06 பிப்ரவரி 2021

தமிழாக இருக்கட்டும்

05.02.2021

பதிவு செய்தவர் - மகேந்திரமணி, காப்பார்

தமிழைத் தெளிவாக உச்சரித்துப் பார்
உன் குரலில் ஒரு கம்பீரம் இருக்கும்
குரல் ஒலியில் ஒரு கர்வம் இருக்கும்
செவியில் செந்தனலாய் நிறையும்

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
எழுதிப் பார்... எழுத்துக்கள்
ஒவ்வொன்றும் ஓவியங்கள்

செந்தமிழை வாசித்தவன்
எம்மொழியும் வாசிக்கலாம்
செம்மொழியை நேசித்தவன்
செம்மையாக வாழலாம்

பைந்தமிழை வாசித்தவன்
பயம் இன்றி வாழலாம்
இசைத்தமிழ் பயின்றவன்
ஈரேழு உலகம் ஆளலாம்

முத்தமிழ் கற்றவன்
முக்தி பெற்றவன்

அறுசுவை உணவில் விருப்பமில்லை
அருந்தமிழ் இருக்க
ஆரோக்கியத்திற்கு குறைவில்லை
குறில் நெடில் மாத்திரை
என் குரலில் ஒலிக்க

அதிகாரம் நெடில்
அடக்கம் குறில்
தொடக்கம் குரல்
உலக அடக்கம் திருக்குறள்

தமிழில் பேசுங்கள்
தமிழில் எழுதுங்கள்
தாய் தந்தையைத் தான்
புதைத்து விடுகிறோம்
தாய்மொழியையும் புதைத்து விடாதீர்கள்

முதியோர்கள் தான் முதியோர் இல்லத்தில்
முதுமொழி யாவது இளையோர் உள்ளத்தில்
இருக்கட்டும் நிலையாக

நீ வசிப்பது தமிழ் மண்ணாக
வாசிப்பதும் நேசிப்பதும்
சுவாசிப்பதும் தமிழாக இருக்கட்டும்
முத்தமிழைச் சுவைப்போம்

பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
விதைத்திடு தமிழ் மொழி
விருட்சமாகட்டும்  தலைமுறை

படித்ததை பகிர்கிறேன்...✍️



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக