30.01.2021
குமரன் மாரிமுத்து, கிள்ளான்
இந்த ஆண்டு (2021) தேசிய பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சித் திட்ட வரைவு ஒன்று உருவாகப்பட்டு உள்ளது. இந்தப் பயிற்சித் திட்ட வரைவானது மலேசியக் கல்வி அமைச்சால் எல்லா பள்ளிகளுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளதாக அறியப் படுகின்றது.
இணையம் வழி கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களின் முழுமையான பங்கெடுப்பு பல காரணங்களால் குறைபாடுகளுடன் செல்வதால், வாரம் ஒருமுறை மேற்கண்ட பயிற்சிகள் நகல் எடுக்கப்பட்டு ஒன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் மூலம் பகிர்ந்தளிக்கப் படுகிறது. நல்ல முயற்சிதான். வாழ்த்துவோம்.
அன்பான பெற்றோர்களே, குறிப்பாக தேசியப் பள்ளிகளுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பினால்தான் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று பிடிவாதமாக நாங்கள் எல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டதை எல்லாம் சற்றும் உங்கள் காதுகளில் வாங்கிக் கொள்ளாமல் முரண்டு பிடித்த பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள பயிற்சிகளைக் கூர்ந்து கவனியுங்கள்.
முதலாம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே உங்கள் குழந்தைகள் உங்களைவிட்டு, உங்களோடு இணைத்து இருக்கும் உறவுகளைவிட்டு, பந்தங்களைவிட்டு, உங்கள் பண்பாடு, பழக்க வழக்கங்களை விட்டு தூரப் போகத் தொடங்கி விட்டனர் என்பதை உணர முடிகின்றதா?
ஆம், உங்கள் குழந்தைகளுக்கு தேசிய மொழி என்ற அடையாளத்தில் முதலாம் ஆண்டு தொடங்கியே இசுலாமியக் கல்வி பிஞ்சு மனங்களில் ஆழமாகப் பதிக்கப்படுகின்றது; திணிக்கப் படுகின்றது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மதமாற்றத்தை நோக்கி ஒளிமயமாக பயணப்பட்டு விட்டது. இப்போதும் நீங்கள் இரு காதுகளோடு, இரு கண்களையும் மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறீர்களா?
ஜாவி எழுத்துகளை தேசிய வகை தமிழ், சீனப் பள்ளிகளில் வலுக்கட்டாயமாக அரசாங்க மத வெறியர்களால் திணிக்கப் பட்டுள்ளது. மொழி பாடத்தை மதம் சார்ந்த பாடமாக போதிக்கக் கூடாது என்று நாங்கள் பகிரங்கமாக எதிர்த்து வருகிறோம்.
எதிர்ப்புகள் பலமாக இருந்தும் அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களின் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை (எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்களின் நோக்கத்தில் உறுதியாக இருக்கின்றனர்).
மலாய் தொடக்கப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்திருக்கும் பெற்றோர்களே, தேசியப் பள்ளிகளில் நம்மவர்களின் எண்ணிக்கைக் குறைவு. யோசித்துப் பாருங்கள். உங்கள் குரல் அங்கே எடுபடுமா? உங்கள் குழந்தைகள் மலாய் மொழி என்ற வடிவில் ஆறாம் ஆண்டு முடிவதற்குள் கட்டாயம் இசுலாத்தைக் கற்றுத் தெளிந்துவிடுவர். பிறகு என்ன செய்யப்போகிறீர்கள்?
உங்கள் குழந்தைகளை உடனடியாக தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்றிக் கொண்டுவாருங்கள். தாயை விட்டுத் தறிகொட்டுச் சொன்ற பிள்ளை மீண்டும் தாயின் கால்களில் விழுந்தால் எந்தத் தாயும் எட்டி உதைப்பதில்லை; அணைக்கவே செய்வாள். சிந்தியுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக