தமிழ் மலர் - 23.01.2021
ஒரு தகப்பனார். அவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை மட்டும் ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அந்தப் பிள்ளை சாப்பிட்ட மிச்சம் மீதியைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். சிதறிக் கிடப்பதை சீண்டி எடுப்பதற்கு வெள்ளிக் கரண்டிகள்.
மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்; இப்போது செல்வச் செழிப்பின் சீமத்தில் உட்கார்ந்து உச்சம் பார்க்கிறது.
மற்றொரு பிள்ளையை அந்தத் தகப்பனார் கண்டு கொள்வதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார்.
அந்தப் பிள்ளை தட்டுத் தடுமாறி தன் வாழ்க்கையைச் சொந்தமாக அமைத்துக் கொண்டது. ஆனாலும் இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடிப் போய் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.
அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால், அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா.
அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் பிள்ளை. மலேசிய இந்தியர்களில் ஒரு பிரிவாகப் பயணிக்கும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.
அந்த மலேசியத் தமிழர்களில் ஒரு சிலர்; குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். சொல்ல வேதனையாக உள்ளது. சொல்ல வேண்டிய கடப்பாடும் உள்ளது.
பொதுவாகவே குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் அல்ல. இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் சில சமூகத் தலைகளும்; காலம் காலமாக கோலோச்சிக் கோலம் போட்டு வந்தன.
போட்ட கோலத்திற்குள் செடிகள் நட்டு; கொடிகள் வளர்த்து; அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சி; உரம் தெளித்துச் செழிக்க வைத்து விட்டன. வேறு எப்படி சொல்லுவதாம்.
சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய ஒரு சிலர்; இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள்; இப்போதும் ஒரு சிலர் சொப்பனக் கனவுகளில் சுகமாய் வாழ்ந்தும் வருகிறார்கள்.
மன்னிக்கவும். இது சமுதாயம் சார்ந்த உண்மை. 2014-ஆம் ஆண்டில் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன.
அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல் படுகின்றன என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ’ஓப்ஸ் சந்தாஸ் 1’ எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. அப்போது குண்டர் கும்பல் ஈடுபாடு புள்ளி விவரங்கள் வெளியிடப் பட்டன.
மலேசிய மக்கள் தொகையில் மலாய்க்காரர்கள் 65 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 5 விழுக்காடு.
சீனர்கள் – 27 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 20 விழுக்காடு.
இந்தியர்கள் 7 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 72 விழுக்காடு.
சபா மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 1 விழுக்காடு.
சரவாக் மாநிலத்தவர் 1 விழுக்காடு; குண்டர் கும்பல் ஈடுபாடு – 2 விழுக்காடு.
மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7 விழுக்காடு தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72 விழுக்காடு. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.01.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக