11 பிப்ரவரி 2021

தமிழ் மறவன் பாலன் முனியாண்டி

தமிழோடு வாழ்கின்ற தனித்துவமான தமிழர். இவரின் மூச்சு பேச்சு எல்லாம் தமிழ்; தமிழர்; தமிழிரினம்; தமிழ்ச் சமூகம்; தமிழ்ப்பள்ளிகள்.

மலேசியாவில் தமிழர்கள் சார்ந்த பெரும்பாலான சமூக நிகழ்வுகளில் சமூக ஆர்வலராய்ப் பயணிக்கின்றார். நல்ல ஓர் இனிமையான தமிழர்.

மலேசிய நாட்டின் மூத்த மரபுக் கவிஞர் ம.அ. சந்திரன். இவர் பாலன் முனியாண்டியின் தமிழ் உணர்வுகளின் பற்றுதலைக் கண்டு கனிந்து போனார். பாலன் முனியாண்டியின் சமூகச் செயல்பாடுகள் கவிஞரைப் பெரிதும் கவர்ந்து விட்டன.

கல்விமான்கள் புடை சூழ்ந்த ஒரு தமிழர் மாநாட்டு மேடையில் பாலன் முனியாண்டிக்கு ’தமிழ் மறவன்’ என்கிற விருதை வழங்கிச் சிறப்புச் செய்தார். நிறைமதிப் பதஞ்சலியின் சிகரத்தில் உச்சம் பார்க்கச் செய்தார்.    

பாலன் முனியாண்டி, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவர். பினாங்கில் மட்டும் அல்ல; கெடா, பெர்லிஸ், பேராக் மாநிலங்களிலும்; மலேசிய அளவிலும் அந்தக் கழகம் நன்கு அறியப்பட்ட கழகமாகும்.

உடல் ஊனமுற்றோர்; முதியவர்கள்; தனித்து வாழும் தாய்மார்கள்; திக்கற்றவர்கள்; இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்; அனாதையர் இல்லங்கள்; பி40 குடும்பங்கள்; வசதி குறைந்த பள்ளி மாணவர்கள்; சுத்த சமாஜங்கள்; ஆலயங்கள் என பற்பல சமூக அமைப்புகளுக்கு உதவிகள் செய்வதில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் முன்மாதிரியாய்த் திகழ்கின்றது.

பினாங்கு மாநில அரசாங்கத்துடன் நல்ல நட்புறவு பேணிப் பயணிக்கும் கழகம். மணிமணியான உதவியாளர்கள். முத்து முத்தான முதன்மைச் சேவையாளர்கள். அனைவரும் சேவைப் பயணங்களின் மறுபக்கங்கள்.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தின் செயல்பாட்டு விளிம்பு விழுமியங்களைப் பினாங்கிலும் காணலாம். செபராங் பிறை வட்டாரங்களிலும் காணலாம். கெடாவிலும் காணலாம். கடல் கடந்தும் காணலாம்.

கடந்த காலங்களில் எண்ணற்ற சமூகக் கலை நிகழ்ச்சிகளைப் படைத்த பெருமை இந்தக் கழகத்தினரைச் சாரும். தமிழர் சார்ந்த இலக்குகளில்; தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளில் முன் நின்று உதவிகள் செய்து வருகின்றார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்பது ஒரு முதுமொழி. காலம் அறிந்து; சமூகத்தின் நிலை அறிந்து; சேவை செய்பவர்களைத் தெய்வத்திற்குச் சமமாக ஒப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினரின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்யலாம். தவறு இல்லை. போற்றிப் பகரலாம். தப்பு இல்லை.

அண்மையில் 2020-ஆம் ஆண்டு, பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்கள் தீபாவளியை முன்னிட்டு; உடல் பேர் குறைந்தோர்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு  உதவிப் பொருட்களை வழங்கி அவர்களின் மனங்களில் நீங்காத இடங்களைப் பெற்று உள்ளார்கள்.

செய்த தர்மம் தலைகாக்கும்... தக்க சமயத்தில் உயிர் காக்கும்... இது நான்கு மறை தீர்ப்பு. இதற்கு ஏற்ப பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகம் தனித்து வாழும் தாய்மார்களுக்கான தீபாவளி அன்பளிப்பு (10.11.2020) பொருட்களை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது. வயதானவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி மனம் குளிரச் செய்து உள்ளது.

பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழக அன்பர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை மனப்பான்மைக்கு முதல் மரியாதை செய்வோம். தமிழர்ச் சமுதாயம் என்றைக்கும் அவர்களை நினைத்துப் பார்க்கும்.

அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் பெறலாம். அந்த உதவிகளை அடிமட்டத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமே. களம் இறங்கி காரியம் சாதிக்க வேண்டுமே. அங்கே தான் பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர் முன்னோடிகளாய் மிளிர்ந்து நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

அண்மைய காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கங்கள். அதன் காரணமாக மலேசியர்கள் பலர் வருமானத்தை இழந்து தவிக்கின்ற ஒரு காலக் கட்டம். அந்த வகையில் செபராங் ஜெயாவில் வாழும் தமிழ் மக்களுக்கு பினாங்கு மாநில இந்திய மேம்பாட்டு கழகத்தினர், உணவுப் பொருள்களை வழங்கி உதவிகள் செய்து உள்ளார்கள்.

*மலேசியம்* புலனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான தமிழ் மறவன் பாலன் முனியாண்டி அவர்களின் சேவை மனப்பான்மை தொய்வின்றித் தொடர வேண்டும்.

தமிழ் உலகில் அவர் பீடு நடை போட வேண்டும். தமிழ் மொழிச் சேவையில் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும். அவர் சார்ந்த கழகத்தினரின் அரிய சேவைகள் வெளி உலகிற்கு தெரிய வேண்டும்.

உள்ளார்ந்த நல்ல எண்ணங்கள். ஏழை எளியோர்க்கு வழிகாட்டும் அறப்பணிகள். பிறர் வாழ வகை செய்யும் அரும் முயற்சிகள். சேவைக் கலசங்களாய்ப் பயணிக்கும் கழகத்தினரை வழிநடத்தும் நல்ல ஒரு தலைவர். அந்தப் பாவனையில் பாலன் முனியாண்டி ஒரு பாலம் முனியாண்டி. வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.02.2021

 

2 கருத்துகள்: