானுக்கும்; ஆயில்பாம் காட்டில் முளைத்த கீரைக்கும்; குளம், குட்டை, அல்லூரில் கிடைத்த மீனுக்கும் இருந்த ருசி இருக்கிறதே அது தனி ருசிதான்.
அது ஓர் இளவேனில் காலம். மீண்டும் வராது. தோட்ட வாழ்க்கையே தனிதான். நானும் தோட்டத்தில் வாழ்ந்தவள் என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன்.
என்றும் உங்கள் சகோதரி ராதா பச்சையப்பன்.
கு.ச. இராமசாமி (மலேசிய நண்பர் ஞாயிறு மலர் ஆசிரியர்): சகோதரியின் தோட்டக்கதை பழைய நினைவுகளைப் புரட்டிப் போட்டது. ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்தவன்தான்.
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: வணக்கம் சகோதரி... அற்புதமான பதிவு. தோட்டப் புறத்தின் எதார்த்தமான சமூக வாழ்வியல் தன்மைகளை அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்குரிய பதிவு.
அத்துடன் நான் படித்துக் கொடுத்த மாணவி இப்படி இவ்வளவு அழகாகத் தமிழ் எழுதுகிறாரே என்று மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் ஆசிரியருக்கு இதைவிட ஒரு பெரிய சன்மானம் எதுவும் இல்லை. மிக்க நன்றிம்மா ராதா.
ஆங்கில மொழி ஆசிரியராகத் தான் ஈபோர் தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். ஆனால் தமிழ் மொழியோடு இணைந்து வாழ்ந்தேன். பலருக்கும் தெரியும். மறுபடியும் அந்தப் பள்ளியைப் போய்ப் பார்க்க வேண்டும். நெஞ்சுக்குள் மாமழை பொழிய வேண்டும்.
வாழ்த்துகள் சகோதரி இராதா....👌
பதிலளிநீக்குதோட்டபுரத்து வாழ்கையை நினைத்து என்
அம்மா ஏங்கி இருக்கிறார் .மீண்டும் மரம்
வெட்டனும் ,கான்டா கம்பு போட்டு வாளி
தூக்கனும் என்று சொல்லுவார் .
ஆனால் அவர் ஆசையை எங்களால்
நிறைவேற்ற முடியவில்லை .அம்மாவும்
இயற்கை ஏய்திவிட்டார்.😢. நீங்கள்
சொல்லும் போது அந்த தோட்டத்து வாழ்கை
பசுமை காலங்களாக அம்மா
மனதில் இருந்திருப்பதை உணருகிறேன்.
இதோ உங்கள் பசுமை காலங்களை ஐயா
அழியாத சுவடுகளாக செய்து கொடுத்து இருக்கிறார்.🙏...
வாட்ஸ் அப் ஊடகத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள் கொஞ்ச நாள்களில் காணாமல் போய்விடும். இணையத் தளத்தில் பதிவு செய்து விட்டால் காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும். நன்றிம்மா தேவிசர...
நீக்கு