05.02.2021
பதிவு செய்தவர் - பி.கே.குமார், ஈப்போ
மீண்டும் ஓர் எச்சரிக்கை மணி - குமரன் வேலு
தமிழ்ப் பள்ளிகளில் 2021 முதலாம் ஆண்டுக்குப் பதிந்த மாணவர் எண்ணிக்கையிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையிலும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.
எண்ணிக்கையில் தொடர் சரிவுகள் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
1. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்டப் பள்ளிகள் மூடுவிழா காணும்.
2. புதிய ஆசிரியர்கள் வேலைக்கு சேர்க்கப்பட மாட்டார்கள்.
3. சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தேசியப்பள்ளிக்கு இடம்மாற வேண்டியது வரும்.
4. தலைமை ஆசிரியர் மற்றும் துணைத்தலைமை ஆசிரியர் பதவிகள் பறிபோகும்.
ஆண்டு - முதலாம் ஆண்டு - மொத்தம்
2018 13771 81583
2019 13281 81420
2020 12578 80743
2021 12489 79 870
2019 ஆம் ஆண்டை விடவும் 2020-இல் 683 குறைந்து; கடந்த 2020-ஆண்டை விடவும் 2021-இல் 873 மாணவர்கள் குறைந்து விட்டனர். 2020-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 369 பள்ளிகள் நகர்ப் புறங்களில் இருக்கின்றன. 158 பள்ளிகள் கிராமபுறப் பள்ளிகள்.
நகரம் - புறநகரம் - மொத்தம்
பள்ளிகள் - (நகரம்) 369 - (புறநகரம்) 158 - (மொத்தம்) 527
மாணவர் - (நகரம்) 72,891 - (புறநகரம்) 17,852 - (மொத்தம்) 80743
(மேல்காணும் தரவு கல்வியமைச்சின் கல்வி ஆய்வுத் திட்டப் பிரிவால் வெளியிடப்பட்டது)
90 விழுக்காடு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நகர்ப்புறங்களில் இருக்கின்றனர். வெறும் 10 விழுக்காடு மட்டுமே கிராமபுறத்தைச் சேர்ந்தவர்கள்.
நகர்ப் புறங்களில் புதிய பள்ளிகளை நிருமாணிப்பதும், கிராமப்புறப் பள்ளிகளை நகர்ப் புறத்திற்கு இடம் பெயர்த்தலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஓரளவு வழிகோலும். மறுப்பதற்கு இல்லை.
ஆனால், தரவுகளின் இயல்பைப் பார்க்கும் பொழுது மாணவர் எண்ணிக்கையின் சரிவுக்கு நம்மினத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதே முக்கியக் காரணம் என்பது என்னுடைய தெளிவு.
வீட்டிற்கு 7 - 8 குழந்தைகள் இருந்த காலம் மலையேறி இப்பொழுது 2 - 3 என்றாகி விட்டது. வாழ்க்கை செலவினமும் கல்விச் செலவினமும் அதிகரிக்க அதிகரிக்க பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை தவிர்த்து வருகிறது நமது இனம்.
இது தொடர்பாகக் கடந்த ஆண்டில் ஓர் பதிவைச் செய்திருந்தேன். அப்பொழுதே எச்சரித்தேன். மக்கள் தொகையில் ஏற்படும் வீழ்ச்சி, நமக்கு அரசியல், கல்வி, பொருளாதார ரீதியாக எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
இதே நிலைமை நீடித்தால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பதிந்திருப்பர் என்பதை ஓரளவுக்கு கணித ரீதியாக அனுமானிக்கலாம்.
Nt = P x e ^ ( rt)
t = ஆண்டுகள்
P = மக்கள் தொகை (நடப்பு ஆண்டில்)
r = மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம்
2020 (நடப்பு ஆண்டு) மாணவர் எண்ணிக்கை = 80743
t = 30 ஆண்டுகள் (2050-இல்)
ஆண்டுக்கு சராசரியாக 700 மாணவர்கள் குறைந்து வருவதாக எண்ணிக் கொள்வோம் (தரவுகள் அவ்வாறே காட்டுகின்றன).
அதனால், மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் -700/80, 743= - 0.867% (-) மாணவர் எண்ணிக்கை குறைகிறது என்று பொருள்
r = - 0.867%= 0.00876
e = 2.718 (மாறிலி)
N = 80743 x (2.718) ^ ( -0.00876x30) = 61, 875
2030 ஆண்டுவாக்கில் நமது மாணவர் எண்ணிக்கை 61000 ஆக குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
ஏறக்குறைய 20,000 மாணவர்களை இழக்க நேரிடும். பின்பு, 30 மாணவருக்கு ஓர் வகுப்பறை என்றால், ~700 வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு:
1. தேசியப் பள்ளிக்கு போய்க் கொண்டிருக்கும் மாணவர்களைத் தமிழ்ப்பள்ளிப் பக்கம் திருப்ப வேண்டும். அப்படி வரும் போது புதிய வசதியான பள்ளிக்கூடங்கள் தேவைப்படும். புதிய தமிழ்ப் பள்ளிகள் நகர்ப் புறங்களில் கட்டப்பட வேண்டும்.
2. இந்தியர்களின் பிறப்பு விகிதத்தில் ஏற்றம் ஏற்பட வேண்டும். வீட்டுக்கு 4-5 பேராவது குழந்தைகள் தேவை.
- குமரன் வேலு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக