12 ஜனவரி 2021

நீரிழிவு சிகிச்சை

11.01.2021

பதிவு செய்தவர்: கென்னடி ஆறுமுகம், கிரீக்

1922 ஜனவரி 11-ஆம் தேதி. இந்த நாளில்தான் இன்சுலின் (Insulin) முதன்முறையாக ஒரு மனித நோயாளிக்குச் செலுத்தப் பட்டது. கனடாவின் டொரண்ட்டோ பொது மருத்துவமனையில்; 14 வயது நீரிழிவு நோயாளிக்குச் செலுத்தப் பட்டது.

On January 11, 1922, Leonard Thompson, a 14-year-old diabetic who lay dying at the Toronto General Hospital, was given the first injection of insulin.

அந்தக் காலத்திலேயே, இளவயதில் நீரிழிவு இருந்து உள்ளது என்பதுடன், கி.மு.1500-ஆம் ஆண்டுகளில் எகிப்தில் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. அதே காலத்தில் இந்திய மருத்துவர்களும் மதுமேகம் என்ற பெயரில் இந்த நோயைக் குறிப்பிட்டுள்ளனர்.

கிமு 500 - 400-களில், சுஷ்ருதா, சாரகா ஆகிய இந்திய மருத்துவர்கள், இரு வகை நீரிழிவு உள்ளதைக் கண்டுபிடித்தார்கள். முதல்வகை இளமையோடும், இரண்டாம் வகை உடல் பருமனோடும் தொடர்புடையது என்றும் பதிவு செய்துள்ளனர்.

டயாபடீஸ் என்ற சொல் முதன்முறையாக கி.மு. 250-இல் கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வளவு நீண்ட வரலாறு இருந்தாலும், இந்த நோய்க்கான காரணத்தை அறிய முடியாமல் மருத்துவ உலகம் தவித்தது.

1889-இல் ஆஸ்கார் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வோன் மெரிங் ஆகியோர், நலமாக இருந்த ஒரு நாயின் உடலில் இருந்து கணையத்தை அகற்றிய போது, அதற்கு நீரிழிவு உண்டானதைக் கண்டு அறிந்தனர்.

1910-இல் எட்வர்ட் ஆல்பர்ட், நீரிழிவு நோயாளிகள் ஒரு குறிப்பிட்ட வேதிமத்தின் பற்றாக் குறையுடன் இருப்பதைக் கண்டறிந்து அதற்கு இன்சுலின் என்று பெயர் சூட்டினார்.  

1921-இல் பிரடரிக் பேண்ட்டிங் (Frederick Banting); சார்லஸ் பெஸ்ட் (Charles Herbert Best) ஆகியோர் மின்கோவிஸ்கியின் சோதனையைத் தலைகீழாகச் செய்து, அதாவது கணையத்தின் சுரப்பை நாய்க்குச் செலுத்தி நீரிழிவு கட்டுப்படுவதைக் கண்டுபிடித்தனர்.

இவர்கள் ஜேம்ஸ் காலிப் உதவியுடன் மாடுகளின் கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு, மேற்குறிப்பிட்ட அந்த நோயாளி இந்த நோயால் எப்படியும் இறந்து விடுவார் என்ற நிலையில்தான் இந்த முயற்சியை மேற்கொண்டு அவரது உயிரையும் காப்பாற்றினர்.

நீரிழிவுக்கு முதன்முறையாக ஒரு நம்பகமான சிகிச்சை உருவானது. பேண்ட்டிங் பிறந்த நவம்பர் 14-ஆம் தேதி உலக நீரிழிவு நோய் நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக