17 ஜனவரி 2021

மலேசியம் புலனத்தில் தமிழ்... தமிழ்...

15.01.2021

பதிவு செய்தவர்: தேவி கடாரம்

இந்தப் புலனத்தி்ல் சேர்ந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளைப் பார்க்கிறேன். படிக்கிறேன். நிறைய புதுத் தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன்.

இங்கு பயணம் செய்வது பயனான செயல். உங்கள் கட்டுரைகளை நாளிதழ்களில் படித்து வியந்து இருக்கிறேன். ஓர் எழுத்தாளராக மட்டுமே நீங்கள் எனக்கு அறிமுகம்.

ஆனால்... இந்தப் புலனத்தின் வழி நீங்கள் எனக்கு ஓர் ஆசானாக, அப்பாவாக, சகோதரனாகத் தெரிகின்றீர்கள்.

புலனத்தில் பல பதிவுகள். பலவற்றைப் பார்த்தவுடன் கருத்து தெரிவிப்பேன். சிலவற்றைப் படித்து விட்டு பிறகு கருத்து தெரிவிப்பேன். அலுவல்கள் பல இருப்பதால் வலைத் தளத்தை நேரம் கிடைக்கும் பொழுது நிதானமாகவும் அமைதியாகவும் பார்த்துப் படிக்கிறேன்.

மேலும் நிறைய புதுச் சொற்களை இங்கு கற்றுக் கொண்டு வருகிறேன். பதிவுகளைப் பதிவு செய்யும் முகம் தெரியாத அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பயணம் செய்வோம்.

கென்னடி ஆறுமுகம்: மட்டற்ற மிக்க மகிழ்ச்சி சகோதரி. அனைவருடைய பதிவுகளுக்கும் உடனே பின்னூட்டம் தரும் நண்பர்களில் தாங்களும் ஒருவர். மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து பயணிப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: உண்மைதான்... பெரும்பாலான பதிவுகளுக்கு பின்னூட்டம் வழங்குவதில் முதன்மை வகிக்கிறார்... இவரை பார்த்து மற்றவர்களும் சோம்பலை முறிக்கலாம்.... கொசு மருந்தை முகத்தில் அடித்தாலும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்... விடுங்கள்...

ரஞ்சன் கங்கார் பூலாய்: புலனத்தில் தங்களின் ஈடுபாட்டைக் கண்டு வியக்கிறேன். தொடருங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:
மனதை நெகிழச் செய்த பதிவு. முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மலேசியம் ஒரு புலனம் அல்ல. அது ஒரு குடும்பம். ஒரு குடும்பமாகப் பழகுகிறோம். நமக்குத் தெரிந்ததை; பார்த்ததை; படித்ததை; கேட்டதை மற்ற அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மகிழ்ச்சி அடைகின்றோம். அந்த மகிழ்ச்சியில் தான் பெரிய இன்பமே தொற்றி நிற்கின்றது.

இந்தப் புலனத்தில் சிறியவர்கள் பெரியவர்கள் இளைஞர்கள் என பலர் பயணிக்கின்றனர். பெரியவர்கள் என்று சொல்லும் போது வயதில் மூத்தவர்கள். பெரும்பாலும் மூத்தவர்கள் எடுக்கும் முடிவு அனுபவம் சார்ந்ததாக இருக்கும். அவர்களின் பதிவுகளில் முதிர்ச்சியும் தென்படும்.

சில புலனங்களில் கண்டதைப் போனதை அள்ளிக் கொட்டுவார்கள். நிர்வாகிகளின் கண்டிப்பு இல்லாமல் போவதே அதற்கு காரணம். இங்கே அப்படி இல்லை. கண்டிப்பும் இருக்கும். ஏச்சும் பேச்சும் இருக்கும். எனக்கு வயது 70-க்கும் மேலாகிறது. அதனால் என்னை ஒரு தகப்பனாகவே பலரும் பார்க்கிறார்கள்.

அந்த வகையில் எனக்கு இந்தப் புலனத்தின் நிறையவே மகன்கள்; மகள்கள். அவர்களில் ஒருவர் தான் தாங்கள். பல ஆண்டுகள் பேஸ்புக் ஊடகத்தில் பயணித்து அண்மையில் இந்த வாட்ஸ் அப் புலனத்திற்கு வந்து உள்ளீர்கள். தொடர்ந்து பயணியுங்கள்.

இந்தப் புலனத்தில் நிறைய கல்விமான்கள் உள்ளனர். மேலும் சேர்க்க உள்ளோம். தவிர சின்ன வயதில் கெட்டிக்காரத் தனமாய் ஓர் இளைஞர் நம் புலனத்தில் வலம் வருகின்றார். கென்னடி ஆறுமுகம். அழகிய தகவல் களஞ்சியம். நன்றி சொல்கிறோம்.

தொடர்ந்து பயணிப்போம். மேலும் ஒரு தகவல். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 12 - 14 மணி நேரம் வேலை செய்கிறேன். அதைப் பற்றிய ஒரு சின்ன பதிவு உள்ளது. எத்தனை மணிக்கு எழுவது; எத்தனை மணிக்கு மீண்டும் படுக்கைக்குச் செல்வது; அது வரையில் என்னென்ன வேலைகள். அதைப் பற்றிய பதிவு. பின்னர் பதிவு செய்கிறேன். நன்றிம்மா தேவி.

தேவி கடாரம்: நன்றி ஐயா... இந்தப் புலனத்தில் என்னைக் கவர்ந்தது... தமிழ். புலனம் முழுக்கத் தமிழ்... தமிழ்... தமிழ்... அனைத்தும் தமிழ்... எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்.

வேறு எந்தப் புலனத்திலும் இல்லாததை இந்தப் புலனத்தில் பார்க்கிறேன். பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .உங்களின் அடுத்த பதிவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்து இருக்கிறோம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மிக்க மகிழ்ச்சி. தமிழ் இனிக்கும். அந்த இனிமையைத் தங்களின் பதிவுகளில் காண்கிறோம். இனிமைகள் இதயங்களிலும் தொடரட்டும். நன்றிம்மா...


 

1 கருத்து: