21 ஜனவரி 2021

கிறிஸ்தபர் ரீவ் தன்னம்பிக்கையின் மறுபெயர்

21.01.2021

சூப்பர் மேன் இவரைத் தெரியாதவர்கள் யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பில் கட்டிப் போட்டு வைத்த சாகச நாயகன்.

ஹாலிவுட் சூப்பர் மேன் பாத்திரத்தில் நடித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ், 80 - 90-ஆம் ஆண்டுகளின் கனவு நாயகன். ‘உலகின் பலசாலி’ என்று கொண்டாடப்பட்டவர். இவர் வாழ்விலும் நிறைய சோகங்கள்.

ஒரு விபத்து இவரை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விட்டது. திரையில் விண்ணில் பறந்து பல சாகசங்கள் செய்த இந்தத் துணிச்சல்கார மனிதர், அந்த விபத்துக்குப் பின் தனது சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார்.

அந்தச் சோதனையை ஏற்றுக் கொள்ள முடியாத கிறிஸ்டோபர், தற்கொலை முயற்சி வரை போனார். பின்னர் மனம் மாறி வாழ்க்கையில் துணிவோடு போராடவும் முடிவு செய்தார்.

கிறிஸ்டோபர் ரீவ் (Christopher D'Olier Reeve) (பிறப்பு: செப்டம்பர் 25, 1952 – மறைவு: அக்டோபர் 10, 2004) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர்; தயாரிப்பாளர்; திரைக் கதையாசிரியர்; எழுத்தாளர்.

1995-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி. அமெரிக்கா வெர்ஜீனியாவில் குதிரை மீது சாகசங்கள் செய்யும் போது எதிர்பாராத விபத்து.

திரையில் அட்டகாசமாக விண்ணில் பறந்த அவர் தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல். பின்னர் வாழ்க்கையில் பற்பல போராட்டங்கள். தன் உண்மையான வலிமையையும் திடத்தையும் உலகுக்குக் காட்டினார்.

தண்டுவட பாதிப்புகளால் ஏற்படும் நோய்கள் (Spinal-cord injury), செல் ஆய்வு (stem cell research), ஆகியவற்றின் ஆராய்ச்சிக்காக *கிறிஸ்டோபர் ரீவ் அறக்கட்டளை* மற்றும் *ரீவ் இர்வின் ஆராய்ச்சி மையம்* ஆகியவற்றை நிறுவி உள்ளார். உடற்குறை உடையோரின் நலனுக்காக நிதி திரட்டும் முயற்சிகளைத் தொடக்கி வைத்தார்.

அதற்கான நிதி உதவியும் செய்தார். 1998-இல் Still Me என்ற தலைப்பில்  தன் வரலாற்றை எழுதினார். உலகில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் அது இடம் பிடித்தது.

உலகுக்கு தன்னம்பிக்கை என்ற விலை மதிக்க முடியாத பண்பை பறைசாற்றினார். பல நிகழ்ச்சிகளில் உயிரை உருக்கும் வலியைப் பொறுத்துக் கொண்டு அவர் உதிர்த்த புன்னகையை உலகம் கலங்கிய கண்களோடு பார்த்தது.

கழுத்துக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாமல் கிட்டதட்ட காய்கறி போல் ஆகிவிட்டது அவரது உடல். ஆனால் உள்ளம் மட்டும் வலிமை குன்றாமல் இருந்தது.

கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் 'சூப்பர்மேன்' என்ற பெயருக்கு ஏற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக் காட்டினார். பல துவண்டு போன உள்ளங்களுக்கு உத்வேகத்தை அளித்தார். தம் தமது 52-ஆவது வயதில் காலமானார்.

கிறிஸ்டோபர் ரீவ் இறந்த பின்னர் அவர் உருவாக்கிய அறக் கட்டளையை அவருடைய மனைவி டானா ரீவ் ஏற்று நடத்தினார். அவரும் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 2006-ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.

*ரீவ்ஸ்*. இவர் மூலம் தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக் காட்டியவர்.

அவரது உடல் மறைந்து இருக்கலாம். ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி மட்டும் என்றும் மறையாது இருக்கும்.

(தொகுப்பு: மலேசியம்).


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக