25 ஜனவரி 2021

சோழர் காலத்து அந்தமான் தமிழர்கள்

தமிழ் மலர் - 24.01.2021

முன்பு காலத்தில் அந்தமான் நிகோபர் தீவுகள் முழுவதும் பற்பல பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்தார்கள். அந்தப் பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டுமரங்களின் மூலமாகக் கடல் கடந்து வந்து அங்கே குடியேறி விட்டார்கள்.

பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியா; பாபுவா நியூகினி; போர்னியோ போன்ற இடங்களில் இருந்து வந்து இருக்கலாம். மலாயாவில் இருந்து புலம்பெயர்ந்த பழங்குடி மக்களையும் அந்தக் கணக்கில் சேர்க்க வேண்டும்.

ஆனால் உலகின் ஒரு சில நாடுகளில் மண்ணின் மைந்தர்களை, அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது. மண்ணின் மைந்தர்கள் என்பது வேறு. அசல் மண்ணின் மைந்தர்கள் எனும் பழங்குடி மக்கள் வேறு. அசல் மண்ணின் மைந்தர்களின் பெயரைச் சொல்லி பேர் போடுபவர்களை அந்தக் கணக்கில் சேர்க்க இயலாது.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசியாவின் மீது படையெடுக்கும் போது அந்தமான் தீவுகளில் ஏறக்குறைய 200 தமிழர்களைத் தங்க வைத்துவிட்டு இந்தோனேசியாவுக்குப் போய் இருக்கிறார். படையெடுப்பிற்குப் பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது என்ன அவசரமோ; என்ன நெருக்கடியோ தெரியவில்லை.

அந்தமான் தீவுகளில் விட்டுச் சென்ற தமிழர்களை மறந்த வாக்கில் சென்று விட்டார்.ஏன் என்று கேட்க வேண்டாம். அந்த மகா சோழரைக் கேட்க வேண்டிய கேள்வி. ஆயிரத்தெட்டு அவசரங்களில் இதுவும் ஓர் அவசரமாக இருந்து இருக்கலாம். அதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கிறது.

அந்தமான் தீவுகளில் அப்படித் தனிமைப் படுத்தப்பட்ட தமிழர்களும் தனியாக வாழ்ந்து தனி ஒரு சமூகத்தையும் உருவாக்கி விட்டார்கள். அந்தத் தீவுகளில் ஏற்கனவே வாழ்ந்து வந்த ஷோம்பேன் பழங்குடி மக்களுடன் இணைந்து ஒரு புதிய கலப்பு தமிழர்ச் சமுதாயத்தையே உருவாக்கி விட்டார்கள்.

இன்றும் அந்தத் தமிழர்க் கலப்பு இன மக்கள் ஷோம்பேன் எனும் பழங்குடி இனத்தின் பார்வையில் வாழ்ந்து வருகிறார்கள். முகத்தைப் பார்த்தாலே தமிழர்களின் முகத் தோற்றங்கள் பளிச்சென தெரியும். வேறு விளக்கம் வேறு சான்றுகள் தேவை இல்லை.

(மலேசியம்)
24.01.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக