03 ஜனவரி 2021

உங்கள் விருப்பப்படி வாழுங்கள் - பி.கே. குமார்

26.12.2020

இங்கே நிரந்தரம் என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறும். அதனால் தொடர்ச்சியாக உங்களைத் திறமை  உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள். இனி வரும் காலங்கள் எளிதாக இருக்கப் போவது இல்லை.

எல்லோரிடமும் ஏதோ ஒரு குறை. ஏதோ ஓர் அவமானம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. தோல்வியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மட்டுமே முக்கியம்.

தோல்வி என்பது பிரச்சினையே இல்லை. இழப்பு, தோல்வி, வீழ்ச்சி பற்றிய மன உளைச்சலில் இருந்து வெளியேறுங்கள். இத்தாலியில் ஒரு வார்த்தை Memento Mori. ஆங்கிலத்தில் remember that you will die.

அதாவது "நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கத் தான் போகிறோம்”. இதை எப்போதும் நினைவில் கொள்வோம். அந்த ஒரு நாள் என்பது 50 வருடங்கள் கழித்து வரலாம். அல்லது அடுத்த ஐந்து மணி நேரத்திலும் வரலாம்.

Death is inevitable. இது தான் நம் அனைவருக்குமான முடிவு. இது தான் முடிவு என்று உள் வாங்கிய பின், எல்லா அலப்பறைகளும், ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அடங்கி விடும்.

நாளைக்கு காலையில் மரணம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சாந்த சொரூபியாக மாறி விடுவீர்கள் அல்லவா. அதைப் பழக்கப் படுத்தி கொள்ளுங்கள். மன அமைதி எல்லாவற்றையும் மாற்றும்.

உங்களை நீங்களே மூன்றாவது மனிதர் போல பார்க்கக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அபத்தங்கள் நமக்கே பிடிபட ஆரம்பிக்கும். தன்னை அறிதலை விட வேறெந்த கடவுளும் தேவை இல்லை.

முதலில் குடும்பமும் நட்பும் தான் முக்கியம். சண்டைகள், கோபங்கள், மனவருத்தங்கள், எரிச்சல்கள், பொறாமைகள் எல்லாக் குடும்பங்களிலும் உண்டு. Ignore the micro, focus on the Macro.

குடும்பத்திற்காக சுயநலமாக இருக்க வேண்டும் என்றால் தாராளமாக இருங்கள். ஆக பணம், புகழ், விருப்பங்கள், சண்டைகள், விவாதங்கள் எதுவுமே நிலைக்கப் போவதில்லை.

கஞ்சி ஊற்றப் போவது குடும்பமும், நண்பர்களும் தான். வானமே இடிந்து தலையில் விழுந்தாலும் குடும்பத்திற்கும், எது நடந்தாலும் துணை நிற்கும் நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். பத்து வருடங்கள் கழித்து இது எல்லாம் அப்பவே பண்ணி இருக்கணும் என்று ஆற்றாமையில் புலம்பாதீர்கள்.

நம்ம சமூகத்தின் மிகப் பெரிய சிக்கல், மேற்கத்திய மக்களைப் போல நாம் வெளிப்படையான ஆட்கள் கிடையாது. உள்ளுக்கு உள்ளேயே வைத்துக் கொண்டு வெதும்பும் சமூகத்தில் வாழ்கிறோம். பேசுங்கள். பாராட்டுங்கள். கொண்டாடுங்கள். வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்ளுங்கள்.

இப்படி தான் வாழ வேண்டும் என்கிற எல்லை எதுவும் கிடையாது. சந்தோஷங்கள், துக்கங்கள், பார்வைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் வெவ்வேறு. இது தான் சரி என்று இங்கே எதுவுமே இல்லை.

இது உங்களுடைய வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை, அதை உங்கள் விருப்பப்படி வாழுங்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. உங்களுடைய எல்லை எது என்பதை நீங்கள் தான் வரையறுக்க வேண்டும்.

அடுத்தவர்களுக்கு தொல்லை இல்லாமல் வாழும் எப்படிப் பட்ட வாழ்க்கையும் சரியே. அவர் இப்படி, இவர் அப்படி என்று எல்லாம் யோசிக்காதீர்கள். பணம் முக்கியம். சிக்கல்களைத் தீர்க்க பணம் அவசியம். அதே சமயத்தில் எல்லா சிக்கல்களையும் பணத்தால் மட்டுமே முழுமையாக தீர்க்க முடியாது.

2021-ஆம் ஆண்டு கடுமையான ஏற்றத் தாழ்வுகளை கொண்டதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். நினைவில் வையுங்கள். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக