10.01.2021
பதிவு செய்தவர்: பி.கே. குமார், ஈப்போ
பள்ளிசார் உருமாற்றம் (school based transformation)
ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றவாறு அலங்காரம் செய்து; அழகாகக் காட்சி அளிக்க எண்ணுவது இயல்பானது. அலங்காரமே வேண்டாம். அசிங்கமாய் இருப்பதே அழகு என்று இருந்தால் அது இயல்பானது அல்ல. அது இயலாமை அல்லது முயலாமை எனப்படும்.
அரசாங்கம் அடிப்படையை மட்டுமே கொடுக்கும். மற்றவற்றைப் பள்ளியே முயன்று அலங்கரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் ஒவ்வொன்ரும் உள்ளிருந்து உருமாற்றம் செய்யத் தயாராக வேண்டும்.
ஐந்து கூறுகளில் தரம் உயர உள்ளிருந்து முயல வேண்டும். அவையாவன:
1. தலைமைத்துவப் பண்பு
2. ஆசிரியர் தரம்
3. மாணவர் ஆளுமை
4. சமூக ஈடுபாடு (பெற்றோர், வாரியம், முன்னாள் மாணவர், சமுக இயக்கங்கள், பொதுமக்கள், அரசு தனியார் நிறுவனங்கள்)
5. கட்டமைப்பு வசதிகள்
1. தலைமைத்துவம்
நான் பலமுறை சொல்லி விட்டேன். தலைமைத்துவம் என்பது பதவி அல்ல. அது ஒரு தன்மை. பிறருக்காக (மக்கள்/ சமூகம்/ இனம்/ குடும்பம்/ கைவிடப் பட்டவர்கள்/ மாணவர்கள்) அவரின் வளர்ச்சிக்காகத் தானே முன்வந்து (யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல்) கடப்பாடுடன் கடமையை ஆற்றும் பண்புள்ளவர்கள் எல்லோரிடமும் தலைமைப் பண்பு உண்டு.
கொஞ்சம் திட்டமிடும் திறமையும்; திட்டமிட்டபடி மற்றவரையும் இணைத்துச் செயலாற்றும் திறனும்; எல்லோரையும் அணுசரித்து அரவணைக்கும் பண்பும் இருந்து விட்டால் மிகச் சிறந்த தலைமையாக உருவெடுக்கலாம்.
பள்ளி உள்ளிருந்து இந்தத் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் பணியைத் தலைமை ஆசிரியர்கள்தான் தொடங்க வேண்டும்.
அதாவது பள்ளியில் பணி புரியும் ஒவ்வோர் ஆசிரியரும் வேலை நேரம் என்பது சம்பளத்திற்கு செய்வது அல்ல; மாறாகப் பிறருக்குத் தொண்டு செய்யும்; பிறரின் வாழ்வின் உயர்வுக்கு உழைக்கும்; ஓர் உன்னதமான அறம் அல்லது தவம் போன்ற வாய்ப்பு; என்பதை உணரும் வகையில் தலைமை ஆசிரியர் முன்னுதாரணப் பணியாளராக மாற வேண்டும்.
எங்கே கடப்பாடும் அக்கறையும் தொண்டு உணர்வும் மிக்கச் செயல்பாடு வெளிப் படுகிறதோ அங்கு தலைமைப் பண்பு வெளிப்படுகிறது. இந்த அலங்காரத்தை பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் மட்டுமே செய்ய முடியும். இதுதான் முதல் உருமாற்றம். ஆசிரியரைக் கடப்பாடு மிக்கவராக மாற்றுவதுதான் முதல் உருமாற்றம்.
தலைமையாசிரியர்கள் பலர் இதில் கோட்டை விட்டு விடுகிறார்கள். ஆசிரியர்களே தலைமையாசிருக்கான பெரிய சவால்களாக மாறுகின்றனர்.
'பிறருக்காகத் தன் நேரம், திறமை, செயல், அனைத்தையும் அளவாகத் தியாகம் செய்யத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அந்தத் தலைமைத்துவப் பண்பை; ஆசிரியரின் உள்ளே மறைந்து உறங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பண்பை; குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்புவது போல் எழுப்பி விட வேண்டும்.
அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு. சிறுவயதில் இருந்தே ஆசிரியப் பணி அறப்பணி என்று சொல்லி வளர்க்கப் பட்டதாலோ என்னவோ பெரும்பாலும் ஆசிரியர்கள் மனசாட்சியும் நல்ல பண்பும் கொண்டவர்களே உள்ளனர்.
ஒரு சிலர் மட்டுமே குரங்குப் பிடிவாதமும் குதர்க்கமும் சட்டம் பேசும் குணமும் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
தலைமை ஆசிரியரின் முன்னுதாரணக் குணத்தாலும்; அன்பினாலும் இவர்களை மாற்ற முடியும். தலைமத்துவம் உள்ள ஆசிரியர்கள் வகுப்பறையில் பிறரின் நன்மைக்காக உழைக்க முன்வரும் தலைமைப் பண்பு மிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டும்.
classroom management வார்த்தையை விடவும் classroom leadership வார்த்தை வலிமை மிகுந்தது. பிறரைக் கண்காணித்து, அவரை நன்றாக வேலை வாங்குவது management.
பிறருக்காகத் தானே களத்தில் குதித்து பிறரோடு சேர்ந்து வழிநடத்தி பலரின் நலனுக்காக உழைப்பது leadership.
நம் சமுதாயத்தில் பதவியின் மூலம் பிறரை அதட்டி உருட்டி வேலை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர். அவர்களுக்குப் பதவியும் பட்டமும் அதிகாரமும் பணமும் தருபவை பதவிகள்.
இவர்கள் பெரும்பாலும் மானேஜர்கள். ஆனால் மாணவப் பருவத்தில் தலைமைப் பண்பை உணர்த்தினால் தான் எதிர்காலத்தில் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள தலைவர்களாக அவர்கள் மிளிர்வார்கள். சமுதாயமும் உறுப்படும்.
எனவே, வகுப்பறையில் மாணவரின் தலைமைப் பண்புகளை ஆசிரியர்கள் வடிவமைக்க வேண்டும். எப்படி?
பிறரின் நலத்திற்காக; தன் வகுப்பில் உள்ள சக நண்பனின் நன்மைக்காக; உலக மக்களின் நன்மைக்காக; இயற்கை வளங்களின் நன்மைக்காக; உயிரினங்களின் நன்மைக்காக; தான் போடும் திட்டம் என்ன; அதை சிறிய அளவில் செயலாக்கம் செய்து காட்டும் புரஜக்ட் (project) வடிவமைக்க மாணவரைப் பழக்க வேண்டும்.
இந்தத் தலைமைத்துவ அலங்காரத்தை உள்ளிருந்து பள்ளிகள் செய்ய வேண்டும். பள்ளிகள் சமூக மாற்றம் பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும். சிறந்த தலைமைத்துவம் நல்ல உலகத்தை உருவாக்கி எல்லோரும் வாழ வழி செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக